Published:Updated:

அவதார புருஷர், ஆன்மிகவாதி, சீர்திருத்தவாதி, மகாஞானி... ஸ்ரீராமாநுஜர் யார்? #SriRamanujar

அவதார புருஷர், ஆன்மிகவாதி, சீர்திருத்தவாதி, மகாஞானி... ஸ்ரீராமாநுஜர் யார்? #SriRamanujar
அவதார புருஷர், ஆன்மிகவாதி, சீர்திருத்தவாதி, மகாஞானி... ஸ்ரீராமாநுஜர் யார்? #SriRamanujar

`பெருமைமிக்க இந்தப் புண்ணிய பாரதத்தில் எண்ணற்ற மகான்கள் அவதரித்திருக்கிறார்கள். அவர்களில் ஒப்புவமை இல்லாத தனிச் சிறப்புப் பெற்றவர் அந்த மகான். ஆன்மிகக் கடலாகத் திகழ்ந்தாலும், ஏழை எளிய மக்களிடமும், சாதியின் பெயரால் ஒதுக்கப்பட்டவர்களிடமும் கருணையும் அன்பும் கொண்டவர். `மக்களுக்காகவே கோயில்’ என்று கூறி ஆகமக் கோட்பாடுகளை எளிமைப்படுத்தியவர். எல்லோரும் ஆலயத்துக்குச் சென்று வழிபட வழிவகுத்தவர். `ஆண்டவனின் முன்பு அனைவரும் சமம்’ என்று ஏழை எளியவர்களிடம் இரக்கம் கொண்டிருந்தவர் அவர்...’ என்று சுவாமி விவேகானந்தரால் பல இடங்களில் சிலாகித்துப் பெருமைப்படுத்தப்பட்ட அந்த மகாஞானி ஸ்ரீராமாநுஜர். இன்று (21-04-2018) ஸ்ரீராமாநுஜரின் திரு அவதார தினம் கொண்டாடப்படுகிறது.


ஸ்ரீமன் நாராயணனின் அணுக்கத் தொண்டராகவும், படுக்கையாகவும் இருப்பவர் ஸ்ரீஆதிசேஷன். இவர் ராமாவதாரத்தில் ஸ்ரீராமரின் தம்பி லட்சுமணராகவும், கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் அவதரித்தவர். கலியுகத்தில் சகலரும் சரணாகதி மூலமாக பகவானை அடையச் செய்வதற்காக, ஶ்ரீராமாநுஜராக அவதரித்தார். அவதார புருஷராகப் பிறந்த ஸ்ரீராமாநுஜர் பெருமாளுக்கு உரிய கைங்கர்யங்களை மட்டும் செய்யாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பழைமைவாதம் மண்டிக்கிடந்த அந்தக் காலத்திலேயே புரட்சிகரமான சீர்திருத்தங்களை மக்களிடையே ஏற்படுத்தியவர். ஸ்ரீராமாநுஜரின் ஆன்மிகம் மற்றும் சமயப் பணிகள் குறித்து, ஆன்மிகச் சொற்பொழிவாளர் மதுசூதனனிடம் கேட்டோம்...

``ஆழ்வார்களுக்கு அடுத்து வைணவத்தில் உயர்ந்தநிலையை அடைந்தவர் ஸ்ரீராமாநுஜர். தமிழ் வேதம் செய்த நம்மாழ்வாரைப்போலவே இவரையும் உலகம் கொண்டாடுகிறது. பெருமாளிடமிருந்தே `சகல லோகங்களுக்கும் உடையவர்' என்ற பட்டம் பெற்றவர். தன்னைப் பற்றி எண்ணாமல் மக்களைப் பற்றியே சிந்தித்த மகாஞானி. அதனாலேயே தமக்கு ஓதப்பட்ட மகா மந்திரமான எட்டெழுத்தின் மகத்துவத்தை மக்களுக்கும் உபதேசித்தார். அதுமட்டுமா? `ஸ்ரீமன் நாராயணனை வணங்கவும், தொண்டு செய்யவும் அனைவருக்குமே உரிமை உண்டு’ என முழங்கி, சகல மக்களையும் வைணவ வழிக்கு மடை மாற்றியவர் இந்த மகான். திருக்கச்சி நம்பிகளிடம் உபதேசம் பெற்ற இவருக்கு, உறங்காவில்லி, பொன்னாச்சி, கூரத்தாழ்வான், அவருடைய மனைவியான ஆண்டாளம்மையார் ஆகியோர் சீடர்களாக இருந்தனர்.  

ஒரு சமயம் திருமலை திருப்பதிக்கு ஶ்ரீராமாநுஜர் சென்றிருந்தபோது, அவருக்கு வழிகாட்டிய ஒரு விவசாயியை சாஷ்டாங்கமாக வணங்கினார். `திருமலைக்கு வழிகாட்டிய திருவாளர்' என்று தனது சீடர்களிடம் அந்த விவசாயியைப் பற்றிப் பெருமை பேசினார். திருநாராயணபுரம் பெருமாள் கோயிலில் `திருக்குலத்தார்’ எனப்படும் பட்டியலின மக்களை வணங்க அனுமதித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது ஒரு பெரிய புரட்சி என்றே சொல்லலாம். வைணவத்தில் சகலரும் பெருமாளின் பிள்ளைகள்தான் என்று சொல்லி பல இனத்தவரையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டவர் இவர். 

பெண்ணடிமைத்தனம் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில், ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளை உயர்த்திப் பிடித்து பெருமை சேர்த்தவர் ஶ்ரீராமாநுஜர். பெருமாள் வீதியுலா வரும்போதெல்லாம் அவர் பாடி மகிழ்ந்தது ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்களைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தம்மை ஆண்டாளின் சகோதரராகவே பாவித்துக்கொண்ட மகான் அவர். 

தமிழுக்கு இவர் செய்த சேவைகள் அநேகம். எல்லா ஆலயங்களிலும் வடமொழி வேதங்களே ஓதப்பட்டு வந்த நிலையில், இவரே தமிழ் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தங்களை ஓதச் செய்தவர். வைணவத்தில் இருந்த பல தமிழ்ப் பாடல்களைக் குறிப்பாக, `திருவாய்மொழி’ போன்ற பாடல்களின் உரைகளை ஏட்டில் படியெடுத்துவைத்துப் பாதுகாத்தவர். 

ஆலயங்களில் அப்போதிருந்த பல கடினமான வழிபாட்டு நியதிகளை மாற்றி, எளிய வகையில் எல்லோருக்கும் புரியும் வகையில் மாற்றியமைத்தவர்.


`ஸ்ரீமன் நாராயணனை அடைய சரணாகதி ஒன்றே போதுமானது’ என்று அனைவருக்கும் உணர்த்தியவர் ஶ்ரீராமாநுஜர். பெரும் மன்னர்கள்,

செல்வந்தர்கள் வசமிருந்த ஆலயங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகப் பொறுப்பையேற்று, கோயில் நிர்வாகங்களை கவனிப்பதற்குத் தகுதி வாய்ந்தவர்களைப் பொறுப்பாளர்களாக நியமித்து, ஶ்ரீரங்கம் ஆலயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தார். தாம் மேற்கொண்ட சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியாத நிலை உண்டானபோது, வருத்தம் மேலிட்டு சாத்விக வழியில் உண்ணா நோன்பிருந்து தம்மை வருத்திக்கொண்டவர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உண்ணா நோன்பு எனும் ஆயுதம் கொண்டு எதிர்ப்புகளை வென்றவர். இப்படிப் பல நூறு சமூக சீர்திருத்தங்களைச் செய்து 120 ஆண்டுகள் வாழ்ந்த பூரண ஞானி. அவரை ஆன்மிக குருவாக மட்டுமன்றி, சிறந்த சீர்திருத்தவாதியாகவும் போற்றலாம். அவரின் வழிப்படியே எந்த உயிரிலும் பேதம் பார்க்காமல் ஸ்ரீமன் நாராயணனை நாம் சேவிக்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் மகா சேவை'' என்றார். 

ஏழை எளியவர்களின் நன்மைக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காகவும் அரும்பணியாற்றிய மகான் ஶ்ரீராமாநுஜரின் திருவடிகளைச் சேவித்து, அவருடைய அருளுடன் ஶ்ரீமன் நாராயணனின் திருவருளையும் சேர்த்துப் பெற்று சிறப்புற வாழ்வோம்!