Published:Updated:

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி? #KaradaiyanNonbu

மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி? #KaradaiyanNonbu
மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பது எப்படி? #KaradaiyanNonbu

ந்திர நாட்டின் அரசர் அஸ்வபதியின் மகள் சாவித்திரி. ஆட்சியை இழந்து காட்டில் வசித்த சத்தியவானை விரும்பி, அவனையே மணந்துகொண்டாள். பெண்ணுக்கே இலக்கணமான பொறுமையும் அன்பும் கொண்டு கணவரையும், கணவரின் கண்ணிழந்த பெற்றோரையும் பாதுகாத்து வந்தாள். ஓராண்டுக்குப் பிறகு கணவன் இறப்பான் என்று தெரியவந்ததும், கலங்காமல் அவனை போஷித்து வந்தாள். கணவனின் உயிரைக் காக்க அம்பாளை எண்ணிக் கடுமையான விரதங்களை அனுஷ்டித்து வந்தாள். எனினும் அவளைச் சோதிக்க, பொல்லாத அந்த நாளும் வந்தது. ஆம், சத்தியவானின் உயிரைக் காலதேவன் கொண்டு சென்றான். தெய்வப்பெண்ணான சாவித்திரி யம தர்மராஜனோடு சமயோசிதமாகப் போராடி, கணவனின் உயிரை மீட்டுக்கொண்டாள். அவள் கணவனின் உயிரை மீட்ட நாளே காரடையான் நோன்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் தங்களது மங்கள வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் மகத்தான விரத நாள் இது. மாசி மாதத்தின் இறுதி நாளும் பங்குனி மாதத்தின் முதல் நாளும் இணையும் நேரத்தில் இந்த விரதம் கொண்டாடப்படுகிறது. 


காமாட்சி நோன்பு, கௌரி நோன்பு, சாவித்ரி விரதம் என்றெல்லாம் தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. சௌபாக்ய கௌரி விரதம் என்று ஆந்திராவிலும் கர்நாடக மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது.

வட சாவித்திரி விரதம், சர்வ மங்கள விரதம், கர்வ சாவத், கங்கார் விரதம்,  ஜித்திய விரதம் என்ற பெயர்களில் வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. எந்தப் பெயரில் இந்த விரதம் கொண்டாடப்பட்டாலும், நோக்கம் என்னவோ ஒன்றுதான். தன் கணவன் பூரண ஆயுளைப் பெற்று அனைத்து வளங்களுடன் வாழ வேண்டும் என்பதுதான் விரதத்தின் நோக்கம். காரடையான் நோன்பு நாளன்று அதிகாலையில் மங்கள நீராடி, தூய ஆடைகளை அணிய வேண்டும். பூஜையறையைச் சுத்தம் செய்து, கோலமிட்டு ஒரு மனையை வைக்க வேண்டும். அதில் கலசம் வைத்து அதன் மேல் தேங்காய், மாவிலை வைத்து, கலசத்துக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிற்றைக் கட்ட வேண்டும். கலசத்துக்கு அருகே அம்மனின் படத்தை வைத்து மலரால் அலங்கரிக்க வேண்டும். கலசத்தை வணங்கித் தொழுது, அதையே காமாட்சியாக அல்லது சாவித்திரி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். 


`உருக்காத வெண்ணெயும் உவப்பான காரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் நீங்காதிருக்க வேண்டும்' என்று சொல்லி பெண்கள் வணங்குவது இந்த நாளில் வழக்கம். இந்த நாளில் சிவப்பான கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயையும் முக்கியமாகப் படைப்பார்கள். சில பகுதிகளில் கார அரிசியால் செய்த இனிப்பு அடையும், உப்பு அடையும் செய்வது வழக்கம். இந்த நாளில் மஞ்சள் பூசிய நோன்புக்கயிற்றை பெண்கள் கட்டிக்கொள்வார்கள். சிலர் புதிய தாலிச்சரடுடன் நோன்புக்கயிற்றையும் கட்டிக்கொள்வார்கள். 'மாசிக்கயிறு பாசி படியும்' என்ற சொலவடைக்கு ஏற்ப, பங்குனி நாளில் இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், தங்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். படைக்கப்பட்ட அடையை எல்லோரும் உண்ட பிறகு, பசுமாட்டுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது. இந்த விரதநாளில் பெண்கள் மோர் குடிக்கக் கூடாது என்பது வழக்கத்திலிருக்கிறது. இந்த விரதம் இருந்தால்,  திருமணமான பெண்களுக்கு தீர்க்கசுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்கு கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. 

பல்வேறு நாடுகளில் இந்தக் காரடையான் நோன்பு எந்த நேரத்தில் நோற்க வேண்டும் என்ற பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று மாலை 7.30 மணி முதல் 8 மணி வரை நோன்பு பூஜையினை மேற்கொள்ளலாம்.


தன் கணவரின் ஆயுளை நீட்டிக்க, காலதேவனோடு போராடிய சாவித்திரி இந்த நாளில் விரதமிருக்கும் பெண்களை மானசீகமாக வந்து ஆசிர்வதிப்பாள் என்பது நம்பிக்கை. குடும்ப உறவுகளின் பிணைப்புகள் தளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில் இது போன்ற விரதங்களும் பூஜைகளும்தான் ஓரளவு நம்பிக்கையை விதைத்து, உறவுகளை மேம்படுத்துகின்றன. மாங்கல்ய பலம் அளிக்கும் காரடையான் நோன்புத் திருநாளில் உங்களின் எல்லா வேண்டுதல்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.