Published:Updated:

தோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா!

வருடா வருடம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், இது வேளாண்மைத் திருவிழா என்பதால், வழக்கமான விழாக்களிலிருந்து  வித்தியாசப்பட்டுக் காணப்பட்டது.

தோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா!
தோரணமலை முருகன் கோயிலில் வேளாண்மைக்காக ஒரு திருவிழா!

விவசாயம் நலிவுற்று, விவசாயிகள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், விவசாயத்தின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தவும் அவர்களைக் கௌரவிக்கவும் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் நமக்குக் கிடைத்தது. தென்காசி - கடையம் சாலையில் அமைந்திருக்கும் தோரணமலை முருகன் கோயிலில்தான் அப்படி ஓர் அற்புதமான வைபவம் நடைபெற்றது.

தோரணமலை

குறிஞ்சிநிலக் கடவுள் முருகப்பெருமான் கோயில்கொண்டிருக்கும் மலை. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்' என்று சொல்வதற்கேற்ப, முருகப்பெருமானின் ஐந்து படைவீடுகள் மலையின் மேல் இருப்பவைதான். திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அமைந்திருந்தாலும், திருச்செந்தூருக்கும் மலைக்கும்கூடத் தொடர்பு உண்டு. ஒரு காலத்தில் திருச்செந்தூரில் சந்தனமலை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருச்செந்தூருக்கும் மற்றொரு மலைக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த மலைதான் தோரணமலை.

சிவ - பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடைபெற்றபோது, அனைவரும் வடதிசையில் குவிந்துவிட்டனர். அதனால், பூமியின் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்துவிட்டது. பூமியை சமநிலைப்படுத்துவதற்காக, அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார் சிவபெருமான்.

பொதிகை நோக்கிப் பயணம் மேற்கொண்ட அகத்தியர், வழியில் யானை வடிவிலிருந்த ஒரு மலையைக் கண்டார். ஓய்வுக்காகச் சிறிது காலம் அந்த மலையில் தங்கியிருந்தார். அந்த மாலை யானை வடிவத்தில் இருந்ததால் அதற்கு, 'வாரண மலை' என்று பெயர் வைத்தார். காலப்போக்கில் அந்தப் பெயர் மருவி தற்போது 'தோரணமலை' என்று அழைக்கப்படுகிறது.

மலையிலிருந்த ஏராளமான மூலிகைகள் அகத்தியரின் மருத்துவ, மூலிகை ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. ஆராய்ச்சிகளில் தாம் அறிந்த அனைத்தையும் தம்முடைய சீடரான தேரையருக்குச் சொல்லிக் கொடுத்த பிறகே, அகத்தியர் தோரணமலையிலிருந்து கிளம்பிச் சென்றார். தேரையர் அந்த மலையிலேயே ஜீவசமாதி அடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மலைக் கோயிலுக்குச் செல்லும் வழியில், அகத்தியரும் தேரையரும் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் குகைகளும் உள்ளன.

மலையின் மேல் அமைந்துள்ள முருகப் பெருமான், கிழக்கு திசையிலுள்ள திருச்செந்தூர் முருகப் பெருமானை நோக்கியபடி காட்சி தருகிறார். இவரை வழிபட்டால், திருச்செந்தூர் முருகனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மலைமேல் இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க மேலே செல்ல முடியாதவர்களுக்காக, மலையடிவாரத்திலும் முருகப் பெருமானுக்கு ஓர் ஆலயம் அமைந்திருக்கிறது. அந்த ஆலயத்தில் விநாயகர், நவகிரகங்கள் போன்ற பரிவார தெய்வங்களும் உள்ளனர். வருடம்தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை முதல்நாள், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறும்.

சித்திரைப் பிறப்பன்று தோரணமலை அடிவாரத்தில் நடைபெற்ற திருவிழாவைக் காண்பதற்காக, தென்காசிக்குச் சென்றோம். அங்கிருந்து கடையம் செல்லும் பேருந்தில் ஏறி, மாதாப்பட்டினம் விலக்கு என்ற இடத்தில் இறங்கி, மினி பஸ் பிடித்து தோரணமலைக்குச் சென்றோம்.

காலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். ஷேர் ஆட்டோக்களில் குடும்பம் குடும்பாகப் பக்தர்கள் வந்து இறங்க, வழிநெடுக பொம்மைகள், நொறுக்குத்தீனிகள், குளிர்பானங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் எனச் சின்னச் சின்ன கடைகள் முளைக்கத் தொடங்கின.

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாளில், வருடா வருடம் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம்தான் என்றாலும், இந்த வருடத் திருவிழா வேளாண்மைத் திருவிழா என்பதால், வழக்கமான விழாக்களிலிருந்து வித்தியாசப்பட்டுக் காணப்பட்டது. முருகனுக்கு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் சேர்த்தே விழா எடுக்கப்பட்டிருந்தது. வேளாண்மைத் திருவிழாத் தொடங்குவதற்கு முன்பாகக் காலை 10:30 மணிக்கு 101 பெண்கள்,  101 பானைகளில் சர்க்கரைப் பொங்கல் வைத்து, முருகப் பெருமானுக்குப் படையலிட்டனர். தொடர்ந்து 11 மணிக்கு விவசாயம் செழிக்க வேண்டி, ‘லட்சுமி குபேர ஆகர்ஷண ஹோமம்’ என்ற பெயரில் யாகம் ஒன்று நடைபெற்றது. இந்தச் சிறப்பு ஹோமத்தில், விவசாயக் குடும்பங்களுக்கான பிரதிநிதிகளாக ஒன்பது விவசாயிகள் கலந்துகொண்டு, அனைத்து விவசாயிகளின் நன்மைக்காகவும் வேண்டிக்கொண்டனர். மேலும், கிராமியக் கலைகளைப் போற்றும் வகையில் 10 கிராமக் கலைஞர்களுக்கு சால்வை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்கள்.

