Published:Updated:

``இளைஞர்கள், குழந்தைகளிடம் பன்னிரு திருமுறைகள் போய்ச் சேர வேண்டும்!’’ - கார்த்திக் ராஜாவின் விருப்பம்!

``இளைஞர்கள், குழந்தைகளிடம் பன்னிரு திருமுறைகள் போய்ச் சேர வேண்டும்!’’ - கார்த்திக் ராஜாவின் விருப்பம்!
``இளைஞர்கள், குழந்தைகளிடம் பன்னிரு திருமுறைகள் போய்ச் சேர வேண்டும்!’’ - கார்த்திக் ராஜாவின் விருப்பம்!

தேவாரம், திருவாசகம் தொடங்கி, பெரியபுராணம் வரை பன்னிரு திருமுறைகள்தான் சைவர்களுக்கு வேதங்கள். அதன் காரணமாகவே பன்னிரு திருமுறைகளும், 'தமிழ் வேதம்' என்று போற்றப்படுகின்றன. சமயக் குரவர்கள் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் திருமூலர் எனப் பலராலும்  பாடப்பட்ட இந்தத் தெய்விகப் பாடல்கள் இன்றளவும் ஆன்மிக அன்பர்களால் மட்டுமே பாடப்பட்டும் கொண்டாடப்பட்டும் வருகின்றன.


பன்னிரு திருமுறைகளையும் உலகம் முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்கவும், அவற்றின் பெருமைகளை உலகத்தவர் உணர்ந்துகொள்வதற்குமான முன்னோட்டமாக `பன்னிரு திருமுறை திருவிழா’ என்ற நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றுவருகிறது. பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி வரும் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள், பாடகர்கள், ஓதுவார்கள், நடன மேதைகள் எனப் பலரும் கூடி பன்னிரு திருமுறைகளின் பெருமைகளை விளக்கமாக எடுத்துக் கூறிவருகிறார்கள்.  இந்தத் திருப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார், இளையராஜாவின் புதல்வரான  இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. 

இந்த விழாவின் நோக்கம் மற்றும் அவசியம் குறித்து அவரிடம் கேட்டோம். உணர்வுபூர்வமாகப் பேசத் தொடங்கினார்.
"பன்னிரு திருமுறைகளை நாம் வெறும் புத்தகங்களாக மட்டுமே பார்க்கக் கூடாது. அவற்றில் பக்தி, இசை, மருத்துவம், ஆரோக்கியம், வாழ்வியல் முறைகள், அறிவியல், புவியியல்... என எல்லாமே இருக்கின்றன. இவை அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பன்னிரு திருமுறைகளும் உலக மக்கள் அனைவரின் மனங்களிலும் உணர்வுபூர்வமாகப் பதிய வேண்டும். பயன் பெறவும் வேண்டும்.

மேலை நாட்டு நாகரிகத்தைக் கடைப்பிடித்துக்கொண்டு அந்த நாட்டின் கதைகளைக் கேட்கும் நாம், நம்முடைய புராணங்களை ஏளனம் செய்கிறோம். 'ஒரு குழந்தை அழுதது; சக்தி வந்து பால் கொடுத்தாள். குழந்தையின் தகப்பன் வந்து, 'எச்சில் பாலை எங்கே குடித்தாய்?' என்று அதட்டுகிறார். பிள்ளை, 'சிவனுடன் சக்தியே வந்து பால் கொடுத்தாள்' என்று பாடுகிறது' என்று நடந்ததைச் சொன்னால் சிரிக்கிறோம். ஆனால், நம்பவே முடியாத 'ஸ்பைடர் மேன்', 'சூப்பர் மேன்' கதைகளை நம்புகிறோம். எப்படி முரண்களோடு இருக்கிறோம் பாருங்கள். 


ஒருவரது மனம் அமைதிநிலையை அடைந்து, அந்த அமைதியை மற்றவர்களுக்கும் அவர் கொடுக்க வேண்டும் என்பதுதான் ஆன்மிகம். அந்த அமைதியை இந்தத் திருமுறைகள் ஒருவருக்கு நிச்சயம் கொடுக்கும். எனக்கு இந்தத் திருமுறைகள் பற்றி  அதிகம் தெரியாது. இனிமேல்தான் படிக்க வேண்டும். அவற்றைப் படிக்கவும் கற்றுக்கொள்ளவும்தான் இங்கு வந்திருக்கிறேன்'' என்றவரிடம், ''விழாவில் நீங்கள் என்ன பங்கு வகுக்கிறீர்கள்?'' என்று கேட்டோம்.

