Published:Updated:

ஆடிமாதம் முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

ஆடிமாதம் முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?
ஆடிமாதம் முளைப்பாரித் திருவிழா கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

அம்மனுக்கான திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு. அது ஏன்?

டி மாதம் பிறந்துவிட்டாலே அம்மனுக்குத் திருவிழாக்கோலம்தான். அம்மனுக்கான திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு. இன்றளவும் பெரும்பாலான அம்மன் கோயில்களில் முளைப்பாரித் திருவிழா நடைமுறையில் இருக்கிறது.  விவசாயிகள், ஒவ்வோர் ஆண்டும் விளையும் தானியத்தில் ஒருபங்கை விதையாக எடுத்து குதிரில் வைத்தோ கோட்டை கட்டியோ பாதுகாப்பார்கள். இவ்வாறு பாதுகாத்த விதைகள் தரமானவைதானா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாகவே முளைப்பாரி எடுக்கும் சடங்கு தொடங்கியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. 

அம்மன் கோயில்கள் இருக்கும் ஊர்களில், கோயிலுக்கு அருகில் 'முளைப்பிறை' எனப்படும் கீற்றுகொட்டகை அமைக்கப்படும். அம்மனுக்குக் காப்புக் கட்டி திருவிழா தொடங்கும் நாளில் அந்தக் கொட்டகையில் முளைப்பாரி போடுவார்கள். ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் முளைப்பிறைக் கொட்டகையில் கூடுவார்கள். முளைப்பாரி குடம் அல்லது கூடையில் 21 வகையான  தானிய விதைகளைப் பரப்பி நீரிட்டு முளையிடுவார்கள். அம்மனுக்கு 21 புத்திரிகள் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 21 தானியங்கள் முளையிடப்படுகிறது. முளையிடப்பட்ட கூடைகள் அல்லது குடங்களைப்  பனையோலை பெட்டியைக் கொண்டு சூரிய ஒளிபடாமல் மூடி வைப்பார்கள். தினமும் நீர் தெளிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தப் பெண்  நீராடி, தூய உடை உடுத்திக்கொண்டு இந்தப் பணியைச் செய்துவர வேண்டும். முளை கருகினாலோ, வளராவிட்டாலோ நீர் தெளிக்கும் அந்தப் பெண்ணே பொறுப்பேற்று அம்மனிடம் தண்டனிட வேண்டும் என்பது விதி.

முளைப்பாரி போடும் பெண்களின் விரதமுறை பக்திப்பூர்வமானது. தலையில் எண்ணெய் வைக்காமலும் சீப்பு கொண்டு சீவாமலும் இருக்கவேண்டும்; சுத்தமான ஆடை அணியவேண்டும்; அலங்காரம் இல்லாமல் எளிமையாக இருக்கவேண்டும்; குளிப்பதற்கும் குடிப்பதற்கும் வெந்நீரைப் பயன்படுத்தக்கூடாது; தொலைக்காட்சி, சினிமாவெல்லாம் பார்க்கக்கூடாது.  எப்போதும் இறைச் சிந்தனையுடனே இருக்கவேண்டும்; ஊர் விட்டு ஊர் போகக்கூடாது; அந்நியர்களை வீட்டில் சேர்க்கக்கூடாது. இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டும்.

முளை வளரும் அந்த ஒன்பது நாள்களும் பெண்கள் இரவில் கூடி கும்மி கொட்டி அம்மனை வணங்கி முளைப்பாரி நன்கு வளரவேண்டும் என்று வேண்டி பாடுவார்கள். ஒவ்வொரு நாள் வளர்ச்சியைப் பார்த்து பெருமை பேசுவார்கள். யார் வீட்டு முளைப்பாரி நன்கு வளர்ந்துள்ளதோ அதை அம்மனின் அருளாக நினைத்து வணங்குவார்கள். விதை முளைக்காத முளைப்பாரிக்குச் சொந்தக்காரர்கள்  முளை நன்கு வளர்ந்த வீட்டில் அடுத்த விதைப்புக்கு விதைகளை பெற்றுக் கொள்வார்கள். 

ஒன்பது நாள்கள் வளர்ந்த முளைப்பாரியைப் பெண்கள் சுமந்துகொண்டு, பத்தாம் நாளன்று மேள தாளத்தோடு ஊர்வலமாகச் செல்வார்கள். அம்மன் கோயிலுக்கு முன்னால் அவற்றை வைத்து கும்மி கொட்டி, குலவையிட்டு பாட்டுப்பாடி அம்மனைத் தொழுவார்கள். தொன்றுதொட்டு நடத்தப்படும் இந்த முளைப்பாரி விழா வேளாண்மையை வழிவழியாக செழிப்பாகக் கொண்டு செல்லவும் இயற்கையை நேசிக்கவும் கொண்டாடப்படுகிறது. 

முளைப்பாரி எடுப்பதால் கிராமத்திலுள்ள நீர்நிலைகள் நிறையும்  என்பதும், நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதும் நம்பிக்கை. மேலும் முளைப்பாரியில் வளர்ந்த பயிர்களின் வளர்ச்சியைக் கண்டு அந்த ஆண்டின் விளைச்சல் எப்படி  இருக்கும் என்பதை கணிக்கும் சடங்காகவும் முளைப்பாரி எடுக்கும் வைபவம் கருதப்படுகிறது.

 திருமணங்களில்கூட முளைப்பாரி முக்கிய இடம் பிடிக்கும். சிலப்பதிகார காவியத்தில் கோவலன், கண்ணகி திருமணத்தில் தானிய முளைப்பாரிகளைப் பெண்கள் கூட்டம் தூக்கி வந்ததை ‘விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்’ என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். இதிலிருந்து சங்ககாலத்திலேயே  முளைப்பாரி எடுக்கும் சடங்கு நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அறியலாம். கோயில் கும்பாபிஷேகம்கூட  முளைப்பாரியோடுதான் தொடங்கும். இது 'அங்குரார்ப்பணம்' எனப்படுகிறது. முளைப்பாரியில் பயிர்கள் செழித்து வளர்வதைப் போலவே தங்கள் வம்சமும் செழித்து வளரவேண்டும் என்பதற்காகவும் முளைப்பாரி வைபவம் நடைபெறுகிறது. 'முளைப்பாலிகை' என்ற வரலாற்றுப் பண்டிகையே மருவி முளைப்பாரியானது என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

மதுரையில் ஆடிமாத ஆயில்ய நட்சத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழா தொடங்கும். இது அம்மனுக்கு மட்டுமே உரிய விழா என்பதால் மீனாட்சி அன்னை சந்நிதி கொடி மட்டுமே ஏற்றப்படும். பத்து நாள்கள் முளைக்கொட்டு விழாவில், மதுரை சுற்றுவட்டாரப் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து கும்மி அடித்து வழிபடுவார்கள். இப்படி தமிழகமெங்கும் கோலாகலமாகக் கொண்டாடும் நம் பாரம்பர்யத் திருவிழா முளைப்பாரி எடுப்பது. இந்த விழாவையும், இந்த விழாவில் பாடப்படும் பாடல்களையும் பாதுகாப்பது நம்முடைய கடமை மட்டுமல்ல, ஆன்மிக சேவையும் கூட. இதோ ஓர் அருமையான பாடலின் துவக்க வரிகள் ... 

"முளைப்பாரி போடுங்கம்மா முத்தாரம்மனைப் பாடுங்கம்மா

கரங்கொட்டி ஆடுங்கம்மா கருமாரியைப் பாடுங்கம்மா 

வெயில்படாத கோட்டை கட்டி விதைச்சு வச்சோம் முளைப்பாரி 

விதவிதமா விதை பரப்பி வெக்காளிக்கு முளைப்பாரி 

முளைப்பாரி எடுக்கையிலே முத்துமாரி மனம் குளிர்வா ..." 

முளைப்பாரி வளர்ப்பது வெறும் சடங்கோ, வழிபாடோ மட்டுமல்ல, அது வீரியமான விதைகளை வேளாண்மைக்குத் தேர்ந்தெடுக்கும் ஒரு உத்தியும்கூட. அடுத்த சாகுபடிக்கான தரமான விதைகளைத் தங்கள் கிராமங்களுக்குள்ளாகவே தேர்வு செய்ய வசதியாக திருவிழா என்ற பெயரில்  கொண்டாடிய தொழில்நுட்பம்தான் முளைப்பாரி!

அடுத்த கட்டுரைக்கு