Published:Updated:

திருமணம் கைகூட உதவும் பங்குனி உத்திரம் கல்யாணசுந்தர விரதம்! #PanguniUthiram

திருமணம் கைகூட உதவும் பங்குனி உத்திரம் கல்யாணசுந்தர விரதம்! #PanguniUthiram
திருமணம் கைகூட உதவும் பங்குனி உத்திரம் கல்யாணசுந்தர விரதம்! #PanguniUthiram

மிழ் மாதங்களில் 12-வது மாதம் பங்குனி, நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரம் உத்திரம். இவை இரண்டும் இணையும் திருநாளே பங்குனி உத்திரம். உத்திர நட்சத்திரத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவது நம் வழக்கம். பல தெய்வத் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன ஞானநூல்கள். சிவ - சக்தி; ஶ்ரீராமர் - சீதை; முருகப் பெருமான் - தெய்வானை; ஆண்டாள் - ரங்கமன்னார்; அகத்தியர் - லோபாமுத்திரை; ரதி - மன்மதன்; இந்திரன் - இந்திராணி; நந்தி - சுயசை; சாஸ்தா - பூரணை, புஷ்கலை; சந்திரன் - 27 நட்சத்திர மங்கையர் என அனைத்துத் திருமணங்களும் பங்குனி உத்திர நன்னாளில்தான் நடைபெற்றன.


கல்யாண வரம் அருளும் கல்யாணசுந்தர விரதம் 

பங்குனி உத்திர நாளில், 'கல்யாணசுந்தர விரதம்'  இருந்து வழிபட்டால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைவதுடன், இல்லற வாழ்க்கையும் மகிழ்ச்சியாக அமையும். பங்குனி உத்திரத்தன்று ஆலயங்களில் வழிபாடு செய்து, புதுத்தாலியைப் பெருக்கிக் கட்டிக்கொள்வது சுமங்கலிகளின் வழக்கம். சிவபெருமான் அம்பாளைக் கரம்பிடித்த நன்னாளில், பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்காக சிவனடியார்கள், 'கல்யாணசுந்தர விரதம்' அனுஷ்டிப்பார்கள். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.


திருமகளும் ஐயப்பனும் அவதரித்த பங்குனி உத்திரத் திருநாள்

கல்யாண வரமளிக்கும் இந்த நாளில்தான் திருமகள் விரதமிருந்து  திருமாலின் திருமார்பில் இடம்பிடித்தாள். அதைப்போலவே கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில்  பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான்.  எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது. உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திரபகவான் இந்த நாளில் களையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். அப்போது சந்திரனை வணங்கினால் குடும்ப வாழ்வு சிறப்படையும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில்தான். 


முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் 

12 என்ற எண்ணுக்குச் சிறப்பு சேர்க்கும் இந்த நாள், பன்னிரு கையும், பன்னிரு விழியும், பன்னிரு செவியும் கொண்ட வேலவனின் சிறப்பான நாளாகக் கருதப்பட்டு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள்தோறும் சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக பழநியம்பதியில் பங்குனி உத்திரத்தன்று முருகப்பெருமானுக்கு கொடுமுடிக்குச் சென்று அங்கு பாயும் காவிரி நதியில் தீர்த்தம் எடுத்து வந்து விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. காவிரியைப் பெருமைப்படுத்தும் நாள் இந்த நாள். 


களத்திர தோஷம் போக்கும் வைபவம் 

பங்குனி உத்திர நாளில் இந்திய  தேசத்திலுள்ள புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியிலுள்ள எட்டு புனித தீர்த்தங்களில் ஒன்றான  தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.  இந்த நாளில் வெங்கடாசலபதியை சேவிப்பதும், புனித நீராடுவதும் சிறப்பானவை. அதுமட்டுமா!  வைணவ தென்கலைப் பிரிவின் மஹா ஆசார்யரான ஸ்ரீராமாநுஜர் பெருமாளைத் தொழுது சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம் என்ற மூன்று வசனக் கவிதைகளைப் பாடியதால் 'உடையவர்' என்ற பதவியை திருமாலிடமிருந்து பெற்றார். இந்தப் பதவியை ஸ்ரீராமாநுஜர் பெற்ற நாள் பங்குனி உத்திரம். ஸ்ரீரங்கம் ஆலயத்தின் 'சேர்த்தி வைபவம்' நடைபெறுவதும் இந்த நாளில்தான்.  ரங்கநாத பெருமாள் - ரங்கநாயகி தாயார் ஊடல் கொண்டு சண்டையிட்டுக்கொள்வதும், பின்னர் இணைவதும் இந்த நாளின் விசேஷம். இந்த வைபவத்தைக் காணும் அன்பர்கள், களத்திர தோஷத்திலிருந்து விடுபட்டு திருமண வரம் பெறுவார்கள் என்பது ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப்போலவே இந்த நாளில் காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், மலையாள நாச்சியார் மற்றும் பெருந்தேவித் தாயார் சமேதராக ஸ்ரீவரதராஜர் காட்சி தருவார். இந்த வைபவம் பங்குனி உத்திரத்தன்று மட்டும்தான் நடைபெறுகிறது. 


ஊரெங்கும் திருவிழாக் கோலம் 

மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாகக் காணப்படும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என தமிழகம் முழுக்க இந்த நாளில் பல விசேஷங்கள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திர நாளில் நீர் மோர் வழங்குதல், விரதமிருத்தல், தெய்வத் திருமணங்களை தரிசிப்பது,  அன்னதானம் செய்வது போன்றவை பெரும் புண்ணியத்தைத் தரும்.


பங்குனி உத்திரத்தன்று செய்யக்கூடிய சுபநிகழ்ச்சிகள் 

பூ முடித்தல், தாலிக்குப் பொன்னுருக்குதல், திருமண ஓலை எழுதுதல்,  சீமந்தம், புதிய பொருள்கள் வாங்குதல், புதிய சிகிச்சை  மேற்கொள்ளுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், செடி நடுதல், வணிகம் தொடங்குதல்,  வேலையில் சேருதல், புதிய இடத்துக்கு மாறுதல், நீர் நிலைகளை உருவாக்குதல், போர்ப்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற நற்காரியங்கள் செய்வதற்கு உகந்த நாள் பங்குனி உத்திரத் திருநாள். எண்ணற்ற பல மங்களகரமான, தெய்விக நிகழ்வுகள் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருநாளில் நாமும் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.