Election bannerElection banner
Published:Updated:

ஸ்ரீகிருஷ்ணரும் ராதையும் மகிழ்ந்துகொண்டாடிய ஹோலிப் பண்டிகை! #HoliFestival #VikatanPhotoStory

ஹோலி
ஹோலி

ஸ்ரீகிருஷ்ணரும் ராதையும் மகிழ்ந்துகொண்டாடிய ஹோலிப் பண்டிகை! #HoliFestival #VikatanPhotoStory

வ்வொரு வண்ணமும் ஒவ்வோர் எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், வண்ணங்களின் கலவை மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கிறது. இயற்கையின் அழகை வியந்து கொண்டாடும் பண்டிகையே ஹோலிப் பண்டிகை. 

வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு 'வசந்த விழா'. ஆதியிலிருந்தே வட நாட்டு மக்கள் பனிக்காலம் முடிந்து வேனிற்காலம் தோன்றும் காலத்தை ஹோலியாக மகிழ்ச்சியோடு கொண்டாடிவருகிறார்கள்.

மாசி மாத பௌர்ணமி தினத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. வட நாட்டில், முக்கியமாக குஜராத்தில் ஐந்து நாள் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. உறவுகளைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சி விழாவாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.

வண்ணங்களைப் பொடியாகவும், குழாய்களின் வழியே பீய்ச்சி அடித்தும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். வண்ணங்கள் கரைக்கப்பட்ட நீரைக் கொட்டியும் இந்த விழாவில் அமர்க்களப்படுத்துவார்கள். வண்ண பலூன்களைப் பறக்கவிட்டும், மலர்களைத் தூவியும் கொண்டாடுவார்கள்.

உறவுகள், நண்பர்கள் தாண்டி, அக்கம் பக்கத்தினர், உடன் பணியாற்றுவோர் என எல்லோர் மீதும் எந்தவித பேதமுமின்றி வண்ணங்களைத் தெளித்து இந்த நாளைக் கொண்டாடுவார்கள். 

சூரியனின் கதிர்களை இளவேனிற் காலத்தில் வரவேற்கும் பொருட்டு வானவில்லின் நிறங்களான ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு வண்ணங்கள் அதிகம் இந்தக் கொண்டாட்டத்தில் பயன்படுகின்றன.

வண்ணங்களைத் தூவி, 'ஹோலி... ஹோலி...' என்று மகிழ்ச்சியாகக் கூவுவதும், வானை நோக்கி வண்ணங்களைத் தூவி தேவர்களை மகிழ்விப்பதும் இந்த நாளில் வழக்கம். தேங்காயுடன், இனிப்புகளை ஹோமத்திலிட்டு கடவுளை வணங்குவதும் இந்த நாளில் வழக்கம். 

எவருமே கோபம் கொள்ளாமல் மிக மகிழ்ச்சியோடு தங்களது ஆடைகளில், உடம்பில் வண்ணங்களைப் பூசிக்கொள்வது என்பது சகிப்புத் தன்மையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. சந்தோஷத்தைத் தருவதுதான் பண்டிகைகளின் நோக்கம் என்றால், ஹோலி விழா சந்தோஷத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

ஹோலிப் பண்டிகை வசந்தத்தை வரவேற்கும் கலாசாரப் பண்டிகை மட்டுமல்ல. இதில் புராணக் கதை ஒன்றும் உள்ளது. நாராயணனின் தீவிர பக்தரான பிரகலாதனைக் கொல்ல ஹிரண்யனின் தங்கை ஹோலிகா முயற்சி செய்தாள். அவளை கட்டியணைப்பவர் யாராக இருந்தாலும் தீயில் அழிந்துபோவார்கள் என்ற நிலையில் ஹோலிகா, குழந்தை பிரகலாதனை கட்டியணைத்துப் பொசுக்க எண்ணினாள்.

நாராயணனின் கிருபை பெற்ற தெய்வக் குழந்தையைத் தழுவியதும் அந்த ஹோலிகாவே எரிந்து போனாள். `அசுர குணம் படைத்த ஹோலிகா மறைந்த நாளே மக்களால் ஹோலிப் பண்டிகையாக உருவானது’ என்று புராணங்கள் கூறுகின்றன.

ஹோலிப் பண்டிகை நாளில் ஹோலிகாவை துணி மற்றும் காகிதங்களால் ஒரு பொம்மையாக உருவாக்கி, விழா முடியும் நேரத்தில் அதைத் தீயிட்டு எரிப்பது வட நாட்டவர் வழக்கம். 'தீமைகள் அழிந்து போகட்டும் இந்த நாளில்' என்று அப்போது மக்கள் கூடி, குரல் எழுப்புவார்கள்.

கிருஷ்ண அவதாரத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும், ராதையும் மகிழ்ந்து கொண்டாடிய திருவிழா ஹோலி. ஆயர்பாடி மக்களும், ஆவினங்களும் கூடிக் களித்த சந்தோஷத் திருவிழா ஹோலி. 

சிவந்த நிறம் கொண்ட ராதையை கண்ணன் நீல நிறம் கொண்ட வண்ணத்தைத் தூவி தன்னைப்போலவே நிறமாக்கி மகிழ்ந்தாராம். இதனால், சந்தோஷ ஊடல் கொண்ட ராதை, கண்ணனை மலர்ச்சென்டால் அடித்தாராம். இந்த நிகழ்வை இன்றும் வடநாட்டில் பல பகுதிகளில் தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் துணியால் அடித்துக்கொண்டு மகிழ்வார்கள்.

மன்மதனை தனது நெற்றிக்கண்ணால் அழித்தார் ஈசன். அம்பிகையும், மன்மதனின் மனையாளாகிய ரதியும் வேண்டிக்கேட்டுக் கொண்டதற்கிணங்க ஈசன் மீண்டும் மன்மதனை, ரதியைத் தவிர எவர் கண்ணுக்கும் தெரியாத வண்ணம் உயிர்ப்பித்தார். `மன்மதன் உயிர் பெற்று மீண்ட நாளே ஹோலி’ என்றும் கூறப்படுகிறது.

மக்களிடையே சகிப்புத்தன்மை ஓங்கவும், சகோதரத்துவம் செழிக்கவும் உதவும் பண்டிகையே ஹோலி. தெரிந்தவர், தெரியாதவர் என்ற பேதம்கூட இல்லாமல் எல்லோருமே கூடிக் களிக்கும் அற்புத விழா ஹோலி. 

உறவுகளைக் கொண்டாடும் இந்த ஹோலிப் பண்டிகை மகிழ்ச்சியின் அற்புதமான வெளிப்பாடு. குதூகலமாகக் கொண்டாடுவதுதான் பண்டிகைகளின் நோக்கம். பேதங்களை மறந்து எல்லோரும் கூடிக் கொண்டாடும் இந்த ஹோலித் திருநாளில் உங்கள் வாழ்க்கையும் வசந்தமாகட்டும். இன்பங்கள் யாவும் சொந்தமாகட்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு