Published:Updated:

பெருநாள், நோன்பு நாள்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன?#EidMubarak

பெருநாள், நோன்பு நாள்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன?#EidMubarak
பெருநாள், நோன்பு நாள்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன?#EidMubarak

`ஏன் முஸ்லிம்கள் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதில்லை. ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு ஒரு நாள் முன்பின்னாகக் கொண்டாடுகிறார்களே ஏன்?’ 

ந்திரனின் தேய்தல், வளர்தல் நிலைகளைப் புறக்கண்ணால் கண்டு மாதத்தைத் தீர்மானிக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாள்களாகவே இருக்கும். 29 நாள்கள் பூர்த்தியானவுடன் அன்று மாலை சூரிய மறைவுக்குப் பின் புதிய பிறை தென்படுகிறதா என்று பார்ப்பார்கள். பிறை தெரிந்தால் புதிய மாதம் பிறந்துவிட்டது. அப்படி இல்லையெனில், அந்த மாதத்துக்கு 30 நாள்களாகக் கணக்கிட்டுப் பூர்த்தி செய்வார்கள். 

ஒரு பிரதேச மக்கள் புதிய மாதம் தொடங்கிவிட்டதை அறியாமல் 29 நாள்கள் மட்டுமே கொண்ட மாதத்தை 30 நாள்களாகவும் கணக்கிட்டு செயல்படுவதுண்டு. இன்னொரு பிரதேச மக்கள் பிறை பார்த்திருக்கலாம். ஆனால், அந்தத் தகவல் நம்பகமான முறையில் இவர்களுக்குக் கிடைக்க வேண்டும். முன் பின்னாக நாள்கள் அமைவதைச் சரி செய்கிற ஒரே விஷயம் தகவல் பரிமாற்றத்தின் நம்பகத்தன்மையே. 

இந்த விஷயத்தைக் கையிலெடுத்து தகவலை உறுதிசெய்து முஸ்லிம்கள் தங்கள் நோன்பையும் பெருநாளையும் செயல்படுத்த வழிகாட்டவே ஒரு நீதிபதி (காஜி) நியமிக்கப்படுகிறார். அவர் பிறை குறித்த தகவலை முறைப்படி விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். அவரின் தீர்ப்புக்கு ஏற்ப மக்கள் செயல்பட வேண்டும். 

காலங்காலமாக இருந்த இந்த வழிமுறைப்படி ஒவ்வொரு பிரதேச மக்களும் தங்கள் நீதிபதியின் தீர்ப்புப்படி அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவரைப் பின்பற்றினால் ஒரு நாள் முன்பின் ஆகுவது ஒரு பிரச்னையாகவே தெரியாது. உண்மையில் இது பிரச்னை இல்லை என்றுதான் நமது மனதும் சொல்லும். ஏனெனில், தகவல் கிடைக்கப் பெறாத காலத்தில் முழு உலகிலும் முஸ்லிம்களின் வழக்கம் இதுவாகத்தான் இருந்துள்ளது. இதனால் அவர்களது வழிபாடுகள் வீண் போகவில்லை. அவர்களுக்கு மத்தியில் சர்ச்சையோ பிரிவினையோ இல்லை. 

இஸ்லாம் எல்லாக் காலத்துக்கும், எந்தப் பிரதேசத்தில் வாழ்பவருக்கும் ஓர் எளிமையான மார்க்கம். எங்கிருந்தேனும் தகவல் வந்தால்தான் தங்கள் வழிபாடுகளின் நேரத்தை முஸ்லிம்கள் தீர்மானிக்க முடியும் என்கிற நெருக்கடி நிலையை அது ஏற்படுத்தவில்லை. 

நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பணிபுரிகின்ற முஸ்லிமாக இருந்தாலும், அமேசான் காட்டுக்குள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் முஸ்லிமாக இருந்தாலும், தலை உயர்த்தி வானத்தில் பிறை பார்த்துவிட்டு மாதத்தைக் கணக்கிட்டுத் தம் வழிபாட்டைச் செய்துகொள்ள முடியும். அச்சிட்ட காலண்டரின் அவசியம் இல்லாமலே வாழ முடியும். 

முஸ்லிம்கள் ஒரு சமூகமாக வாழும்போது கூட்டு வழிபாட்டை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களாக ஆகிறார்கள். தொழுகை ஓர் உதாரணம். இதே தொழுகைதான் பெருநாள் அன்றும் ஒரு முக்கிய வழிபாடாக இருக்கிறது. கூட்டாகத்தான் அதைச் செய்யமுடியும். நபிகளார் (ஸல்) தமது காலத்தில் அனைத்து மக்களையும் ஊருக்கு வெளியே திறந்தவெளியில் திரட்டுவார்கள். தொழுகை நடத்தி நல்லுபதேசம் செய்து பிரார்த்தனையும் செய்வார்கள். முஸ்லிம்கள் அனைவரும் அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

ஆக, கூட்டு வழிபாடாகப் பெருநாள் இருப்பதால், இதை எளிதில் நடைமுறைப்படுத்த காஜி எனும் நீதிபதியின் அறிவிப்பு அவசியமாகின்றது. நாள் வேறுபட்டாலும் நோக்கம் நிறைவேறுவதே முக்கியம். காஜியின் தீர்ப்புச் சர்ச்சை ஆகுவதின் ஒரே காரணம், நாள் வேறுபடவே கூடாது. ஒரே நாளில்தான் நடந்தாக வேண்டும் என்கிற திணிப்புதான். உண்மையில் இது ஒரு நல்ல ஆசைதான் என்றாலும், காஜியின் அதிகாரத்தில் தலையிடுவதாகும். 

இன்று நவீன தகவல் தொழில்நுட்பம் நன்கு வளர்ந்துள்ளது. அன்டார்டிகாவில் பிறை பார்த்த செய்திகூட, அடுத்த நொடியே நமது அடுத்த வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. 

ஒரு வகையில் தகவலை ஏற்றுச் செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், அதைச் செயல்படுத்த கையாளும் முறை தவறுதான். 

காஜி தவறு செய்தால், அதற்கு அவரே பொறுப்பாளி. அவர் தமது இறைவனிடம் பதில் சொல்லட்டும். ஆனால், அவரைக் காரணமாக வைத்து பலரும் காஜியாகுவது அபாயம் தவிர வேறில்லை. இது விஷயத்தில் ஒரு சமநிலையான பார்வையே முக்கியம். 

முதலாவது, எங்கிருந்து வந்தாலும் உறுதிசெய்யப்பட்ட தகவல் என்றால் அதை எடுத்துச் செயல்படுத்த காஜி முன்வர வேண்டும். அதில் எந்தத் தடையும் இல்லை. ஏனெனில், தூரமான பிரதேசங்களின் தகவலையும் ஏற்றுக்கொள்கிற நெகிழ்வுத்தன்மையும் அறிவார்ந்த அணுகுமுறையும் இஸ்லாமில் இருக்கிறது. நபிகளார் இக்காலத்துக்கும் பொருத்தமான சட்டவியலையே வழங்கிச் சென்றுள்ளார்கள். 

இரண்டாவது, காஜி தமது பிரதேச பிறை தகவலை மட்டுமே விசாரிக்கிறார் என்றால், அவரை அதற்காக விமர்சிப்பதைக் கைவிட வேண்டும். ஏனெனில், தூரமான பிரதேசத்தின் தகவலுக்காக முஸ்லிம்கள் காத்திருக்க வேண்டும் என்றோ, அதற்காகச் சிரமப்பட்டு ஆராய வேண்டும் என்றோ, பிறை தெரிகிறதா என்று மலை உச்சிக்கு ஏறிக் கண்காணிக்க வேண்டும் என்றோ எந்தக் கட்டளையும் இல்லை. தகவல் கிடைக்கச் சாத்தியமான கால அளவு வரைதான் பொறுத்திருக்க வேண்டும். அதன் பிறகு அவரின் முடிவே இறுதியானது. 

மூன்றாவது, இம்மாதிரியான விஷயத்தில் ஏற்படும் கருத்துவேறுபாட்டைப் பெரிதுபடுத்தவே கூடாது. ஒரே நாளில் பெருநாள் கொண்டாடினாலும் தொழுகையின் இடங்களும் ஊர்களும் நாடுகளும் வேறுபடவே செய்கின்றன. ஒருவரை ஒருவர் கட்டாயப்படுத்தி வெறுப்பை வளர்ப்பதைவிட, ஒருவரை ஒருவர் புரிந்து அரவணைத்துச் செல்வதே முக்கியம். கவனியுங்கள். சமூகத்தை உண்மையாக அரவணைக்கும் நாள் அல்லவா பெருநாள்? 

அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துகள். 

அடுத்த கட்டுரைக்கு