Published:Updated:

அலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன?

அலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன?
அலகாபாத் இனி `பிரயாக் ராஜ்...' பெயர் மாற்றப் பின்னணி என்ன?

ந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தின் பெயர், 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்படவிருக்கிறது. இந்தியாவில் மக்கள்தொகை அதிகம்கொண்ட 13-வது மாவட்டமாக அலகாபாத் இருக்கிறது. அலகாபாத் நகரம், இந்துக்களின் புனிதத் தலம்.  இங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கின்றன. `திரிவேணி சங்கமம்’,` பிரயாக்’ என்றெல்லாம் அழைக்கப்படும் அலகாபாத் நகரம், வேதங்களும், ராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்கள் கொண்டாடும் புண்ணிய பூமி!


நீண்ட நெடுங்காலமாக, 'பிரயாக்' அல்லது 'பிரயாகை' என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில் 1580-ம் ஆண்டு, மாமன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு `இலாஹாபாத்’ என்று பெயரிட்டார். பின்னர், ஷாஜகான் காலத்தில் `அலகாபாத்’ என்று மாறியதாக வரலாறு குறிப்பிடுகிறது.

மூன்று புனித நதிகளும் சங்கமிக்கும் இந்தப் புண்ணிய பூமியில்தான் உலகப் புகழ்பெற்ற `கும்பமேளா’ திருவிழா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறும் இந்த விழாவில், லட்சக்கணக்கான மக்கள் கூடி, திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள். ஹரித்வார், உஜ்ஜயினி மற்றும் நாசிக் நகரங்களில் கும்பமேளா நடைபெற்றாலும்கூட, அலகாபாத் கும்பமேளா மிகவும் விசேஷமானது. அலகாபாத்தில் நடைபெறும் கும்பமேளாவுக்கு, யுனெஸ்கோவின் பாரம்பர்ய கலாசார விழாவுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதே இதற்குச் சான்று. 

தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்த பாற்கடலில் இருந்து அமுதம் வெளிப்பட்டது. சாகா வரமளிக்கும் அமுதத்தை அடைவதில் தேவ - அசுரர்களிடையே மோதலும் தொடங்கியது. அப்போது திருமால், கருடனோடு இணைந்து, அசுரர்களை வீழ்த்தி, அமுதத்தை மீட்டு வந்தார். விரைவாக வந்த வேளையில், அமுதத்தின் துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன என்றும், அதில் பிரயாகையும் ஒன்று என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரிவேணி சங்கமத்தில் நீராடினால், அப்போது அங்கு பொங்கிப் பெருகும் அமுதம், நீராடுபவர்களை சகல பாவங்களிலிருந்து விடுவிப்பதாக ஐதீகம். மேலும், நீண்ட ஆயுளையும் நீங்காத புகழையும் பெறுவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. லட்சோப லட்சம் மக்களின் அபிமானத்தைப் பெற்ற நகரம் அலகாபாத். 


ஆகாய வாகினியாகக் கரை புரண்டோடிய கங்கை, பகீரதனின் வேண்டுதலுக்காக பூமிக்கு வர, ஈசனின் திருமுடியை அடைந்தாள். பின்னர், ஈசனின் திருமுடியிலிருந்து  இமயத்தில் இறங்கி, வழியெங்கும் பக்தர்களின் பாவங்களை நீக்கியபடி அலகாபாத் வருகிறாள். 
சூரியனின் மகளாகவும், யமதர்மராஜரின் தங்கையாகவும் பிறந்தவள், யமுனை. அந்த யமுனை நதியில் நீராடினால் மரண பயம் நீங்கும், வியாதிகள் போகும் என்பது நம்பிக்கை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மகிழ்ந்து விளையாடிய பெருமைக்கு உரியவள் யமுனை. எனவேதான் கண்ணனைப் பாடும் ஆண்டாள், 'தூயப் பெருநீர் யமுனைத் துறைவன்' என்று யமுனையைச் சிறப்பித்துப் பாடியிருக்கிறாள். இமயத்தின் யமுனோத்ரி பகுதியிலிருந்து கிளம்பும் யமுனை நதியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைல்களைக் கடந்து அலகாபாத் வருகிறாள்.

 
சரஸ்வதி நதி, ரிக் வேதம் கொண்டாடும் புண்ணிய நதி. நான்முகனின் தேவி சரஸ்வதியின் பிரவாகமே இந்த நதி. ஆகாயவாகினியாக தேவர்களுக்கு மட்டுமே அருள்பாலித்த இந்த நதி, வேத காலத்தில் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக இமயத்தில் இறங்கித் தவழ்ந்தோடினாள். பின்னர் கால மாற்றத்தால் வெகுகாலத்துக்கு முன்னரே சுருங்கி மறைந்தாள் என்றும் சொல்லப்படுகிறது. எனினும், அந்தர்வாகினியாக வரும் சரஸ்வதியும் பிரயாகையில் கங்கை, யமுனையுடன் சங்கமிப்பதாக ஐதீகம். அதன் காரணமாகத்தான் இந்தப் பகுதி `திரிவேணி சங்கமம்’ என்று போற்றப்படுகிறது. 


இப்படி புராண, வரலாற்றுப் பெருமைகள் பல கொண்ட அலகாபாத் நகரமும், அது அமைந்திருக்கும் மாவட்டமும் மீண்டும் அதன் புராணப் பெயரான 'பிரயாக் ராஜ்' என்று மாற்றப்பட உள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதலமைச்சர்  கேசவ் பிரசாத் மௌர்யா அறிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அர்த்த கும்பமேளா (பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது மகா கும்பமேளா; ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பது அர்த்த கும்பமேளா) விழாவுக்குள் பெயர் மாற்றப்படும் என்றும், விழாவுக்கான அழைப்பிதழ், பேனர்கள் எல்லாமே புதிய பெயரில் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.