Published:Updated:

யுகாதிப் பண்டிகையின் பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் என்ன? #HappyUgadi

யுகாதிப் பண்டிகையின் பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் என்ன? #HappyUgadi
யுகாதிப் பண்டிகையின் பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் என்ன? #HappyUgadi

ந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வாழும் மக்களின் புத்தாண்டு தினம்தான், 'யுகாதி பண்டிகை'. இந்தப் பண்டிகை, 'உகாதி' என்றும் அழைக்கப்படுகிறது.பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாளே யுகாதிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. யுகத்தின் ஆரம்பம் இந்தநாளில்தான் தொடங்கியது என்பதால், `யுகாதி’ என்ற பெயர் ஏற்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. `சைத்ர மாதத்தின் முதல் நாளான இன்றுதான் பிரம்மதேவர் யுகத்தைத் தொடங்கினார்’ என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கொங்கன் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள தருமபுரி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களால் யுகாதிப் புத்தாண்டு தினம் கொண்டாடப்படுகிறது. மராட்டிய மக்கள் 'குடிபாட்வா ' என்றும், சிந்தி இன மக்கள் 'சேதி சந்த்' என்றும் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.


யுகாதி வழிபாடு :

காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து இந்த நாளைத் தொடங்குகிறார்கள். மாவிலைத் தோரணம் கட்டி, வண்ணக் கோலங்கள் இடுவார்கள். வயல்களில் விளைந்த தானியங்களை வீட்டின் முகப்பில் கட்டுவதும் சில இடங்களில் வழக்கமாக உள்ளது. இந்த நாளில் பெருமாள், சிவன், கணபதி போன்ற இஷ்ட தெய்வங்களை அலங்கரித்து வழிபடுகிறார்கள். அம்பிகை வழிபாடு இந்த நாளில் விசேஷமாகச் செய்யப்படுகிறது. சிலர், குலதெய்வ வழிபாடும் செய்வார்கள். பூஜையில் பாட்டுப் பாடி வழிபடுவது தெலுங்கு இன மக்களின் வழக்கம். ஒப்பட்லு என்ற பணியாரம், பூரன் போளி, பால் பாயசம், புளியோதரை போன்றவற்றை நைவேத்தியமாகப் படைத்து உண்கிறார்கள். அந்த ஆண்டின் புதிய பஞ்சாங்கத்தையும், பஞ்சகவ்யத்தையும் பூஜையில் வைப்பதும் வழக்கம். 


பஞ்சாங்கம் வாசித்தல் :

ஆண்டின் முதல் நாளான இந்த நாளில் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனப்படும் பஞ்ச அங்கங்களையும் கூறும் பஞ்சாங்கத்தினை படிக்கும் வழக்கம் பெரியோர்களிடம் இருக்கிறது. நாட்டின் நிலைமை, விளைச்சல், மக்களின் வாழ்க்கை நிலை எல்லாவற்றையும் இந்த நாளில் பஞ்சாங்கத்தின் மூலம்  தெரிந்துகொள்ளும் வழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது. சிலர் ஜோதிடரிடம் சென்று குடும்ப உறுப்பினர்களின் எதிர்கால நன்மைகளையும் அறிந்து கொள்வார்கள். ஆலய வழிபாடும், தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பரிசளிப்பதும் இந்த நாளில் கண்டிப்பாகப் பின்பற்றப்படும் வழக்கமாக உள்ளது. 

பச்சைப் பச்சடி உணர்த்தும் தத்துவம் :

யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால், அது பச்சைப் பச்சடிதான். வாழ்க்கையென்றால் இன்பம், துன்பம், ஏமாற்றம், தோல்வி, வெறுமை, விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள், இந்த யுகாதி நாளில் இனிப்பு, காரம், உப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு என அறுசுவை கலந்த பச்சடியைச் செய்து உண்கிறார்கள். வேப்பம்பூ, வெல்லம், உப்பு, புளி, மிளகாய், மாவடு போன்றவற்றைச் சேர்த்து இந்தப் பச்சடியைச் செய்கிறார்கள். 'பேவு பெல்லா' என இதைக் கன்னட மொழியில் கூறுகிறார்கள்.  


வசந்த காலத்துக்கு வரவேற்பு விழா :

யுகாதி நாளன்று மாலையில், ஒரு பொது இடத்தில் மக்கள் கூடி இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், புராணங்கள் படிப்பது, விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். புதிய முயற்சிகளுக்கு வித்திடும் நாளாக இந்த நாள் அமைவதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே, இந்த நாளில் மங்களமான காரியங்களைத் தொடங்குகிறார்கள். யுகாதிப் பண்டிகையையொட்டி திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் 40 நாள்கள் நித்ய உற்சவம் நடைபெறும். ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள எல்லா ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளும் ஆராதனைகளும் இந்த நாளில் நடைபெறும். புத்தாண்டாக மட்டுமன்றி இளவேனிற்காலத்தின் தொடக்க நாளாகவும், அதை மகிழ்வோடு வரவேற்கும் நாளாகவும் இந்த யுகாதி தினம் மராட்டிய, கொங்கண் பகுதிகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. 


சடங்குகளும், சம்பிரதாயங்களும் குறைந்து வரும் இந்தக் காலத்தில் இதுபோன்ற பண்டிகைகள் மக்களிடையே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டு வரட்டுமென பிரார்த்திப்போம். யுகாதி நாளைக் கொண்டாடவிருக்கும் அனைத்து மக்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். பொங்கும் மங்களம் இல்லம்தோறும் தங்கிட வாழ்த்துகிறோம்.