Published:Updated:

`பெண்களின் சபரிமலை’ ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் களைகட்டிய பொங்கல் விழா! #VikatanPhotoStory

`பெண்களின் சபரிமலை’ ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் களைகட்டிய பொங்கல் விழா! #VikatanPhotoStory
`பெண்களின் சபரிமலை’ ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் களைகட்டிய பொங்கல் விழா! #VikatanPhotoStory

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில், 'பெண்களின் சபரி்மலை' என்றே அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பத்து நாள்கள் நடைபெறும் 'பொங்காலை'  எனப்படும் பொங்கல் திருவிழா உலகப்புகழ் பெற்றது. பூரம் நட்சத்திரத்தில் நடக்கும் இந்தப் பொங்கல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள். 

கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில். பொங்கல் வைக்கும் நாளுக்கு முந்தைய நாளே பெண்கள் கூடி வழிபாடுசெய்வார்கள். மறுநாள் காலையில் குளித்து முடித்து பொங்கல் வைப்பார்கள். 


பல லட்சம் பெண்கள் கூடி 10 கிலோமீட்டர் சுற்றளவு வரை கூடியிருந்து பொங்கலிடுவார்கள். இது ஓர் உலக அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. 


1997-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் சேர்ந்தாற்போல் பொங்கலிட்டதற்காக இந்த கோயிலுக்கு கின்னஸ் ரிக்கார்டு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 35 லட்சம் பெண்கள் கூடியதாக சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் பெண்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் செல்கிறது. 


'பொங்காலை' விழாவின் 9-ம் நாளில் கோயில் தந்திரி கருவறையில் இருந்து தீபம் எடுத்து வந்து மேல்சாந்தியிடம் கொடுப்பார். அவர் கோயிலுக்குள் வைக்கப்பட்டிருக்கும் மூலப்பொங்கல் அடுப்பில் தீ மூட்டுவார். அப்போது மங்கள வாத்தியங்கள் இசைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து கோயில் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பொங்கல் அடுப்புகளில் தீ மூட்டப்பட்டு பொங்கல் விழா தொடங்கும். இந்தச் சமயத்தில் கோயில் மணி அடிக்கும் சத்தம் கேட்டு மற்ற எல்லோரும் பொங்கல்வைக்கத் தொடங்குவார்கள்.


இந்த ஆண்டு (மார்ச் 2-ம்தேதி) பொங்கல் திருவிழாவில் லட்சக்கணக்கான பெண்கள் கூடி பொங்கல் வைத்தார்கள். திரையுலக நடிகை சிற்பி உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் கூடி இங்கு பொங்கல் வைத்தார்கள்.


பொங்கலும், வத்த மர இலைகளைக் கொண்டு செய்யப்படும் இலை அப்பம், புட்டு ஆகியவற்றை சர்க்கரைப் பொங்கலுடன் வைத்து நைவேத்தியம் செய்வார்கள். 


லட்சக்கணக்கான அடுப்புகள் ஒரே சமயத்தில் பற்றவைக்கப்பட்டு எரிந்ததால், அந்தப் பகுதி ஒரே புகை மண்டலமாகக் காணப்பட்டது. பொங்கல் பொங்கியதும், ஆலயப் புரோகிதர்கள் அந்தப் பொங்கலின் மீது புனித நீர் தெளித்து ஆசீர்வதிப்பார்கள். அம்மனே அந்தப் பொங்கல் படையலை ஏற்றுக்கொண்டாள் என்பது ஐதீகம்.


அம்மனுக்குப் பொங்கலிட்டுப் படைத்த சர்க்கரைப் பொங்கலை பெண்கள் எடுத்துச் சென்று அக்கம்பக்கத்தில் உள்ள தங்களின் நண்பர்களான கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்குவார்கள். 
அப்போது ஹெலிகாப்டரில் இருந்து கீழே பெண்கள் மீது பூமாரியாகப் பொழிவார்கள். இந்த நிகழ்வுக்குப் பிறகே பொங்கல் விழா நிறைவு பெறும். 


'குத்தியோட்டம் விரதம்' என்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் பங்கெடுத்துச் சிறப்பிப்பார்கள். அப்போது இந்தக் கோயிலிலேயே தங்கியிருந்து அம்மனின் புகழைப் பாடுவார்கள். 


பொங்கல் விழாவின் இறுதிநாளில் கோயில் யானை மீது வைக்கப்படும் அம்மன் திருவுருவம்  'மனசெளட்' சாஸ்தா கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த உலாவில் நாதஸ்வரம், செண்டை, நையாண்டி மேளம் உள்ளிட்ட வாத்தியக் கருவிகள் வாசிக்கப்படும். 


திருவனந்தபுரம் கிள்ளியாற்றின்கரையில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயிலில் இருக்கும் தேவி பகவதி, கண்ணகியின் அம்சம் என்றே போற்றப்படுகிறாள். இவளை வணங்கும் பெண்கள் சர்வ மங்களங்களையும் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்பது நம்பிக்கை.


இந்த ஆற்றுக்கால் பகவதியம்மன் கத்தி, கேடயம், சூலம், அட்சய பாத்திரத்தை ஏந்திய நிலையில் அரக்கி ஒருத்தியை அடக்கி, அவள் மேல் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். தீய குணங்களை அடக்க இவளைச் சரணடைய வேண்டும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். 


சிலப்பதிகாரம் இயற்றப்பட்ட காலத்திலேயே கட்டப்பட்ட ஆலயம் இதுவென்று கூறப்படுகிறது. மங்களங்களை அருளும் இந்த மங்கள நாயகியைத் தொழுது பொங்கலிட்டு வருபவர்களுக்கு எந்தக் குறைவும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.