Published:Updated:

சனி தோஷம்போக்கி குடும்பத்தில் வளம் பெருக்கும் கூர்ம ஜயந்தி வழிபாடு! #SriKurmaJayanthi

நாளை கூர்ம ஜயந்தி தினத்தையொட்டி கூர்ம அவதாரத்தின் நோக்கம், பெருமைகளைக் கூறும் கட்டுரை.

சனி தோஷம்போக்கி குடும்பத்தில் வளம் பெருக்கும் கூர்ம ஜயந்தி வழிபாடு! #SriKurmaJayanthi
சனி தோஷம்போக்கி குடும்பத்தில் வளம் பெருக்கும் கூர்ம ஜயந்தி வழிபாடு! #SriKurmaJayanthi

கலும் இரவும் மாறி மாறித் தோன்றி நாள்களை நடத்துவதைப் போல் நல்லவையும் தீயவையும் இணைந்தே இந்தப் பூமியை இயக்கி வருகின்றன. நன்மைகள் செய்யும் மானிடர்கள் மலிந்து தீயவர்கள் பெருகும்போதெல்லாம் யுகம்தோறும் ஸ்ரீமன் நாராயணன் அவதரித்து துஷ்ட நிக்கிரகம் செய்து காக்கிறார். இப்படி ஒன்பது அவதாரங்கள் எடுத்து இந்தப் பூவுலகை பெருமாள் ரட்சித்திருக்கிறார் என்று நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த 9 அவதாரங்களில் இரண்டாவது அவதாரமே கூர்ம அவதாரம். மற்றெல்லா அவதாரங்களும் துஷ்டர்களை சம்ஹாரம் செய்யத் தோன்றியது. ஆனால், கூர்ம அவதாரம் மட்டுமே நன்மை செய்து தேவர்கள் அமிர்தம் பெற உதவிய அவதாரம். இன்னும் சொல்லப்போனால் அற்புதமான பல விஷயங்கள் பாற்கடலில் இருந்து தோன்றி தேவர்கள் பலம் பெற உதவியதும் இந்தக் கூர்ம அவதாரம்தான். நாளை கூர்ம ஜயந்தி தினத்தையொட்டி கூர்ம அவதாரத்தின் நோக்கம், பெருமைகளைக் காண்போம்.

துர்வாச முனிவரின் தெய்விக மாலையை அலட்சியம் செய்த தேவேந்திரன், துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டான். இதனால் தனது செல்வங்களையும் பலத்தையும் இழந்தான். அவனோடு சகல தேவர்களும் பலமிழந்து துன்பப்பட்டார்கள். இந்த வேளையில் அசுரர்கள் தேவர்களைத் தாக்கி வெற்றி பெற்றனர். இழந்த செல்வங்களையும், பலத்தையும் பெற தேவர்கள் ஸ்ரீமன் நாராயணனின் ஆலோசனைப்படி பாற்கடலை ஒருபுறம் தேவர்களும், மறுபுறம் அசுரர்களும் கடையத் தொடங்கினார்கள். வாசுகி பாம்பு கயிறாகவும், மந்தர மலை மத்தாகவும் அப்போது பயன்பட்டது. பிரமாண்ட மலையின் எடை தாங்காமல் அடிக்கடி மந்தர மலை கடலில் விழுந்துகொண்டே இருந்தது. தேவர்களுக்கு உதவி செய்யத் திருவுள்ளம் கொண்ட திருமால், கூர்மமாக - பிரமாண்டமான ஆமையாக வடிவம் எடுத்து, மந்தர மலை நழுவி விடாதபடி தாங்கிப் பிடித்தார். பகவான் கூர்ம அவதாரம் எடுத்த நாள் ஆனி மாதம் தேய்பிறை துவாதசி என்று புராணங்கள் கூறுகின்றன. அதன்படி நாளை கூர்ம ஜயந்தி கொண்டாடப்பட உள்ளது.

அடக்கத்தின் உருவாக, பொறுமையின் வடிவமாகத் தோன்றிய கூர்ம பகவான், மந்தர மலையின் பாரத்தைத் தானே தாங்கி தேவர்கள் எண்ணிலா செல்வங்களைப் பெற அருளினார். காமதேனு, ஐராவதம், உச்சைசிரவஸ் என்ற அதிசயக் குதிரை, அரிசந்தனம், கற்பகம், சந்தனம், பாரிஜாதம், மந்தாரம் எனும் பஞ்ச தருக்கள், கவுஸ்துபம், ஸ்யமந்தகமணி இவற்றோடு ஜேஷ்டா தேவி, திருமகள், அறுபது கோடி தெய்வப் பெண்கள், சந்திரன், மதுவின் தேவியான சுரா போன்றோர்களும் தோன்றினார்கள். இறுதியாக அமிர்தம் ஏந்திய கரங்களோடு ஸ்ரீதன்வந்திரி பகவானும் பாற்கடலில் இருந்து தோன்றி அருள் செய்தார். இத்தனைக்கும் காரணமாக ஸ்ரீகூர்ம பகவான் இருந்து சகல லோகங்களையும் காத்தருளினார். அதுமட்டுமா? கூர்ம அவதாரத்தின் தொடர்ச்சியாகத்தான் திருமாலின் மோஹினி அவதாரம், ஸ்ரீஐயப்பன் ஜனனம், ராகு கேது தோற்றம், பிரதோஷ வழிபாடு எல்லாமே தோன்றியதாகவும் ஞானநூல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் எல்லா அவதாரங்களை விடவும் இந்த கூர்ம அவதாரமே சிறப்பானது என்று வேதங்களும் புராணங்களும் போற்றுகின்றன. தியாகத்தின் திருவடிவான கூர்ம பகவானை வணங்கினால் சகல நன்மைகளும் கிட்டும். சனிபகவானின் பேரருளைப் பெறலாம் என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன. காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை அழகர் கோயில், தூத்துக்குடி மாவட்டம் அகரம் தசாவதாரக் கோயில் போன்ற இடங்களில் கூர்ம பகவானை தரிசித்து அருள்பெறலாம்.

கடுமையான பாரத்தை சுமந்து உலகைக் காத்த கூர்ம மூர்த்தியை வணங்கினால் குடும்ப பாரம் சுமக்கும் எல்லோரும் நிம்மதியைப் பெறலாம். சகலவிதமான சனி தோஷங்களையும் நீக்கும் பெருமாள் என்பதால் சனி பிரச்னை உடையவர்கள் நாளை இவரை வணங்குவது விசேஷம். தீய எண்ணங்கள் உருவாகும்போது புலன்களை அடக்கி பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற தத்துவத்தை  உணர்த்த பகவான் எடுத்த அவதாரம்தான் கூர்ம அவதாரம். எப்போதெல்லாம் நம் பொறுமை மீறும் அளவுக்குத் துன்பங்கள் தாக்குகிறதோ, அப்போதெல்லாம் கூர்ம பகவானை வணங்கி வழிபட்டால்,  நிச்சயமாக எல்லா துன்பங்களும் விலகி மனம் அமைதி பெறும் என்று ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகிறார்கள். அதன்படி நாளை கூர்ம பகவானை வணங்கி அமைதியும் வளமும் பெறுவோம்.