''அப்படி என் பங்கு என்று எதுவும் இல்லை. இறைவனின் விருப்பத்துடன் நடக்கும் இனிய விழா. இங்கு யாருமே எதையுமே நடத்தவில்லை. ஆண்டவனின் திருவுள்ளம் இல்லாவிட்டால், இந்த விழா, பன்னிரு திருமுறைகள் கண்டெடுக்கப்பட்ட இந்த சிதம்பரம் தலத்தில் நடக்குமா? இளைஞர்கள், குழந்தைகளிடம் இந்தப் பாடல்களைக் கொண்டு போய்ச்  சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அது  நடந்துவருகிறது. எல்லோருமே ஆவலாகக் கேட்கிறார்கள். 

பாட்டுப் பாடினால் ஜுரம் போகும், வியாதிகள் தீரும் என்பதை இங்கு வந்துதான் தெரிந்துகொண்டேன். ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த அற்புதமான பொக்கிஷத்தை மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு எங்கு போகிறதோ அங்கு போகிறோம். மற்றபடி எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இந்த விழா நடக்கிறது. எல்லாம் கடவுள் செயல்'' என்கிறார் தன்னடக்கத்துடன்! 

''உங்கள் தந்தையின் அடியொற்றி நீங்களும் ஆன்மிகத்துக்குள் வந்துவிட்டீர்களா?'' நாம் இப்படிக் கேட்டதுமே, மென்மையாகச் சிரித்தவர், ''அவரின் உயரத்தை நான் அடைய முடியாது. அவர் எல்லாத் தரப்பு மக்களுக்கும் இசையைக் கொடுத்து அமைதியை வழங்கியவர். நானும் ஏதோ என்னால் முடிந்த அளவுக்கு இசையில் செய்திருக்கிறேன். எனக்கான எல்லா வளங்களையும் கடவுள் வழங்கியிருக்கிறார். இனிமேல் நான் அடைவதற்கு ஒன்றுமில்லை. எதற்கும் நான் ஆசைப்படவில்லை. ஆசைப்பட்டால் அமைதி போய்விடும். இந்த அமைதியைக் கடவுள்தான் கொடுத்தார். அதற்கு குருவாக என் தந்தை இருந்தார். என் அப்பா இசையுடன் அமைதியையும் சேர்த்தே எனக்குத் தந்திருக்கிறார்.

ஆன்மிகம் குறித்து கார்த்திக் ராஜாவின் விடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...


சினிமா இசையாலேயே நம்மை அமைதிப்படுத்த முடியுமென்றால், முறையாகப் பாடப்படும் இந்த தெய்விகப் பாடல்களால் நிச்சயம் நமக்கு நன்மைகள் நடக்கும் என்று நம்புகிறேன். எல்லா மக்களுமே விரக்தியின் விளிம்பிலிருக்கிறார்கள். குறிப்பாக, ஏழை மக்கள் அன்றாடப் பொழுதைக் கழிக்கவே திண்டாடுகிறார்கள். யாருமே சந்தோஷமாக இல்லை. உண்மையில் மக்களை அமைதியான, தெளிவான சிந்தனைதான் காப்பாற்ற முடியும். அதற்கு நல்ல இசையாக இந்தத் தெய்விகத் திருமுறைகள் உதவும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 'உலகத்தை இணைக்கிறோம்' என நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சொல்லிவந்தன. இன்று அவை ஒவ்வொரு மனிதரையும் பிரித்து வைத்திருப்பதுதான் உண்மை. யாருமே, யாரிடமும் நம்பிக்கையோடு இல்லை. இந்த நிலை மாற ஆன்மிகமே உதவும் என்பது என் நம்பிக்கை. மனிதர்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் இதுபோன்ற ஆன்மிக விஷயங்களைச் செய்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.'' 

நாம் மறுபடியும் ''இந்த விழாவில் உங்கள் பங்கு என்ன?'' என்று கேட்டோம். ''தயவு செய்து என் பங்கு என்ன என்று கேட்க வேண்டாம். என்னை முன்னிறுத்தவும் வேண்டாம். காரணம், இந்தத் திருவிழா பன்னிரு திருமுறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நடத்தப்படும் விழா. உங்கள் கட்டுரையின் மூலம் இளைஞர்கள் பன்னிரு திருமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு, கற்றுக்கொள்ளவும் முன்வந்தால், அதுவே இந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்.''

இசைக்கு நெருக்கமான அமைதிக்கும் அடக்கத்துக்கும் அடையாளமாக இருக்கிறார் கார்த்திக் ராஜா!