Published:Updated:

ஈசனுக்கே அன்னை... காரைக்கால் அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா! #ManganiFestival

காரைக்கால் மாங்கனித் திருவிழாவின் மகத்துவம் சொல்லும் கட்டுரை இது...

ஈசனுக்கே அன்னை... காரைக்கால் அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா! #ManganiFestival
ஈசனுக்கே அன்னை... காரைக்கால் அம்மையாரைப் போற்றும் மாங்கனித் திருவிழா! #ManganiFestival

புதுவை மாநிலத்திலுள்ள காரைக்காலில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா நேற்று  (திங்கட்கிழமை) மாலை மாப்பிளை அழைப்புடன் தொடங்கியது. காரைக்கால் பாரதியார் வீதியில் தனிக்கோயிலில் காரைக்கால் அம்மையார் அருள்பாலிக்கிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஸ்ரீபரமதத்தருக்கும், ஸ்ரீபுனிதவதியார் என்றைழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை ஈசன் பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி உலாவும், இரவு புனிதவதியாரும், பரமதத்தரும் தம்பதிகளாக முத்துச் சிவிகையில் வீதியுலா வருவதும் நடைபெறும். நாளை 27-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 3 மணி தொடங்கி 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறும்.

பின்னர் காலை 7 மணிக்கு ஈஸ்வரன், காரைக்கால் அம்மையிடம் பிட்சை வாங்கி உண்ட சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் புறப்பட்டு திருவீதி உலா செல்வார். அப்போது நகரெங்கும் கூடியிருக்கும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு, மாங்கனிகளை வாரி இறைத்து அருள்பெறுவார்கள். அதன் பிறகு நாளை மாலை 6 மணிக்கு ஈசனுக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 

மாங்கனி விழாவின் கடைசி நாளான நான்காம் நாள் (வியாழன்) அதிகாலை 5 மணிக்கு காரைக்கால் அம்மையார் எலும்புருவுடன் திருக்கயிலாயம் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த விழாவின்போது ஆலயத்தில் இருக்கும் சோமநாதப்பெருமான் ஆலயத்துக்கு வெளியே இருப்பார். அப்போது ஈசனைக் குறித்து அம்மையார் பாடியருளிய `திருவந்தாதி’, `இரட்டை மணிமாலை’ பாடல்கள் பாடப்படும். அப்படிப் பாடும்போது காரைக்கால் நகர் முழுவதுமே விளக்குகள் அணைக்கப்பட்டுவிடும். ஈசனுக்கு அருகே ஒரு தீப்பந்தம்  ஏற்றப்படும். அதைப்போலவே காரைக்கால் அம்மையாரின் அருகே ஒரு தீப்பந்தம் ஏற்றப்படும். காரைக்கால் அம்மையின் தீபம் ஈசனுக்கருகே கொண்டு வரப்பட்டு ஒன்றிணையும். அதாவது காரைக்கால் அம்மையின் ஜீவாத்மா, பரமனின் திருவடியில் கலந்துவிட்டது என்பதைச் சொல்லும் நெகிழ்ச்சியான சடங்கு அது. 

பிறப்பிலியான ஈசனால் 'அம்மையே' என்று அழைக்கப்பட்ட புனிதவதி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு, புனிதவதியின் கணவர், 'நீங்கள் தெய்வ மங்கை' என்று கூறி, புனிதவதியை விட்டுப் பிரிந்து சென்றார். இல்லற வாழ்க்கை இல்லை என்ற நிலையில் ஈசன் அருளால் இளமையையும், அழகையும் வெறுத்து எலும்பு வடிவில் பேயுருக் கொண்டார். பேயுரு வடிவில் இந்தியா முழுக்க தலயாத்திரை செய்து, கயிலாயம் அடைந்த புண்ணியவதி இந்த அம்மையார். ஒப்பற்ற சிவனடியாராக வாழ்ந்த இந்த அம்மையாரின் வாழ்க்கையையும் தொண்டுகளையும் நினைவுகொள்ளவே ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு மாங்கனி பெறுபவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தும்புரு ரிஷியின் மகளான சுமதி, ஒருமுறை சிவபூஜையில் இருந்தபோது துர்வாச மகரிஷி வந்திருப்பதை அறியவில்லை. தன்னை

வரவேற்காத சுமதி, மானிடப்பெண்ணாக பூமியில் பிறக்கட்டும் என்று துர்வாசர் சபித்தார். `சுமதி புனிதவதியாகப் பிறந்து சிவபக்தையாக மாறினாள்’ என்று புராணங்கள் கூறுகின்றன. இசைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் தும்புருவின் மகளாக முன்னர் அவதரித்தவர் என்பதால், இவரது திருமுறைப்பாடல்கள் யாவும் பைந்தமிழ்ப் பண்களால் எழுதப்பட்டன. இசைத்தமிழால் ஈசனைப் பாடியவர் என்பதால், காரைக்கால் அம்மை  `இசைத்தமிழின் அன்னை’ என்றும் வணங்கப்படுகிறார். 

தேவாரம் தோன்றும் காலத்துக்கு முன்னரே இந்த அம்மையாரின் பாடல்கள் பதிக முறையில் இயற்றப்பட்டன என்பதால், இவரது பாடல்களே `மூத்த திருப்பதிகம்’ எனப்படுகிறது. பதினோராம் திருமுறையில் இவரது பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இவரது வழியையொட்டியே பின்னர் வந்தவர்கள் பதிகங்கள் பாடினார்கள். `அந்தாதி’, `மாலை’ போன்ற தமிழின் சிற்றிலக்கிய வகைகளை முதன்முதலில் பாடியவர் காரைக்கால் அம்மையார்.  ஈசன் நடனமாடும்போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பவர் இவர். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றிய பெருமாட்டி காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள்,  அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை. 

காரைக்கால் தலத்தில் மட்டுமல்ல, `பேயுரு வாங்கி பேறுபெற்ற இடம்’ என்று சொல்லப்படும் குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மன் ஆலயம், கன்னியாகுமரி குகநாதேஸ்வரர் ஆலயம் ஆகிய ஆலயங்களிலும் மாங்கனித் திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. ஈஸ்வரனின் அருளால் ஆட்கொள்ளப்பட்டு, தனது எல்லா சுகங்களையும் துறந்து, நாடு முழுக்க யாத்திரை மேற்கொண்டு சிவபெருமானைப் போற்றிப் பாடியவர் காரைக்கால் அம்மையார். இவர் சைவ சமயத்தின் முன்னோடித் தொண்டராக வாழ்ந்து ஈசனோடே கலந்து பெரும்பேறு பெற்றார். காரைக்காலில் நடைபெறும் மாங்கனித் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபடுபவர்கள் எல்லா நலன்களையும் பெறுவார்கள். ஈசனை வழிபடுவதைக் காட்டிலும் அவரது தொண்டர்களை வணங்குவது சிறப்பானது என்பார்கள். 'தொண்டர் தம் உள்ளத்தில் உறைபவன்தானே ஈசன்!' காரைக்கால் அம்மையின் கழலடி போற்றி வணங்குவோம்.