கோயில் அறங்காவலர் கே.ஆதிநாராயணனின் மகன் கே.ஏ.செண்பகராமனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த விழா குறித்து, அவரிடமே கேட்டோம்.

“ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல இங்கு திருவிழா நடக்கும். சுத்தியிருக்குற அத்தனை ஊரைச் சேர்ந்தவங்களும் முருகனைப் பார்க்க வேண்டி வண்டிகட்டிக்கிட்டு வந்துடுவாங்க. இந்தத் திருவிழாவுக்கு மட்டும் ஏறத்தாழ 10,000 பேர் வந்திருக்காங்க. இந்த முருகன்கிட்ட மலையேறி, மனசு உருகி வேண்டிக்கிட்டா, நினைச்சது கிடைக்கும். இதை இங்கே இருக்குற யாரைக் கேட்டாலும் சொல்வாங்க. வருஷா வருஷம், விழாவைச் சிறப்பிக்க பெரும்பாலும் திரைக்கலைஞர்களைக் கூப்பிடத்தான் நினைப்போம். இந்த வருஷமும் முதல்ல அப்படித்தான் யோசிச்சோம். ஆனா, நாட்டுல தண்ணிக்கே தவிக்க வேண்டிய சூழலைப் பார்த்த பிறகு, விவசாயக் குடும்பங்களுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அவங்களுக்காகச் சித்திரைத் திருவிழாவுல பிரார்த்தனை பண்ணுவோமேன்னு முடிவு செஞ்சோம். அதேபோல இன்னிக்கு ஒன்பது விவசாயிகளை அழைச்சு கௌரவிச்சோம். எல்லா விவசாயிகளோட நல்லதுக்காகவும் ஹோமம் பண்ணியிருக்கோம். திரைக்கலைஞர்களைக் கூப்பிட்டிருந்தாகூட, இந்த அளவுக்கு சந்தோஷமும் திருப்தியும் கிடைச்சிருக்காது. மனசுக்கு அவ்ளோ நிறைவா இருக்கு.

அப்படித்தான் சித்திரைத் திருவிழாவுல, அவங்களுக்காகப் பிரார்த்தனை பண்ணலாம்ங்குற எண்ணம் வந்துச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் எங்களுடைய இந்த வேளாண்மைத் திருவிழா. ஒன்பது விவசாயிகளை அழைச்சு, கௌரவிச்சோம். ஹோமம் பண்ணியிருக்கோம். நாங்க அழைச்ச ஒன்பது பேரும், இரண்டு தலைமுறைக்கு சோறு போட்டவங்க. 'பல வருஷமா விவசாயம் பண்ற அவங்களும் அவங்க குடும்பமும், அவங்களை மாதிரியே இந்தியா முழுக்க இருக்குற எல்லா விவசாயக் குடும்பங்களும் நல்லா இருக்கணும்'கிறதுதான் எங்க பிரார்த்தனை. இதோட சேர்த்து, ஒயிலாட்ட கலைஞர், நாடக வித்துவான், இயற்கைப் பாதுகாவலர் என 10 துறைகளைச் சார்ந்த கிராமிய கலைஞர்களுக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்துச்சு. கோயில் நிர்வாகம் சார்பா, விவசாயிகள் கையால அவர்கள் எல்லோருக்கும் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகள் முடிஞ்ச பிறகு, வந்திருந்த ஊர்மக்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானமும் செஞ்சோம்.

ஒவ்வொரு விழாவையும் திருவிழாபோல, மக்களுக்கான விழாவாகக் கொண்டாட எங்களாலான முயற்சிகளைச் செஞ்சுட்டிருக்கோம். அதேநேரத்துல கோயிலில் வைக்கப்பட்டிருக்கற குடிநீர்த் தொட்டி, மலையேறுவதற்கான பாதை/படிகள், குளியலறை, வெளியூரிலிருந்து வர்றவங்க தங்கறதுக்கான விடுதி எல்லாமே கோயிலுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் நாங்களாத்தான் செய்ய வேண்டியிருக்கு. இன்னும் உதவிகள் அதிகமாகக் கிடைக்கும் பட்சத்தில், இன்னும் சிறப்பான முறையில் விழாக்களை நடத்துவோம்'' என்றார் செண்பகராமன்.

இறுதி நிகழ்வாக, கோயிலுக்கு உதவிசெய்தவர்கள், விழாவுக்காக உழைத்தவர்கள் அனைவரும் கௌரவிக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

விவசாயத்தின் அவசியத்தை அனைவருக்கும் வலியுறுத்த வேண்டிய காலகட்டத்தில், விவசாயிகளைப் போற்றும் வகையில் தோரணமலையில் நடைபெற்ற சித்திரைத் திருவிழா பாராட்டுக்குரியது.