Published:Updated:

திருமண வரம், நிறைவான வாழ்க்கை அருளும் மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம்! #VikatanPhotoStory

திருமண வரம், நிறைவான வாழ்க்கை அருளும் மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம்! #VikatanPhotoStory
திருமண வரம், நிறைவான வாழ்க்கை அருளும் மதுரை ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம்! #VikatanPhotoStory

இந்த நாளில் தாலிக்கயிறு மாற்றிக்கொள்வது நல்லது... ஏன்?

பார்வதி கல்யாணம், லட்சுமி கல்யாணம், பத்மாவதி கல்யாணம் என்று பல தெய்வத் திருமணங்களைப் பற்றி புராணங்கள் விவரிக்கின்றன. இல்லறத்தின் அவசியத்தை, பெருமையை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகவே இத்தகைய தெய்வத் திருமணங்கள் நடைபெற்றன.


மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களின் இல்லற வாழ்க்கையைச் சிறக்கச் செய்யவுமே புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் தெய்வத் திருமணங்கள் இன்றும் கோயில்களில் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. 


திருமண வரம் தரும், திருமண வாழ்க்கையில் இருக்கும் சிக்கல்களைப் போக்கும் தெய்வத் திருமணங்களில் மீனாட்சி திருக்கல்யாணம் இன்று மதுரையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


தேசம் முழுவதும் தன் ஆளுகைக்கு உட்படுத்த திக்விஜயம் செய்த மீனாட்சி, கயிலையில் ஈசனைக் கண்டதும் அவரை மணந்துகொள்ள விரும்பினார். 


மீனாட்சியின் விருப்பத்தை நிறைவேற்றத் திருவுள்ளம் கொண்ட ஈசனும் சௌந்திரபாண்டியனாக மதுரைக்கு வந்து மீனாட்சியை மணம் புரிந்துகொள்வார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை மாதம் நடைபெற்று வருகிறது.


மதுரைக்குப் பெருமை சேர்க்கும்  மீனாட்சி திருமண வைபவத்தைக் காண, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையிலேயே குவிந்தனர்.


இன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்கள்.


வீதியுலா முடிந்ததும் இருவரும் திருக்கோயிலின் முத்துராமையர் மண்டபத்தில் எழுந்தருளி, கன்னி ஊஞ்சல் ஆடி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். அங்கேதான் தேவாதி தேவர்கள் ஒன்று கூடி, மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருமணத்தை பேசி முடிப்பதாக ஐதீகம்.


திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், அம்பிகையும் ஐயனும் புதுப் பட்டு உடுத்தி, அழகிய ஆபரணங்கள் பூண்டு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்துக்கு எழுந்தருளினார்கள். பின்னர் சுந்தரேஸ்வரரின் சார்பில் ஓர் அர்ச்சகர் மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, மீனாட்சி அம்மன் சார்பில் ஓர் அர்ச்சகர் மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் அணிவிக்க, மீனாட்சி திருக்கல்யாணம் இனிதே நிறைவு பெற்றது..


மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், மீனாட்சி அம்மனை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளினர்.


மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும்போதே, பக்தர்கள் கூட்டத்தில் இருக்கும் சுமங்கலிப் பெண்கள், புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொள்வார்கள். மங்களகரமான இந்த நாளில் புதுத் தாலிக் கயிறு மாற்றிக்கொண்டால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. சுமங்கலிப் பெண்களுக்கு புதுத் தாலிக் கயிறுகளை கோயில் நிர்வாகமே வழங்கியது.


கோயிலுக்குள் செல்ல முடியாத பக்தர்களும், மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க இயலாதவர்களும் கோயிலுக்கு வெளியில் பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் காணொளித் திரைகளில் இந்த நிகழ்வை தரிசித்து மகிழ்ந்தார்கள்.


திருமண வைபவம் கண்ட மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தங்கள் வீட்டு பெண்ணாகவும், மாப்பிள்ளையாகவும் பாவித்து, பக்தர்கள் கூட்டம் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை மொய் எழுதி மகிழ்ச்சியடைந்தனர்.


மீனாட்சி மணக்கோலம் காணும் திருநாளில் மதுரை  மாநகர மக்களிடமிருந்து பட்டாடைகள், ஆபரணங்கள், மலர்க்குவியல்கள்... என சீர்வரிசைப் பொருள்களைக் கொண்டு வந்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.

திருக்கல்யாணம் என்பது வெறும் சமயச் சடங்கு அல்ல. ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் ஒரு குறியீடு. 'பசு எல்லா மலங்களையும் விலக்கிவிட்டு பதியோடு கூடும் அடையாளம்’ என்கின்றன ஆன்மிக நூல்கள். 

மதுரை மீனாட்சி - சொக்கநாதர் திருமணத்தை முன்னிட்டு, சிம்மக்கல் சேதுபதி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடக்கும் திருமண விருந்து அற்புதமானது. ஐம்பதாயிரம் பேர்களுக்கு விருந்து படைக்கும் சாதனை நிகழ்வு இது. இன பேதமில்லாமல் அனைவரும் கலந்துகொண்டு அறுசுவை விருந்தை உண்டு மகிழ்ந்தார்கள்.

இன்றைய நாளில் மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருமணத்தைக் கண்டுகளிக்கும் மதுரை மக்கள், தங்கள் வீட்டில் திருமணம் நடந்ததைப்போலக் கொண்டாடி மகிழ்ந்தனர். வீதியெங்கும் கோலமிட்டு, விளக்கேற்றிக் கொண்டாடினர். 

திருமணம் முடித்த மீனாட்சி - சுந்தரரேஸ்வரர்,  இரவு வீதி உலா வந்து மக்களுக்கு அருளாசி தர, சுந்தரேஸ்வரர்  யானை வாகனத்திலும், அன்னை மீனாட்சி ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வரவிருக்கின்றனர்.

மண்ணுலகமும் விண்ணுலகமும் போற்றி மகிழ்ந்த அம்மையப்பனின் திருமணக் கோலத்தை கண் குளிர தரிசிப்பவர்களுக்கு நிறைவான வாழ்க்கையும், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நல்ல வரனும் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை நேரில் தரிசித்தவர்களும், தரிசித்தவர்கள் அந்த வைபவத்தின் சிறப்புகளைப் பற்றிச் சொல்லக் கேட்டவர்களும் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ அன்னை மீனாட்சி - ஐயன் சுந்தரேஸ்வரரை வணங்குகிறோம். 

அடுத்த கட்டுரைக்கு