Published:Updated:

முளைப்பாரி, கும்மி, கபடி... அமெரிக்கா, டல்லாஸில் களைகட்டிய சித்திரைத் திருவிழா!

ஒரு காலத்தில் நம்முடைய விழாக்களெல்லாம் எப்படிக் கொண்டாடப்பட்டன என்ற மகிழ்ச்சியான அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விழாவாக அமைந்திருந்தது டல்லாஸ் சித்திரைத் திருவிழா!

முளைப்பாரி, கும்மி, கபடி... அமெரிக்கா, டல்லாஸில் களைகட்டிய சித்திரைத் திருவிழா!
முளைப்பாரி, கும்மி, கபடி... அமெரிக்கா, டல்லாஸில் களைகட்டிய சித்திரைத் திருவிழா!

சித்திரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட காலம் மாறி, இன்றைக்கு ஒரு சம்பிரதாயமாகத்தான் பல இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. சுமார் 30 - 35 வருடங்களுக்கு முன்னர் நம் கொண்டாட்டங்களில் இருந்த குதூகலமும் உற்சாகமும் இன்றைய நம் திருவிழாக் கொண்டாட்டங்களில் இல்லையென்பது கசப்பான உண்மை, வருத்தத்துக்குரிய விஷயமும்கூட. நம் வருத்தத்தை ஓரளவு போக்கும்விதமாக, சித்திரைத் திருநாளன்று 3,500 தமிழர்கள் ஒன்றுகூடி, 1980-களில் சித்திரைத் திருவிழா எப்படிக் கொண்டாடப்பட்டதோ, அப்படி விமர்சையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் அல்ல... அமெரிக்காவின் டல்லாஸ் நகரில்! அங்கே நடைபெற்ற சித்திரைத் திருவிழாக் காட்சிகள் இங்கே...

விழா நாளில் முதல் நிகழ்ச்சியாக முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி! 108 பெண்கள், தங்கள் வீட்டில் மூன்று வாரங்களாக வளர்த்த முளைப்பாரியை விழா நடைபெற்ற இடத்துக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்து வைத்து, அமர்க்களமாகக் கும்மியடித்தபடி பாடிய பாடலும் ஒயிலாட்டமும், `ஒருவேளை நாம் தமிழகத்தில்தான் இருக்கிறோமோ?' என்ற பிரமிப்பை ஏற்படுத்தியது. 

நம் பாரம்பர்ய விளையாட்டுகளான கபடி, பம்பரம், தட்டாங்கல், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளைச் சொல்லித் தரும் வகையில் பயிற்சிப் பட்டறையையும் நடத்தினார்கள் இந்தத் தமிழர்கள். பலரும் ஆர்வமாகக் கலந்துகொண்டு, பயிற்சியும் பெற்றனர். அன்றைய தினம் குழந்தைகள் யாரும் மின்னணுச் சாதனங்களைத் தொடாமல் பார்த்துக்கொண்டதுடன், அந்த விளையாட்டுகளில் ஈடுபடுத்தினார்கள்; தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டார்கள். 

கபடியும் கொக்கோவும் `அப்பப்பா என்ன ஓர் ஆட்டம்!' என்று குழந்தைகளை வியக்கவைத்தன. ஆட்டமும் ஆட்டத்துடன் சேர்ந்து அவர்கள் பாடிய பாட்டும் அபாரம்!

ராட்டினமும் விழாவில் இடம்பெற்றிருந்தது. குடும்பத்துடன் ராட்டினத்தில் சுற்றி இறங்கியவர்களின் முகங்களில்தான் என்ன ஓர் ஆனந்தம்!

ஆடிக் களைத்ததும் பசியெடுக்குமே..! அவர்களுக்கென்றே விழா நடைபெற்ற இடத்தில் உணவுக் கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அத்தனை கடைகளிலும் நம் பாரம்பர்ய உணவுகள்... நெல்லை அல்வா, தட்டுவடை, பதநீர், நீர்மோர்... களைத்தவர்கள் அந்தக் கடைகளுக்குப் படையெடுத்து உணவு வகைகளை ருசித்து ரசித்துச் சாப்பிட்டனர்.

ராசாத்தி பெட்டிக்கடை, மரபொம்மைக் கடை, சேலைக் கடை, கம்மல், வளையல்கள் விற்கும் கடை, புகைப்படம் எடுத்துக்கொடுக்கும் நிலையம் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவின் இடையிடையே குலுக்கல் முறையில் இருவருக்குத் தங்க நாணயமும், 20 பேர்களுக்கு ஆறுதல் பரிசும் வழங்கி அசத்தினார்கள்.

விழா மேடையில் நடந்த நடனங்களும் இசை நிகழ்ச்சிகளும் மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தின. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு விழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் சான்றிதழ் கொடுத்து கௌரவித்தனர். 

விழாவில் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவி கோமதி பெரியதிருவடி, அனைவரையும் வரவேற்றதுடன், நிர்வாகக் குழுவினரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும், வரும் ஏப்ரல் 28-ம் தேதி நடைபெறவிருக்கும் `பெண்கள் தற்காப்புப் பயிற்சிப் பட்டறை’ மற்றும் வரும் ஜூன் மாதம் டல்லாஸில் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் `பேரவை நிகழ்ச்சிகள்’ பற்றியும் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார்.

செயலாளர் அருண்குமார், சங்க உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில், டல்லாஸில் உள்ள சங்க உறுப்பினர்களுக்குச் சலுகை அளிக்கும் வியாபார நிறுவனங்களின் தகவல்களுடன் ஒரு கைப்பேசிச்  செயலியை (Android App) அறிமுகப்படுத்தினார்.

ஒரு காலத்தில் நம்முடைய விழாக்களெல்லாம் எப்படிக் கொண்டாடப்பட்டன என்ற மகிழ்ச்சியான அனுபவத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் விழாவாக அமைந்திருந்தது டல்லாஸ் சித்திரைத் திருவிழா!

விழா முடிந்து வீடு திரும்பும் கணத்தில் அனைவரின் மனங்களிலும் அளவற்ற மகிழ்ச்சியும், அடுத்த விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் ஒருசேரப் பிரதிபலித்தன.