Published:Updated:

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? #VikatanPhotoStory

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? #VikatanPhotoStory

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? #VikatanPhotoStory

சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி?

Published:Updated:
சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? #VikatanPhotoStory

'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்று சொல்வதற்கேற்ப வடிவமைக்கவும், வணங்கவும் எளிமையாக இருப்பவர் விநாயகப் பெருமான். எளிமையான மூர்த்தி என்றாலும், பெரும்  கீர்த்தியைக் கொண்ட முழுமுதற்கடவுள் இவர். இவரை விலக்கிவிட்டு எந்த வழிபாட்டையும் மேற்கொள்ளவே முடியாது என்பதுதான் இவரின் சிறப்பம்சம். 'சங்கஷ்டம்' என்றால், கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களையும் நீக்கும் சதுர்த்தி விரதம் இன்று கடைப்பிடிக்கப்படவிருக்கிறது. பௌர்ணமியை அடுத்த நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைக்கு மாலையும் இரவும் சேரும் நேரத்தில் விநாயகருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.

விநாயகரைப் போலவே, விரதங்களுக்குள் முதன்மையானதும் எளிமையானதும் சதுர்த்தி விரதம்தான். முதன்முதலில் சதுர்த்தி விரதம் கடைப்பிடித்த பிறகுதான், கிருத்திகை, ஏகாதசி, பௌர்ணமி போன்ற மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதும் பொதுவான நியதி.

அடக்கமின்றி தன்னைப் பார்த்து சிரித்த சந்திரனை, ஒளியில்லாமல் போகும்படி சபித்தார் விநாயகர். கடும் தவத்துக்குப் பிறகு ஒரு சதுர்த்தி தினத்தில், சந்திரனின் சாபத்தை நீக்கினார் கணநாதர். எனவே, சந்திர பலம் பெற விரும்புவோர் சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஸ்ரீகிருஷ்ணர், பிரம்மா, புருசுண்டி முனிவர், செவ்வாய் ஆகியோர் இந்தச் சதுர்த்தி விரதத்தை மேற்கொண்டு வரம் பெற்றார்கள்’ என்கின்றன ஞான நூல்கள்.

ஆவணி மாதத்தில் வருகிற விநாயக சதுர்த்தி தினத்தில்தான், சுக்லபட்ச சதுர்த்தி விரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மாதம்தோறும் வருகிற சதுர்த்தி நாள்களில் விரதமிருந்து விநாயகரை வழிபடலாம். 11 சதுர்த்தி தினங்களில் விரதமிருந்து சதுர்த்தி  விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

சதுர்த்தி அன்று, காலையில் குளித்துவிட்டு, அருகிலுள்ள ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.  பிள்ளையாரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து, விநாயகருக்கு அர்ச்சனை செய்து, நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டும், தோப்புக்கரணம் போட்டும் விநாயகரை வணங்க வேண்டும்.

கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், ஆழாக்குப் பச்சரிசியை ஊறவைத்து, அத்துடன் சிறிது வெல்லத்தூளும் ஒரு வாழைப்பழமும் சேர்த்துப் பிசைந்து, பசுவுக்குக் கொடுக்க வேண்டும். கணபதியோடு பசு வழிபாடு செய்வது கூடுதல் நன்மை தரும்.

வீட்டிலேயே மோதகம், சித்திரான்னங்கள், பால், தேன், கொய்யா, வாழை, நாவல்,  கொழுக்கட்டை, சுண்டல் என்று தயாரித்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்து வழிபடலாம்.

விநாயகருக்குப் பிடித்த இலை வன்னி இலை. வன்னி இலைகளால் விநாயகரைப் பூஜிப்பது சிறப்பான பலன்களைத் தரும். அதிலும் வன்னி மரத்தடியே உறையும் கணபதி ஆனந்தமயமானவர். நினைத்த காரியம் தடையில்லாமல் நடக்க விரும்புபவர்கள், இந்த வன்னி விநாயகரை வலம் வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் என்பது ஐதீகம்.

