Published:Updated:

அக். 11-ல் தொடங்குகிறது தனிச்சிறப்பு மிக்க தாமிரபரணி புஷ்கரம்... விழா உருவான வரலாறு!

தாமிரபரணி நதியின் சிறப்புகளைப் பற்றி வால்மீகி, கம்பர் ஆகியோரின்ராமாயணமும், பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணமும் விவரித்திருக்கிறது...

அக். 11-ல் தொடங்குகிறது தனிச்சிறப்பு மிக்க தாமிரபரணி புஷ்கரம்... விழா உருவான வரலாறு!
அக். 11-ல் தொடங்குகிறது தனிச்சிறப்பு மிக்க தாமிரபரணி புஷ்கரம்... விழா உருவான வரலாறு!

தாமிரபரணி புஷ்கரம்

தண்பொருநை என்றும் தாமிரபரணி என்றும் அழைக்கப்படும் தாமிரபரணி, தமிழகத்தின் ஜீவ நதி. நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தாமிரபரணி நதியின் கரையில்தான் நிகழ்ந்தது என்பதை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் உறுதி செய்திருக்கின்றனர். 

தமிழர்கள் தலைநிமிர்ந்து பெருமைப்படக்கூடிய இரண்டு விஷயங்கள் எவை என்று யாராவது கேட்டால், தமிழ்மொழியும், அந்த மொழியுடன் ஆதிநாகரிகமும் தோன்றிய மண்ணில் தவழும் தாமிரபரணி நதியும் என்று தயங்காமல் சொல்லிவிடலாம்.
இந்தியாவின் புண்ணிய நதிகளில் ஒன்றான தாமிரபரணி நதியில், இந்த வருடம் அக்டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை  புஷ்கர விழா கொண்டாடப்படவிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட ஒரு மாதத்தில், குறிப்பிட்ட  ஒரு நதியில் 'புஷ்கரம்' என்று சொல்லப்படும் விழா நடைபெறுவது மரபு. அந்த வகையில் இந்த ஆண்டு தாமிரபரணியில் அக்டோபர் மாதம்  நடைபெறவிருக்கும் புஷ்கரம் விழாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு, தாமிரபரணியின் மகிமைகளை அறிந்துகொள்ளலாமே...

இதிகாசத்திலும் புராணங்களிலும் தாமிரபரணி...

தென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடமாம்; ஆதலினால், அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி...  
 
                                                                 (கம்பராமாயணம்  நாடவிட்டபடலம்)

'பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி’ என்று இங்கே கம்பர் புகழ்ந்தும் வணங்கியும் சிறப்பிப்பது இன்றைய தாமிரபரணி நதியைத்தான்.

பொன் துகள்கள் கலந்து வரும் காரணத்தினால், 'திருநதி’ என்று கம்பர் போற்றும் தாமிரபரணியின் புராதனமான பெயர் பொருநை நதி என்பதாகும். நம்முடைய இந்து தர்மம், நதிகளை தெய்வமாகப் போற்றி வணங்கச் சொல்கிறது. நதிகள் இலக்கியங்களில் பெண்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிக் கொண்டாடும் புண்ணிய பூமி அல்லவா நம் பாரத தேசம்?!
எத்தனையோ பல புனித நதிகள் நம்முடைய தேசத்தை வளப்படுத்தினாலும், வேறு எந்த நதிக்கும் இல்லாத தனிச் சிறப்பு பொருநை என்னும் தாமிரபரணி நதிக்கு உண்டு. வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப் பெறும் தாமிரபரணி, அகத்திய முனிவரின் திருவுள்ளப்படி வெளிப்பட்டதாகும்.

இந்த நிகழ்ச்சியை வால்மீகி முனிவர் பின்வருமாறு விவரிக்கிறார்.

தஸ்யாஸீனம் நகஸ்யாக்ரே மலயஸ்யம் ஹெளஜஸம்
த்ரக்ஷயதாதித்ய ஸங்காஸம் அகஸ்த்யம்ருஷி ஸத்தமம்
ததஸ்தேநாப்யநுக்ஞாதா: ப்ரஸந்நேந மஹாத்மநா
தாம்ரபர்ணீம் மஹாக்ராஹாம் தரிஷ்யத மஹாநதீம்

''மலைய மலையின் உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரியபகவானைப் போல மிகுந்த ஒளியுடன் திகழ்பவருமான அகஸ்திய முனிவர் பெருமானை தரிசிப்பீர்கள். அந்த இடத்தில் அதுவரையிலும் தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த தீர்த்தத்தை, பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, மனம் உவந்து விடையளிக்க, அந்தத் தீர்த்தமே பெரிய பெரிய முதலைகள் நிரம்பப் பெற்ற பெரிய நதியாகிய தாமிரபரணி'' என்கிறார்.

அகத்திய முனிவரால் தோன்றிய நதிகள் காவிரியும் தாமிரபரணியும். காவிரிக்கு இல்லாத சிறப்பு தாமிரபரணிக்கு உண்டு. அகத்தியரின் கமண்டலத்தில்  இருந்த காவிரியை அவரே மனமுவந்து விடுவிக்கவில்லை. விநாயகர்தான் காகத்தின் வடிவம் கொண்டு விடுவித்ததாக புராணம் கூறும் செய்தி. ஆனால், தாமிரபரணி அப்படியல்ல. நம்முடைய புண்ணிய பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, அகத்தியர் மனமுவந்து விடுவித்த நதி தாமிரபரணி என்பதும் புராணம் கூறும் செய்திதான்.

