Published:Updated:

மகிழ்ச்சி பொங்கும் ஈகைத் திருநாள்... பின்பற்ற வேண்டிய சட்டங்கள், ஒழுங்குகள்! #Ramzan

மகிழ்ச்சி பொங்கும் ஈகைத் திருநாளில் பின்பற்ற வேண்டிய சட்டங்கள், ஒழுங்குகள் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

மகிழ்ச்சி பொங்கும் ஈகைத் திருநாள்... பின்பற்ற வேண்டிய சட்டங்கள், ஒழுங்குகள்! #Ramzan
மகிழ்ச்சி பொங்கும் ஈகைத் திருநாள்... பின்பற்ற வேண்டிய சட்டங்கள், ஒழுங்குகள்! #Ramzan

ள்ள அள்ள நன்மைகள் கொழிக்கும் மாதம் நம்மைவிட்டுப் போகிறது. மெள்ள மெள்ளப் போகிறது. அமல்களின் மழையில் நம் ஈமானை உற்சாகப்படுத்திய மாதம், அமைதியாகப் போகிறது. மனசு அமைதியிழக்கிறது. ரமலான் நோன்புகளை முழுமைப்படுத்துவதற்கு அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அவனைப் புகழ வேண்டும். இதற்குத்தான் ஈகைத் திருநாள்.

பெருநாள் சட்டங்கள்!
ஈகைத் திருநாள் தொழுகை ஆண், பெண் ஒவ்வொருவரின் கடமை. இந்தத் தொழுகை ஒரு சுன்னத்துதான் என்று நினைக்க முடியாது. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் இதைத் தவறாமல் தொழுதது மட்டுமன்றி, மக்களையும் தொடர்ந்து ஏவினார்கள். எந்தளவுக்கு என்றால், பெண்களையும் தொழுகைத் திடலுக்கு வரும்படிக் கட்டளையிட்டார்கள்.

உம்மு அத்திய்யா (ரலி) சொல்கிறார்கள்: `(பெருநாளில் பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்லுமாறு (நபியவர்களால்) கட்டளையிடப்பட்டோம். அப்போது மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் மணமுடித்த பெண்கள், திரைக்குள்ளிருக்கும் (குமரிப்)பெண்கள் ஆகியோரையும் புறப்படச் செய்யும்படி கட்டளையிடப்பட்டோம்.’ (ஸஹீஹுல் புகாரீ 981)

இந்த நபிவழி இன்று பெரும்பாலான இடங்களில் அமலில் இல்லாதது பெரிய கைசேதம்தான். முடிந்தவரை இதை உயிர்ப்பிக்க ஊர் ஜமாஅத்தினரும் மற்றவர்களும் முயல வேண்டும். பெண்கள் பெருநாள் திடலுக்குச் செல்லும்போது, அவர்களுக்கான எல்லாச் சட்டங்களையும் கடைப்பிடிக்கவேண்டியது முக்கியம். அலங்காரங்கள் செய்துகொண்டு, நறுமணம் பூசியபடி செல்லக் கூடாது. பர்தா அணிய வேண்டும். அந்நிய ஆண்களுடன் செல்லக் கூடாது. குடும்பத்தின் பொறுப்பாளர்களாக உள்ள ஆண்கள் இவ்விஷயத்தில் தங்கள் பெண்களுக்குச் சட்டங்களை எடுத்துச் சொல்லி, அவர்கள் சரியாக இருக்கிறார்களா என்பதைக் கவனித்து அழைத்துச் செல்ல வேண்டும்.
பெருநாள் தொழுகைக்குப் பாங்கு இகாமத் இல்லை. முன் பின் தொழுகைகள் இல்லை. தொழுகைக்குப் பின்னர் குத்பா எனும் சொற்பொழிவு அமையும்.

இப்னு அப்பாஸ் (ரலி) சொல்கிறார்கள்: `நான் நபி (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்பு பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்துபவர்களாக இருந்தார்கள். அதன் பிறகே அவர்கள் உரை நிகழ்த்துவார்கள்.’ (ஸஹீஹுல் புகாரீ 979)
பெருநாள் உரையை தொழுகைக்கு முன்பு தொடங்குவது நபிவழிக்கு முரணானது. அத்துடன், அந்த உரையின் நடுவில் அமர்ந்து எழுவதும், உரையைத் தொடங்கும்போது தக்பீர் சொல்லித் தொடங்குவதும், கட்டாயம் மக்கள் அனைவரும் உரையைக் கேட்க வேண்டும் என்று சட்டம் சொல்வதும் கூட நபிவழிக்கு முரணானவையே.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: `நபியவர்கள் தம்முடைய எல்லா உரைகளையும் அல்ஹம்துலில்லாஹ் சொல்லியே தொடங்குவார்கள். இரண்டு பெருநாள் உரைகளை அவர்கள் தக்பீர் சொல்லித் தொடங்கியதற்கு ஆதாரபூர்வமான ஒரு ஹதீஸ்கூட இல்லை.’ (ஸாதுல் மஆது 1/447,448)

