Published:Updated:

அழகர் ஆற்றில் இறங்கும்போது, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சடங்கு ஏன்?

அழகர் ஆற்றில் இறங்கும்போது, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சடங்கு ஏன்?
அழகர் ஆற்றில் இறங்கும்போது, தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சடங்கு ஏன்?

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் மீது ஏறத்தாழ ஒரு மணி நேரம் நேர்ச்சையாளர்கள் தண்ணீர் பீய்ச்சுகிறார்கள். அப்போது `அழகர் வர்ணிப்பு’ என்ற வர்ணனைப் பாடலைப் பாடி, வட்டமாக நின்று ஆடுகிறார்கள். இது ஆதிகாலப் பண்பாட்டுக்குரிய பாட்டும் ஆட்டமும் சேர்ந்த ஒரு விநோதமான வழிபாடு. அழகர் வருவதற்கு முன்னர் இரவு முழுக்க பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சுவது நடக்கும்.

`ஃபேஸ்புக்’, `வாட்ஸ்அப்’... என சமூக வலைதளங்களில் சிலர் வேலை மெனக்கெட்டு சில பதிவுகளைப் போட்டிருப்பதைப் பார்க்கலாம். மழை பொழிவது போன்ற படங்களுடன், `வெப்பம் குறையும்’ என்ற ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தாங்கிவரும் பதிவுகள் அவை. இது போன்ற தகவல்களை, படங்களை பரப்புவதன் மூலம் உண்மையிலேயே மழை பொழியும், வெப்பம் குறையும் என்று நம்புகிறார்கள் சிலர். இந்த நம்பிக்கை புதியதல்ல. நாம் ஆதிமனிதராக வாழ்ந்தபோது நம்மிடையே பாவனைச் சடங்காக இருந்தது. இப்போது, `நேர்மறை எண்ணங்களைப் பரப்புதல்’ [Spreading positive thoughts]  என்ற பெயரில் உலாவருகிறது.

சர் ஜேம்ஸ் ஜார்ஜ் ஃபிரேசர் (Sir James George Frazer) என்பவர் உலகம் முழுக்கப் பயணம் செய்து ஆதிகாலத்து மனிதர்களின் சடங்குகள் தொடர்ந்து செய்யப்படுவது குறித்து ஆராய்ந்தார். அவற்றையெல்லாம் சேகரித்து, `தி கோல்டன் பௌ’ (The Golden Bough) என்ற புத்தகமாக்கி, பன்னிரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டார். இந்த நூலில் சில சடங்குகளுக்கு மந்திர ஆற்றல் இருப்பதாக, ஆதி மனிதர்கள் நம்பியிருந்ததாகவும், அதனாலேயே சில மந்திர சமயச் சடங்குகளைச் [Magico religious rituals] செய்துவந்ததாகவும் குறிப்பிடுகிறார். இந்தச் சடங்குகளை அவர், `பாவனைச் சடங்கு’ [Imitative or homeopathic ritual] என்றும், `தொற்றுச் சடங்கு’ [Contagious ritual] என்றும் பகுக்கிறார். பாவனைச் சடங்கு என்பது தனக்கு விருப்பமான ஒன்றை, அது வேண்டும் என நினைத்து, அதுபோல பாவித்து, அதனைச் செய்வது. வசந்த காலம் அல்லது இளவேனிற் காலத்தில் நடைபெறும் பாவனைச் சடங்கு பற்றிப் பார்க்கலாமா? 

வெப்பத்தைத் தணிக்க, தண்ணீர் தேவை. எனவே, தண்ணீரை ஊற்றினால் மழை நீரைப் பெறலாம் என்பது பாவனை சடங்கு. ஆரம்பத்தில் மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை ஊற்றி மகிழ்ந்தார்கள். பின்னர் அவரவர் வழிபட்ட தெய்வத்தின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். கடவுள் மீது நாம் தண்ணீர் ஊற்றினால், அவரும் நம் மீது தண்ணீரை ஊற்றுவார் என்பது ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை உள்ள நம்பிக்கை. இது, வேட்டைச் சமூகத்தில் உருவாகி, வேளாண் சமூகத்தில் நிலைபெற்றுவிட்ட நம்பிக்கை. இன்றைய நவீன காலத்திலும் இந்த நம்பிக்கை சமூக வலைதளம் மூலமாகப் பரவிவருகிறது. வடநாட்டில் ஹோலி பண்டிகையின்போது ஒருவர்மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். தமிழகத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவின்போது, `தண்ணீர் பீய்ச்சுதல்’ ஒரு நேர்த்திக்கடனாகவே செலுத்தப்படுகிறது. தாய்லாந்தில் வருடப்பிறப்பன்று (Songkran) தண்ணீரைப் பீய்ச்சியடிப்பது வழக்கமாக இருக்கிறது. பாலி மொழியில் `சொங்கிராந்த்’ என்பதுதான் சம்ஸ்கிருத்த்தில் `சங்கராந்தி’ எங்கிறார்கள். தமிழக கிராமங்களில் `சாங்கியம்’ என்று சடங்குகளை அழைப்பதைக் கேட்டிருப்போம்.

இந்தியாவில் பௌத்தம் பின்பற்றப்படுகிற வடகிழக்கு மாநிலங்களிலும், இப்படி தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் பாவனைச் சடங்கு நடத்தப்படுகிறது. அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வருடம் முடியும்போது, அதன் கடைசி மூன்று நாள்களும் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு நிகழ்த்தப்படும். இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷில் சிட்டகாங் மலைப் பகுதியில் வாழ்பவர்கள் தண்ணீர் பீய்ச்சும் பாவனைச் சடங்கை இன்றுவரை நடத்திவருகிறார்கள்.

பௌத்த சமயம் தோன்றியபோது அது, அதற்கு முன்னர் இருந்த சில நாட்டுப்புறச் சடங்குகளையும், பழக்க வழக்கங்களையும், தாய் தெய்வ வழிபாட்டையும், அதனுடன் தொடர்புடைய வளமைச் சடங்குகளையும் ஏற்றுக்கொண்டது. பின்னர் அந்தச் சமயம் `மஹாயானா’, `ஹீனயானா’ என்ற பெயர்களில் `பெருவழி’, `சிறு வழி’ எனப் பிரிந்தபோது இந்தப் பூர்வீகச் சடங்குகள் ஹீனயானா பிரிவுக்கு உரியனவாகிவிட்டன. இவை அடித்தட்டு மக்களின் விருப்பத்துக்குரிய சடங்குகளாக இருந்ததால், பௌத்தம் பரவிய இடங்களிலெல்லாம் இன்றுவரை நிலைத்து நிற்கின்றன. தமிழகத்தில் சைவ, வைணவ சமயங்கள் பேரரசர்களின் ஆதரவுடன் பக்தி இயக்க காலத்தில் ஆளுமை செலுத்தியபோது சமயப் பூசல்கள் ஏற்பட்டு, பௌத்தமும் சமணமும் வெளியேற்றப்பட்டன. பௌத்த துறவிகள் மலைகளுக்குள் ஓடி ஒளிந்து சித்தர்களாகிவிட்டார்கள். சமணர்கள், கழுவேற்றப்பட்டதும் பலர் சைவத்துக்கு மதம் மாறிவிட்டார்கள். பௌத்த விகாரங்கள் பெருமாள் கோயில்களாகவும், சமணர்களின் ஆதிநாதர் மற்றும் இடபதேவர் கோயில்கள் ஆதிசிவன் கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. அதன் பின்னர் பௌத்த சமயத்தின் தண்ணீர் ஊற்றுதல் போன்ற பூர்வீகச் சடங்குகள் பல பெருமாள் கோயில் சடங்குகளாகிவிட்டன.

