Published:Updated:

நாளை நடராஜருக்கு மாசி மகா அபிஷேகம்... ஆடும் ஈசனின் ஒவ்வொரு முத்திரையும் உணர்த்தும் சேதி என்ன? #VikatanPhotoStory

நாளை நடராஜருக்கு மாசி மகா அபிஷேகம்... ஆடும் ஈசனின் ஒவ்வொரு முத்திரையும் உணர்த்தும் சேதி என்ன? #VikatanPhotoStory
நாளை நடராஜருக்கு மாசி மகா அபிஷேகம்... ஆடும் ஈசனின் ஒவ்வொரு முத்திரையும் உணர்த்தும் சேதி என்ன? #VikatanPhotoStory

வனின்றி அணுவும் அசையாது' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடல் கலையின் நாயகரான ஈசனின் அசைவில்தான் பிரபஞ்சமே இயங்குகிறது. அபிஷேகப் பிரியரான நடராஜப் பெருமானுக்கு வருடந்தோறும் ஆறு முறை திருமஞ்சனம் நடைபெறுகிறது.

நாளை பிப்ரவரி 28-ம் தேதி அன்று எல்லா சிவாலயங்களிலும் நடராஜப் பெருமானுக்கு மாசி மகா அபிஷேகம் நடக்கும். அதாவது, மாசி மாத பூர்வபட்ச வளர்பிறை சதுர்த்தசி திதி அன்று காலையில் இந்த மகா அபிஷேகம் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு ஆறுமுறை தேவர்கள் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வதாக ஐதீகம். மார்கழி திருவாதிரை உஷத் காலம், மாசி வளர்பிறை சதுர்த்தசி காலை, சித்திரைத் திருவோணத்தில் உச்சிக் காலம், ஆனி உத்திரத்தில் சந்தியா காலம், ஆவணி சதுர்த்தசியில் இரவு வேளை. புரட்டாசி சதுர்த்தசியில் அர்த்தஜாம வேளையிலும் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்வதாக ஐதீகம். 

பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்படும்போது,  ஆனந்தக் கூத்தனின் அற்புதத் திருவடிகளை தரிசிப்பது எல்லையில்லாத இன்பத்தை நமக்கு அருளும்.

ஆடும் கலையால் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐவகைத் தொழில்களையும் செய்யும் கூத்தபிரான் 108 நடனங்கள் புரிந்திருப்பதாகவும், அவற்றுள் 48 நடனங்களை அவர் தனியே ஆடியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எல்லா சிவாலயங்களிலும் நடராஜர் சந்நிதி இருந்தாலும், பஞ்ச சபைகளில் நடராஜரை தரிசிப்பது பெரும் புண்ணியத்தைத் தரும்.

`பராசக்தி, பரந்தாமன் என தேவாதிதேவர்களின் விருப்பத்துக்கு ஆடத்தொடங்கிய ஈசன், பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர் விருப்பத்துக்காகவும் இந்தப் பூவுலகில் வந்து ஆடத்தொடங்கினார்’ என்கிறது தில்லை புராணம். காரைக்கால் அம்மையாருக்காக திருவாலங்காட்டில் ஆடினார்.   

நாட்டிய சாஸ்திரத்தின் நான்காவது அத்தியாயமான தாண்டவ லட்சணம், `சிவபெருமானே தாண்டவங்களை ஆடிக் காண்பித்து ரிஷிகளுக்குக் கற்பித்தார்’ என்று கூறுகிறது. `உலக உயிர்களை பந்தங்களிலிருந்து விடுவிப்பதற்காக ஆடும் ஈசனின் ஒவ்வொரு முத்திரையும் பெரும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது’ என்கின்றன ஆன்மிக நூல்கள்.

ஈசன் ஆடிய சப்த தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களைக் குறிக்கின்றன. ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜசம்ஹாரத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற இந்த ஏழு முக்கிய நாட்டியங்களும், `ஆதார நாட்டியங்கள்’ எனப்படுகின்றன. 

திருமந்திரம், கலித்தொகை, சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி, காரைக்கால் அம்மையாரின் பாடல்கள், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்கள் அனைத்தும் ஆடல் பெருமானின் அற்புத நடனத்தைப் பெரிதும் வியந்து போற்றுகின்றன. 

அறிவியல், ஆன்மிகம், கலை ஆகிய மூன்றும் இணைந்த சிருஷ்டியின் தத்துவமே ஈசனின் நாட்டியம். அசைவற்றுக் கிடந்த இந்தப் பிரபஞ்சம் ஈசனின் அசைவால்தான் சலனப்பட்டு சிருஷ்டிகள் தோன்றின என்பது ஆன்மிக நம்பிக்கை.

பிரபஞ்சத்தில் எல்லா இடங்களிலும் ஓர் அசைவும், உயிர்ப்பும் உள்ளன. இதை விளக்கும் அற்புதத் தத்துவமே சிவதாண்டவம். சகலத்துக்கும் காரணமான ஈசனின் நாட்டியம் இடைவிடாமல் நடக்கும் பிரபஞ்சத்தின் இயக்கத்துக்கு ஒரு குறியீடு. 

ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்போது, அவரை தரிசித்து வழிபடுபவர்களுக்கு, அவரின் திருவருள் பூரணமாகக் கிடைக்கும்; அருவமாக அங்கே கூடியிருக்கும் தேவர்களும் தரிசிப்பவர்களை ஆசீர்வதிப்பார்கள்.

'எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே...' என்கிறார் திருமூலர். 


சிவபெருமானின் திருநடனத்தை தரிசித்தால், எப்போதும் எல்லா இடத்திலும் நமக்கு சிவனருள் துணை நிற்கும் என்பது உறுதி.