ஸ்தல வழிபாடு
நவராத்திரி ஸ்பெஷல்!
தொடர்கள்
Published:Updated:

திருமகளே வருக...

திருமகளே வருக...

திருமகளே வருக...

ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
ஸரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்

ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருஸ்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப ஸோபாம் மூர்திமதீம் ஸதீம்

ரத்நபூஷண பூஷாட்யாம் ஸோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் ஸஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே ஸுபாம்

##~##
பொருள்:
ஆயிரம் இதழ்களுடன் கூடிய தாமரையின் நடுவில் வசிப்பவள்; சிறந்தவள்; சரத் காலத்திலுள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான ஒளியை உடையவள்; தனது ஒளியால் பிரகாசிப்பவள்; ஆனந்தமாகக் காட்சி அளிப்பவள்; பக்தர்களின் மனத்தைக் கவர்பவள்; உருக்கி வார்த்த தங்கத்தின் ஜொலி ஜொலிப்பே உருவெடுத்து வந்தது போல் திகழ்பவள்; பதிவிரதை; ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவள்; தங்கப் பட்டாடை துலங்குபவள்; மந்தஹாஸத்தால் பிரஸன்ன முகம் கொண்டவள்; சாஸ்வதமாய் அமைந்த யௌவனத்தை உடையவள்; பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களை அளிப்பவள்; மங்கலத்தை அருள்பவளாகிய ஸ்ரீமகா லட்சுமியை வணங்குகிறேன்.

ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம் 42-வது அத்தியாயத்தில் உள்ள மகாலட்சுமியின் இந்த தியான ஸ்தோத்திரத்தைச் சொல்லி  வீட்டில் வழிபட அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

திருமகளே வருக...

வங்கதேசத்தில்... திருமகளின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி தினங்களில் தங்கள் வீட்டுக் கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்றும், ஆந்தை குரல் எழுப்பினால்... அது, தங்கள் வீட்டு சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்துவிட்டதாக அர்த்தம் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

உப்பிலியப்பன்கோயிலில், பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவார். ஆனால், நவராத்திரியில் அம்பு போடும் வைபவத்தின்போது, ஒருமணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்!

திருமகளே வருக...

சிவாலயங்களில் உட்பிராகாரத்தில் வடமேற்கில் திருமாளிகை பத்ததியில்தான், மகாலட்சுமிக்கு சந்நிதி அமைந்திருக்கும். ஆனால், திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் மகாலட்சுமிக்குத் தனி சிற்றாலயமே அமைந்துள்ளது. மூன்று கலசங்கள் கொண்ட சாலஹார விமானத்துடன் அமைந்த இந்தச் சந்நிதியில், பெரிய திருவுருவில் தரிசனம் தருகிறாள் மகாலட்சுமி. அருகிலேயே சரஸ்வதியும் உண்டு. மேலும், இந்த சிற்றாலயத்தின் முன்மண்டபம் சற்று நீண்டு, துர்கை மண்டபத்துடன் இணைந்துள்ளது. ஆக, முப்பெருந்தேவியரையும் ஒருசேர தரிசிக்கலாம்.

மாங்கல்யம், திருவாகிய சௌபாக்கிய லட்சுமியின் வடிவமாகும். எனவே, அதை திருமாங்கல்யம் என்பர். தாலியில் மகாலட்சுமியின் உருவம் அமைந்த பொட்டையும் சேர்த்துக்கொள்வது உண்டு. இதற்கு மகாலட்சுமி பொட்டு என்று பெயர். இனிப்பும் திருமகளுக்கு உகந்தது. திருமணம் நடைபெறும் இடம், யாகசாலைகள் போன்றவை திருமகளின் வசிப்பிடம். ஆதலால், அங்கு வரும் அன்பர்களுக்கு இனிப்பு வழங்குவதை வழக்கமாக்கி வைத்தார்கள் பெரியோர்கள். திருமகளைப் போலவே கடலிலிருந்து பிறந்த உப்பும் லட்சுமி கடாட்சம் நிறைந்தது. அதேபோல்... பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் திருமகளின் அடையாளங்கள் என்கின்றன ஞான நூல்கள். மேலும் வில்வம், பசுக்கள், யானைகள் ஆகியனவும் திருமகளின் அருள் நிறைந்ததாகப் போற்றப்படுகின்றன!

- ஜெயலெட்சுமி கோபாலன், சென்னை-64
அ.ராஜேஸ்வரி, நெல்லை