மரத்தடி, குளக்கரை, ஆற்றங்கரை ஆகிய இடங்களில் இருக்கும் கணபதி விசேஷமானவர். வெட்டவெளியில் வீற்றிருக்கும் கணபதியை நீராட்டி வணங்குவது நமது தொன்றுதொட்ட வழிபாடாக இருந்து வந்திருக்கிறது. 'நீராட்டி, பூச்சூட்டி, தூப தீபமிட்டு தெருப் பிள்ளையாரை  வணங்கினால் தீராத வினையெல்லாம் தீரும்’ என்பார்கள்.  

ஒருமுறை பிரம்மனால் தொழுநோய் பெற்ற நவகிரகங்கள், கணபதியை பூஜித்து குணம் பெற்றார்கள். மனிதர்கள் மட்டுமன்றி சகல தேவர்களுக்கும் அருளியவர் கணபதிப் பெருமான். 

விநாயகர் வடிவத்துக்குள் பிரபஞ்சமே வியாபித்து நிற்பதைக் காட்டும்விதமாக, அரிசி மாவுக்குள் தேங்காயும் வெல்லமும் கலந்த இனிப்பான பூரணத்தை வைத்து, முதன்முதலில் விநாயகருக்குப் படைத்து அவரின் அருளைப் பெற்றார் ரிஷிபத்தினி அருந்ததி. 

அனலாசுரனை விழுங்கியதால், கணபதிக்கு ஏற்பட்ட வயிற்றுத் தீயின் உஷ்ணத்தைக் குறைப்பதற்காக சப்த ரிஷிகளால் விநாயகருக்கு அறுகம்புல் சமர்ப்பிக்கப்பட்டது. அதையே நாம் இன்றும் கடைப்பிடிக்கிறோம்.

தன்னை மதிக்காமல் சென்ற பிரம்ம தேவரின் கர்வத்தை அடக்க நினைத்த விநாயகர், அவருக்குத் தன் சுயரூபத்தைக் காட்டி அனுக்கிரகம் செய்தார். தன் கர்வம் அடங்கிய பிரம்மதேவர், நெற்றிப்பொட்டில் குட்டிக்கொண்டு வணங்கினார். அதுவே இன்றும் தொடர்கிறது. 

தோப்புக்கரணம் போடுவதென்பது சிறந்த யோகப் பயிற்சி. ஒருமுறை விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை விழுங்கிவிட்டார் விநாயகர். விநாயகரைச் சிரிக்க வைத்தால்தான் சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற முடியும். எனவே, விஷ்ணு தோப்புக்கரணம் போட்டு விநாயகரைச் சிரிக்கவைத்து தன்னுடைய சுதர்சன சக்கரத்தைத் திரும்பப் பெற்றார். இந்த விஷயத்தை காஞ்சி பெரியவர் தம்முடைய அருள்மொழியில் கூறியிருக்கிறார்.

பிறப்பிலேயே சகல ஞானங்களையும் பெற்ற கணபதிக்குக் குரு என்று எவருமே இல்லை. அவரே ஞான உருவானவர். அதனால்தான்  கல்வியில் சிறந்து விளங்கவும், தேர்வில் வெற்றி பெறவும் எல்லாக் குழந்தைகளுக்கும் கணபதி அருளுகிறார்.

திருச்சியில் அருளும் தாயுமானவ ஸ்வாமியைப்போலவே சுகப் பிரசவத்துக்கு அருள்கிறார் மலையின் கீழுள்ள மாணிக்க விநாயகர். கர்ப்பிணிப் பெண்கள் பலரும் இங்கே வந்து மாணிக்க விநாயகரை வேண்டி, தியானம் இருப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இங்கு கணபதி சிவ வடிவமாக அருளுகிறார். 

தன்னை நாடி வரும் பக்தர்களின் செல்வநிலையை உயர்த்தி, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அருளும் கற்பகத் தருவாக, பிள்ளையார்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் கற்பக விநாயகர், யோக கணபதியாக திருமகளின் அம்சம் கொண்டு அருள்கிறார்.


 
 சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை,
'மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே...’

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம்.