Election bannerElection banner
Published:Updated:

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்! ஆடி பிறந்தது இன்று

ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்! ஆடி பிறந்தது இன்று
ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்! ஆடி பிறந்தது இன்று

ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. ஆடி மாத விசேஷம் சொல்லும் கட்டுரை.

ன்று ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. 'கற்கடக மாதம்' என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும். அது மட்டுமா? தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா - காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான். 

பித்ரு லோகத்தில் வசிக்கும் பித்ருக்கள் அந்த லோகத்தைவிட்டு பூலோகத்துக்கு வரும் புண்ணிய காலம் ஆடி. ஆவலோடு தங்கள் சந்ததியைக் காண வரும் பித்ருக்களை வணங்கி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நதி, குளம், கடல் போன்ற புண்ணிய  நீர்நிலைகளில் நீராடி, திதி கொடுப்பது இந்த மாதத்தில் விசேஷமானது. அதுவும் ஆடி அமாவாசை அன்று செய்வது நலம் பயக்கும். இறந்துபோன முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு, ஏழை எளியோருக்கு அன்னதானம் அளிப்பது நல்லது. 

'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள். ஆடிக் காற்று மண்ணைக் கிளறி லகுவாக மாற்றி விளைச்சலுக்கு உதவும். ஆடியில் பொங்கி வரும் புது வெள்ளம் வேளாண்மைக்கு மிகவும் உதவும். இதனால்தான் ஆடியில் விதைப்பது நமது வழக்கமானது. வேளாண்மைக்கு ஏற்ற காலம் ஆடி. ஆடி மாதம் வரும் ஆடிப் பெருக்கு அத்தனைச் செல்வங்களையும் பெருக்கித் தரும். அந்த நாளில் பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றை மாற்றி புதுப்பித்துக்கொள்வார்கள். அன்று புதுக்கணக்கு எழுதி வணிகம் தொடங்குபவர்களும் உண்டு. காவிரி அன்னைக்கு கருகமணி, காதோலை, குங்குமம், மஞ்சள் என சீர் பொருள்களை ஆற்றில்விட்டு அருளைப் பெறுவதும் இந்த நாளில் வழக்கம். 

ஆடி மாதம் முழுக்க அம்பிகைக்கு என்றால், ஆடி கிருத்திகை ஆறுமுகப்பெருமானுக்கு எனலாம். வேலவனை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களின் மாண்பை உணர்த்தக் கொண்டாடப்படும் இந்த விழாவில் முருகப்பெருமான் குடிகொண்ட எல்லா ஆலயங்களும் விழாக்கோலம் பூணும். காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அன்றைய நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை பக்திப் பரவசத்துடன் வழிபடுவார்கள். `பூச்சொரிதல்’ என்ற பெயரில் ஆடி கிருத்திகை நாளில் அம்பிகைக்கு விழா கொண்டாடப்படும். 
மகாபாரதம் எழுதிய வியாச மகரிஷியைச் சிறப்பிக்கும் குரு பௌர்ணமி இந்த மாதத்தில்தான் வருகிறது. அந்த நாளில் குருமார்களை நினைவுகூரும் தினமாக அனுஷ்டித்துக் கொண்டாட வேண்டும். 

`அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்த ஆடிப்பூரம் திருநாளில்தான், பார்வதி தேவி ருதுவான நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள். 
மாங்கல்ய பலமருளும் வரலட்சுமி நோன்பு மங்கையர்களின் விருப்பமான விழா. நாக தோஷங்களை விலக்கும் நாகசதுர்த்தி நாக தேவதைகளோடு, விநாயகரையும் வணங்கவேண்டிய நாளாகும். மொத்தத்தில் பக்தி விழாக்களின் தொடக்க  மாதமாக ஆடி விளங்குகிறது. அதனால்தான் பெரியவர்கள் இந்த மாதத்தில் வேறு மங்களகரமான நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் விலக்கிவைத்தார்கள்.

பக்திக்கும் பண்டிகைக்கும் உரிய இந்த மாதத்தில் வீடு மாறுவதோ, சுப காரியங்கள் செய்வதோ பூஜைக்கு இடையூறாக இருந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம்.  மேலும் தேவர்களின் இரவு நேரம், பித்ருக்கள் நம்மை நாடிவரும் காலம், இந்த மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்கள்  ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது போன்ற பல காரணங்களாலும் ஆடி மாதம் சுப காரியங்களைச் செய்ய விலக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், சகல தெய்வங்களின் பண்டிகைகளும் ஒருசேர வரப்போகும் இந்த ஆடி மாதத்தில் முடிந்தவரை எல்லா விழாக்களையும் கொண்டாடி வளமும் நலமும் பெறுவோம்! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு