Published:Updated:

`ஈசனே இரந்து விருந்திட்ட தம்பிரான் தோழர்' சுந்தரரின் குருபூஜை இன்று!

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இன்று சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜைத் திருவிழா நடைபெறுகிறது.

`ஈசனே இரந்து விருந்திட்ட தம்பிரான் தோழர்' சுந்தரரின் குருபூஜை இன்று!
`ஈசனே இரந்து விருந்திட்ட தம்பிரான் தோழர்' சுந்தரரின் குருபூஜை இன்று!

`ம்பிரான் தோழர்' என ஈசனுக்கே தோழராக இருந்து பேறுபெற்றவர் சுந்தரமூர்த்தி நாயனார். `திருத்தொண்டத் தொகை' என்ற அற்புத நூலை எழுதி சிவனடியார்களான நாயன்மார்களை உலகறியச் செய்த அற்புதப் பெருமகனார். தேவார மூவரில் இவர் பாடிய பாடல்கள், ஏழாம் திருமுறையாக உள்ளன. கயிலாயத்தில் ஈசனுக்குத் தொண்டராக இருந்து, பெருகிவந்த ஆலகால விஷத்தைத் திரட்டிக்கொடுத்து `ஆலால சுந்தரர்' என்ற பெயரைப் பெற்றவரே பூலோகத்தில் `சுந்தரமூர்த்தி' என்ற பெயரில் பிறந்தார். திருநாவலூரில் சடையனார்-இசை ஞானியார் தம்பதியின் மகனாகப் பிறந்து, திருமுனைப்பாடி நாட்டு அரசரான நரசிங்க முனையரையருக்கு வளர்ப்பு மகனாக வளர்ந்து, திருமண வேளையில் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர் சுந்தரர். அழகுத் தமிழால் ஆண்டவனையே வசப்படுத்திய சுந்தரரின் குருபூஜை தினம் இன்று.

ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரரின் குருபூஜை எல்லா சிவாலயங்களிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக தொண்டை மண்டலத்தில் உள்ள திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இன்று  சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் குரு பூஜைத் திருவிழா நடைபெறுகிறது. காலையில் விருந்திட்டீஸ்வரர், சுந்தரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மதியம் திருக்கயிலாய காட்சி வைபவமும் நடைபெற உள்ளது. இங்கு ஏன் சுந்தரருக்கு விசேஷ வைபோகம்? இங்குதான் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்கு ஈஸ்வரன் அன்னமிட்டார். உலகுக்கே படியளக்கும் பரமேஸ்வரன் தனது நண்பன் சுந்தரருக்காக தானே பிட்சையெடுத்து விருந்திட்ட லீலையை என்னவென்று சொல்வது?

``வன்தொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார்

மின்தங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி

அன்றங்கு வாழ்வாரோர் அந்தணராய்ப் புறப்பட்டுச்

சென்றன்பர் முகநோக்கி அருள்கூரச் செப்புவார்.

மெய்ப்பசியால் மிகவருந்தி இளைத்திருந்தீர் வேட்கைவிட

இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்

அப்புறநீர் அகலாதே சிறிதுபொழு தமருமெனச்

செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறும் சென்றிரப்பார்."

என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் சுந்தரருக்காக கருணைக்கடலான ஈசன் இரந்து, விருந்திட்ட லீலையை கண்ணீர்மல்க விவரிக்கிறார். அந்த அற்புதம் நடந்த தலம் திருக்கச்சூர். சிங்கப்பெருமாள் கோயிலுக்கு வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருக்கச்சூர். இங்குள்ள இரண்டு சிவாலயத்தில் பெரியது கச்சபேஸ்வரர் கோயில். கச்சப வடிவில் திருமால் ஈசனை வழிபட்டத் திருத்தலம். இது, `ஆலக்கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. விழுதுகள் இல்லாத கல்லால மரம் தலவிருட்சமாக இருப்பதாலும், நீர் நிலைகள் சூழ்ந்த இடத்தில் ஆலயம் இருந்ததாலும் இந்தப் பெயர் உண்டானது. `தாழக்கோயில்' என்றும் அழைக்கிறார்கள். இங்கு இறைவன் `கச்சபேஸ்வரர்’ என்றும், இறைவி `அஞ்சனாட்சி’ என்றும் அருள்பாலிக்கிறார்கள். இறைவன் தியாகராஜர் என்றும் வணங்கப்படுகிறார். பாற்கடல் கடைந்து அமுதம் பெற்ற மகிழ்வில் தேவர்கள் கொண்டாட, அதைக்கண்ட ஈசன் அமுத நடனம் ஆடினார். இங்கு வந்த கச்சப மூர்த்தியின் வேண்டுகோளுக்காக ஈசன் இங்கே அமுத தியாகர் வடிவில் காட்சியளித்தார். உபய விடங்கர் என்றும் போற்றப்படுகிறார். அழகிய அமைப்பும், அநேக தெய்வ சந்நிதிகளையும் கொண்ட இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு பாடியவர் சுந்தரமூர்த்தி நாயனார். 

சுந்தரர் இந்த தலத்துக்கு வந்தபோது உச்சி வேளை. திருக்கழுக்குன்றத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று கொண்டிருந்த சுந்தரரை, ஈசன் வழிகாட்டி இந்தத் தலத்துக்கு வரச்செய்தார். ஈசனை கண்ணார தரிசித்து கண்ணீர் மல்கினார் சுந்தரர். மனம் மகிழ்ச்சியில் திளைத்தாலும், வயிறு கடுமையான பசியால் தவித்தது. தாயினும் சிறந்த தயாபரனான ஈசன் விடுவாரா? முதியவர் வடிவில் ஊருக்குள் சென்ற ஈஸ்வரன், கையில் திருவோட்டை ஏந்தி, கால்நோக வீடு வீடாகச் சென்று யாசகம் பெற்றார். ஏழைக்கு எளியோனான ஈசன் கொண்டுவந்த உணவைத் தனது தோழருக்கு விருந்தாக அளித்தார். விருந்து முடிந்ததும் மறைந்த முதியவரே ஈசன் என்று அறிந்த சுந்தரர் கதறினார். `எந்தையே, எனக்காக திருவோடு சுமந்தாயா... கால்நோகப் பிச்சையெடுத்தாயா?' என்று உருகினார். `ஈடில்லாத இந்தக் கருணைக்கு என்ன செய்ய முடியும்?' என்று பதிகம் பாடி இறைவனைத் தொழுதார். சுந்தரருக்காக இரந்து உணவுபெற்ற ஈசன் `இரந்தீஸ்வரர்' என்றும், சுந்தரருக்கு உணவிட்ட ஈசன், `விருந்திட்டீஸ்வரர்’ என்றும் இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கிறார்கள். ஈசன் விருந்திட்டு மகிழ்ந்த வைபோகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. `தமிழால் தன்னைப் போற்றிப்பாடிய சுந்தரருக்காக ஈசனே பிட்சையெடுத்தார்' என்றால் சுந்தரரின் பெருமை எத்தகையது! அவரின் குருபூஜை தினமான இந்நாளில் அவரது பாடல்களால் ஈசன் புகழ் பாடி வளமும் நலமும் பெறுவோம்.  

மேலும் சில தகவல்கள் ... 

ஆதிகச்சபேஸம், ஆதிக் காஞ்சி என்று அழைக்கப்படுவதால் இது, `காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்துக்கு முந்தி உருவானது' என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

கச்சபேஸ்வரர் ஆலய தெற்கு வெளிப் பிராகாரத்தில் 27 தூண்களைக் கொண்ட நட்சத்திர மண்டபம் இருப்பது விசேஷம்.

கச்சபேஸ்வரர் கருவறை அகழி போன்று அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் சுயம்பு. 

கச்சபேஸ்வரர் ஆலய விருட்சம் ஆலமரம். மக நட்சத்திரத்துக்குரிய மரம் ஆலமரம். எனவே, மக நட்சத்திர அன்பர்கள் இங்கு வந்து வழிபடலாம்.

`கச்சபேஸ்வர தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி ஈசனை வணங்கினால் எல்லா தோஷங்களும் விலகும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்' என்று தல புராணம் கூறுகிறது.

திருக்கச்சூர் கச்சபேஸ்வரர் ஆலயத்துக்கு அருகே மலைமீது மருந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பிணி தீர்க்கும் மருந்தாக, ஆலய  மண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த மண் பிரசாதத்தை உட்கொண்டால், தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

இறைவர் மருந்தீஸ்வரர்; இறைவி இருள்நீக்கி அம்பாள். அசுவினி தேவர்களுக்கு மூலிகைகள் மீது வெளிச்சம் காட்டி அருளியதால் அம்பிகைக்கு இந்தத் திருநாமம்.

பௌர்ணமி நாளில் இங்குள்ள மலைப் பாதையில் பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

இந்திரன், அசுவினி தேவர்கள் உள்ளிட்ட பல தேவர்களின் பிணியை நீக்கியது மருந்தீஸ்வரர் ஆலயம். 

மருந்தீஸ்வரர் ஆலய மருந்து தீர்த்தக் குளம், இங்குள்ள பிரம்ம முக சண்டிகேஸ்வரர் (நான்கு முகம்) என இங்கு பல அதிசயக் காட்சிகளைக் காணலாம்.