பௌத்த சமயம் கோலோச்சிய தாய்லாந்திலும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு இன்றும் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தில், மதுரை வைகைக் கரையிலுள்ள பெருமாள் கோயில்களில், சித்திரை முழு நிலா நாளன்று அழகர் வைகை ஆற்றில் இறங்குவதாக ஒரு பாவனைச் சடங்கு கொண்டாடப்படுகிறது. இறங்குதல் என்பது ஆற்றில் இறங்குதல் மட்டுமன்று; கார்மேகவண்ணனான பெருமாள் மழையாக வந்திறங்குகிறார் என்பதே மக்களின் ஐதீகம். அன்று அவர் உடுத்திவரும் பட்டாடை, பச்சையாக இருந்தால் நல்ல மழை பெய்து, நாடு செழிக்கும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். இது ஆதிகாலச் சடங்கு என்பதால், இதில் பட்டணத்து மக்களைவிட கிராமத்து மக்களே அதிகம் பங்கேற்கிறார்கள். தங்களின் விளைச்சலிலிருந்து காணிக்கையாக ‘கோட்டை நெல்லை’ நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் மக்களுக்கு உண்டு. சேவல், மாடு போன்றவற்றையும் பெருமாளுக்கு கோயிலில் நேர்ந்துவிடுகிறார்கள்.

தாய்லாந்திலும் தமிழகத்திலும் தண்ணீர் பீய்ச்சும் சடங்கு கொண்டாடப்படுவதில் சில ஒற்றுமைகள் உள்ளன. அவை...

தாய்லாந்தில் சித்திரை முதல் நாளன்றும், தமிழகத்தில் சித்திரை முழு நிலா நாள் அன்றும் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தாய்லாந்தில் புத்தர் சிலையின் மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள். மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் மீது ஏறத்தாழ ஒரு மணி நேரம் நேர்ச்சையாளர்கள் தண்ணீர் பீய்ச்சுகிறார்கள். அப்போது `அழகர் வர்ணிப்பு’ என்ற வர்ணனைப் பாடலைப் பாடி, வட்டமாக நின்று ஆடுகிறார்கள். இது ஆதிகாலப் பண்பாட்டுக்குரிய பாட்டும் ஆட்டமும் சேர்ந்த ஒரு விநோதமான வழிபாடு. அழகர் வருவதற்கு முன்னர் இரவு முழுக்க பக்தர்கள் மீது தண்ணீர் பீய்ச்சுவது நடக்கும்.

தாய்லாந்தில் புத்த சிலையின் மீது தண்ணீர் ஊற்றிய பின்னர் புத்த பிட்சுகளுக்கு உணவு வழங்குகிறார்கள். அன்றைய தினத்தில் மதுரையில் கள்ளழகர் இறங்கும் அனைத்து மண்டபங்களிலும், அதாவது திருக்கண்களிலும் பெருமாள் பக்தர்களுக்கு சித்ரான்னங்கள் வழங்கப்படுகின்றன. சித்திரை பௌர்ணமிக்கே உரிய சிறப்பு அன்னமாக புளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை அன்னதானமாக வழங்கப்படுகின்றன. 

தாய்லாந்தில் அன்று, விலங்குகளும் பறவைகளும் விடுவிக்கப்படும். மதுரையில் கள்ளழகர் கொக்குக்கு விமோசனம் கொடுக்கும் சடங்கும், தவளை உருவில் இருக்கும் மண்டூக மாமுனிக்கு சாப விமோசனம் கொடுக்கும் சடங்கும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும். ஒரு கொக்கைப் பிடித்துக் கட்டிவைத்து, கள்ளழகர் அம்புவிடுவதாக பட்டர் பாவனை செய்ததும், அந்தக் கொக்கின் கால் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படும். இந்த பாவனைச் சடங்கு இன்றும் நடைபெறுகிறது.

இந்தச் சடங்குகள் பாவனையாக நடத்தப்பட்டாலும், இன்றும் அமோக வரவேற்பைப் பெற்றிருப்பதால் ஆண்டுதோறும் விழாவில் பங்குபெறும் மக்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. சமூக வலைதளங்களில் மழைப் படங்களை அனுப்பி, `பரவவிடுதல்’ [Spreading positive thoughts] என்பதாக இந்த நம்பிக்கை புதிய வடிவம் பெற்றிருக்கிறது. ஆக, ஆதிமனிதனின் மந்திரச் சடங்குகளுக்கு அழிவே கிடையாது. புதுப்புதுப் பெயர்களில் அவை தொடரும் என்பதே உண்மை.

அடுத்த கட்டுரைக்கு