அப்துல்லாஹ் இப்னு அஸ்ஸாஇப் (ரலி) கூறுகிறார்கள்: `நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள்தொழுகையில் கலந்துகொண்டேன். அப்போது அவர்கள் தொழுகையை முடித்தவுடன், `நிச்சயமாக நாம் சொற்பொழிவாற்றுவோம். யார் உட்கார விரும்புகிறாரோ, அவர் சொற்பொழிவுக்காக உட்காரட்டும். யார் போக விரும்புகிறாரோ, அவர் போகட்டும்’ என்று சொன்னார்கள்.’ (சுனன் அபூதாவூது 1157, ஸஹீஹ் அல்ஜாமிஃ 2289)

பெருநாளில் விரும்பத்தக்க ஒழுங்குகள்...

* பெருநாள் தொழுகைக்காகக் குளித்துக்கொள்வது

* சிறந்த ஆடையை உடுத்திக்கொள்வது

* தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் பேரீச்சம் பழங்களை உண்ணுவது

* ஒரு பாதையில் சென்று வேறு பாதையில் திரும்புவது

*  அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி தக்பீர் சொல்வது

* வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்வது.

பெருநாளும் பொழுதுபோக்கும்...

ஆயிஷா (ரலி) சொல்கிறார்கள்: `இரு அன்சாரிச் சிறுமியர் புஆஸ் போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரையொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகிகள் இல்லை. (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், `அல்லாஹ்வின் தூதர் வீட்டிலேயே ஷைத்தானின் இசைக்கருவிகளா?’ என்று கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும். அப்போது (படுத்துக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், `(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் பெருநாள் நாள் உண்டு. இது நமது பெருநாள்’ என்று கூறினார்கள்.’ (ஸஹீஹுல் புகாரீ 952)
`தஃப்’ என்பது சலங்கைகள் இல்லாத ஒரு பக்கம் திறந்த கொட்டு. அதை அடித்தால் `டொக்... டொக்...’ என்று சத்தம் எழும். அந்தச் சிறுமிகள் அதை அடித்தபடி பாடிக்கொண்டிருந்தார்கள்.


இசைக்கருவிகள் ஹறாம் என்பதை நன்கு தெரிந்திருந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் அதைப் பார்த்தவுடன் தடுக்கிறார்கள். ஆனால் நபியவர்களோ `இது நமது பெருநாள்’ என்ற காரணம் கூறி ஒரு பொழுதுபோக்குக்காகச் சிறுமிகளுக்கு அதை அனுமதிக்கிறார்கள். (பெரியவர்களுக்கு அல்ல, நம்மூர் பக்கீர் ஷா மாதிரி ஒவ்வொருவரும் ஒரு கொட்டு எடுத்துத் தட்டிக்கொண்டிருக்கக் கூடாது.)
நாம் என்ன செய்ய வேண்டும், குழந்தைகளை இப்படி விளையாடவிட்டு ரசிக்க வேண்டும். அவர்களிடம் நாம் விளையாட வேண்டும். மார்க்கம் அனுமதித்த முறையில் பொழுதுபோக்க வேண்டும். இன்று நிறையப் பேர் பெருநாள் தினங்களில் ஹறாமைக் கொண்டாடுகிறார்கள். அல்லாஹ் தடைசெய்த, அவன் வெறுக்கின்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். உதாரணமாக,

 * சினிமாவுக்குப் போவது, இசைக் கச்சேரி, கேலிக்கைகள் நடக்கும் இடங்களுக்குப் போவது,

* ஆண்களும் பெண்களும் சந்தித்துக்கொள்கிற இடங்களுக்குப் போவது, இறை மறுப்பாளர்களின் ஆடை, அலங்காரங்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒப்பாக நடப்பது,

 * பெண்கள் தங்களைச் சிங்காரித்துக்கொண்டு ஊர் சுற்றுவது, பர்தா அணியாமல் இருப்பது, பர்தா அணிந்தாலும் நறுமணம் பூசியபடி வெளியே செல்வது,

 * காசு பணத்தை விரயம் செய்வது, ஆடம்பரமாகச் செலவழிப்பது,

 * ஆண்கள் அன்று தாடியைச் சிரைத்துக்கொள்வது, அந்நியப் பெண்களிடம் கைகுலுக்குவது, மதுபானம் குடிப்பது, பட்டாடைகள் அணிவது, இப்படிப் பல ஹறாமான காரியங்களைப் பெருநாளில் செய்கிறார்கள். இவற்றை எப்போது செய்தாலும் பாவமே என்றாலும், பெருநாளில் செய்வது இன்னும் கடுமையான தண்டனையைக் கொண்டு வருகிற பாவங்களாகும்.

அல்லாஹ் கண்ணியப்படுத்திய நாளை இழிவுபடுத்துகிற பாவமும், இறை மறுப்பாளர்களுக்கு ஒப்பாக நடந்த பாவமும், வரம்பு மீறிய பாவமும் இவற்றில் உண்டாகின்றன.