அதுமட்டுமல்ல, தாமிரபரணி நதி தவழும் புண்ணிய பூமியைப் பற்றி பரஞ்சோதி முனிவரும் தமது திருவிளையாடல் புராணத்தில் அழகாக விவரித்திருக்கிறார்...

பொதியிலே விளைகின்றன சந்தனம் பொதியின்  
நதியிலே விளைகின்றன முத்தம்அந் நதிசூழ்
பதியிலே விளைகின்றன தருமம் அப்பதியோர்
மதியிலே விளைகின்றன மறைமுதற் பத்தி 

பொதிகை மலையில் சந்தனம் விளைகின்றதென்றும்; பொதிகையின் செல்வத் திருமகளான தாமரபரணி நதியில் முத்துகள் விளைகின்றதென்றும்; அந்த நதி பாய்ந்து செல்லும் ஊர்களில் எல்லாம் தர்மம் தழைத்துச் செழித்திருக்கின்றதென்றும்; அந்த ஊர்களில் வாழும் மனிதர்களின் மனங்களில் ஈசனிடம் பக்தி விளைகின்றதென்றும் பரஞ்சோதி முனிவர் தாமிரபரணியின் சிறப்பைப் போற்றியிருக்கிறார்.

தாமிரபரணியின் வரலாறு:

சிவ - பார்வதி திருமண வைபவத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலை மலைக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.

ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..?

இல்லை. பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன! அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..?

சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர். அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று கூறினர்.
அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.

தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள். நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.

தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது. அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.

சிலகாலம் சென்றது.

தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராணத் தியாகம் செய்துகொண்டாள்.

பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள். அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள். பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள். அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.

அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது. அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர். பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்றும் கூறி, அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார். கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார். மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார். 
இதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு. 

தாமிரபரணியின் மகிமைகளைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம். சங்க காலக் கவிஞர்கள் முதல் நவீனக் காலக் கவிஞர்கள் வரை பலருக்கும் தாமிரபரணி என்றாலே தனிப் பிரியம்தான்!

வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் கொண்டாடப்படும் புஷ்கர விழா...

முற்காலத்தில் வஜ்ரநாமா என்னும் அரக்கன் தேவர்களை அழிப்பதற்காக பிரமாண்டமான யாகம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். அப்போது பிரம்மதேவர் தம்முடைய அன்ன வாகனத்தில் வான் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். தேவர்களை அழிப்பதற்காக அரக்கன் நடத்திக்கொண் டிருக்கும் யாகத்தைக் கண்டவர், அந்த யாகத்துடன் அரக்கனையும் அழிப்பதற்காக, தம் கையிலிருந்த தாமரை மலரை வேள்விக் குண்டத்துக்குள் வீசினார். அவ்வளவில் வேள்விக் குண்டம் வெடித்துச் சிதறியது. அந்த இடம்தான்  தற்போது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீருக்கு அருகிலுள்ள புஷ்கரம். இந்தச் சம்பவம் பத்மபுராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அரக்கனால் களங்கப்படுத்தப்பட்ட பூமிக்குப் புனிதம் சேர்க்கவேண்டி, பிரம்மதேவர் அந்த இடத்தில் ஒரு யாகம் செய்தார். அந்த யாகத்திலிருந்து சரஸ்வதி, 'சுப்ரபா' என்ற பெயருடன் நதிஉருவம், பெண்உருவம் இன இரண்டு உருவங்களுடன் தோன்றினாள். அந்த நதிதான் புஷ்கரகங்கை எனப்படும் புனித தீர்த்தம். பிரம்மதேவர் அந்த புஷ்கர கங்கையை தம்முடைய கமண்டலத்தில் அடக்கி வைத்திருந்தார். 

சில காலத்துக்குப் பிறகு குருபகவான் பிரம்மதேவரைக் குறித்துக் கடும்தவம் மேற்கொண்டார். குருபகவானின் தவத்துக்கு இரங்கிய பிரம்மதேவர், அவருக்கு தரிசனம் தந்ததுடன், அவர் கேட்கும் வரத்தைத் தருவதாகவும் கூறினார். பிரம்மதேவரின் கமண்டலத்தில் இருக்கும் புஷ்கர கங்கைதான் தனக்கு வேண்டும் என்று குருபகவான் கேட்டார். பிரம்மதேவரும் சம்மதித்தார். ஆனால், புஷ்கர கங்கைக்கு பிரம்மதேவரை விட்டுப் பிரிய மனமில்லை. எப்படியாவது குருபகவானின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நினைத்த பிரம்மதேவர், புஷ்கர கங்கைக்கும் குருபகவானுக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்து வைத்தார்.

அதன்படி குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ அந்த ராசிக்கு உரிய நதியில், குறிப்பிட்ட மாதத்தில் புஷ்கர கங்கை கலந்திருக்கும் என்றும், அப்போது அந்த நதியில் நீராடி வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்றும் அருள்புரிந்தார். 

அந்த வகையில் குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில்  சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் கார்த்திகை மாதத்தில் தாமிரபரணியில் புஷ்கரம் விழா நடைபெறவிருக்கிறது.