Published:Updated:

வைகை கரைபுரள, பிரதோஷ நன்னாளில் ஈசன் நிகழ்த்தும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்!

வைகை கரைபுரள, பிரதோஷ நன்னாளில் ஈசன் நிகழ்த்தும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்!
வைகை கரைபுரள, பிரதோஷ நன்னாளில் ஈசன் நிகழ்த்தும் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்!

ஆவணி மாதத்தில் மதுரை வைகை மண், ஆவணிமூலத் திருவிழாவுக்கு ஆயத்தமாகியிருக்கிறது. என்ன இது, திருவிழாவுக்கு மக்கள் தயாராகலாம், தெய்வம் தயாராகலாம், மண் தயாராகுமா. ஆம். மண்தான் தயாராகிவிட்டது.

ன்னிரு மாதங்களுக்கும் திருவிழாக்களை உருவாக்கிவைத்து, அதற்குப் பெயரும் சூட்டிக் கொண்டாடி மகிழ்கின்ற திருவிழா நகரம், மதுரை. இந்த ஆவணி மாதத்தில் மதுரை வைகை மண், ஆவணி மூலத் திருவிழாவுக்கு ஆயத்தமாகியிருக்கிறது. என்ன இது, திருவிழாவுக்கு மக்கள் தயாராகலாம், தெய்வம் தயாராகலாம், மண் தயாராகுமா? ஆம். மண்தான் தயாராகிவிட்டது. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் எனும்போது, மண் தயாராகிவிட்டது என்பது பொருத்தம்தானே!

ஆண்டுதோறும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களின்போது, முக்கியமான நாள்களில் சிவபெருமானின் திருவிளையாடல்களை அர்ச்சகர்கள் நிகழ்த்திக் காட்டுவர். தருமிக்குப் பொற்கிழி வழங்கியது, உலவாக்கோட்டை அருளியது, கல்யானையைக் கரும்பு தின்னச் செய்தது எனப் பல திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டுவர். பன்னிரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஆவணி மூலத் திருவிழாவின்போது, ஒன்பது திருவிளையாடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அதில் ஒன்றாக, `பெண் (கங்கை) சுமந்த பாகன் மண் சுமந்த கதை' மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

அரிமர்த்தனபாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்த தென்னவன் பிரம்மராயராம் மாணிக்கவாசகப் பெருமான், மன்னன் கட்டளைப்படி குதிரைகள் வாங்க பெரும்பொருளுடன் செல்கிறார். செல்லும் வழியில் திருப்பெருந்துறை என்னும் தலத்தில் சிவபெருமானால் ஆட்கொள்ளப்படுகிறார். மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த செல்வங்களையெல்லாம், ஐயனுக்கு ஆலயம் அமைக்கும் பணியில் செலவிட்டார். செல்வம் அனைத்தும் தீர்ந்ததும்தான் மாணிக்கவாசகருக்குக் குதிரை வாங்கக் கொடுத்த செல்வம் முழுவதும் சிவப்பணியில் செலவாகிவிட்டது நினைவுக்கு வந்தது. சிவனாரைத் துதித்தார். `ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று மன்னனுக்குச் சொல்' என்று அசரீரியாக சிவனாரின் கட்டளை ஒலித்தது.

மாணிக்கவாசகரும் மதுரைக்குத் திரும்பி மன்னனிடம் விவரம் கூறினார். ஆனால், சிவபெருமான் கூறியபடி குதிரைகள் வரவில்லை. மன்னன், மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட மாணிக்கவாசகர், சிவனாரை வேண்டிப் பிரார்த்தித்தார். அவரை ஆட்கொண்டு அருள்புரிய திருவுள்ளம் கொண்ட சோமசுந்தரப்பெருமான், காட்டு நரிகளைப் பரிகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பிவைத்தார். இந்தத் திருவிளையாடலே ஆவணி மூலத் திருவிழாவின் எட்டாவது நாள் காலையில் நடத்தப்படுகிறது. 

சோமசுந்தரப் பெருமான் அனுப்பிய குதிரைகள், அன்று இரவே மறுபடியும் நரிகளாக மாறியதுடன், ஏற்கெனவே இருந்த குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டுச் சென்றன.

சினம்கொண்ட அரிமர்த்தன பாண்டியன், மாணிக்கவாசகரை வைகை நதியின் சுடுமணலில் நிற்கவைத்து சித்ரவதை செய்தான். மணலின் சூட்டிலிருந்து மாணிக்கவாசகரைக் காப்பாற்ற வேண்டுமே. எனவே, சிவபெருமான் வைகை நதியில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தார். பெருக்கெடுத்த வெள்ளம் கரைகளை உடைத்துக்கொண்டு ஊருக்குள் புகுந்துவிட்டது. உடைந்த கரைகளை அடைக்க வீட்டுக்கு ஓர் ஆள் வரவேண்டும் என்று உத்தரவிட்டான் மன்னன். மதுரையில் பிட்டு சுட்டு விற்றுப் பிழைப்புநடத்தும் கிழவி வந்தி. சிவ பக்தியில் சிறப்புற்றவள். அவளுக்குச் சொந்தமென்று சொல்லிக்கொள்ள எவருமில்லை. அவளுக்கு உதவ சோமசுந்தரப் பெருமானே கூலியாளாக வந்தியின் முன் தோன்றுகிறார். முன்னிற்பவரை முழுதுணராத கிழவி, `உதிராதவை எனக்கு, உதிர்ந்த பிட்டு உனக்கு' எனப் பங்கு பிரித்துப் பிட்டளிக்கிறாள், படியளக்கும் அந்தப் பரமனுக்கு. வந்திக் கிழவி கொடுத்த பிட்டை உண்டுவிட்டு, வைகைக் கரைக்கு வந்தவர், சிறிது நேரம் மண் சுமந்துவிட்டு, பிறகு கரைக்குச் சென்று உறங்கத் தொடங்கினார். பணிகளைப் பார்வையிட வந்த அரிமர்த்தன பாண்டியன், கூலியாளாக வந்த சிவபெருமானின் முதுகில் பிரம்பால் அடிக்கிறான். அந்த அடி உலகத்து அத்தனை உயிர்களிலும் பட்டு வலித்தது. சோமசுந்தரக் கடவுள் தம் அரிதாரம் களைந்து, சுயவடிவில் தரிசனம் தந்தார்.

வைகை மண்ணை, வந்திக் கிழவியின் பிட்டுக்காகத் தன் தலையில் சுமந்த பெருமானின் திருவிளையாடல், மதுரைப் பிட்டுத்தோப்பு மைதானத்தில் ஆவணி மூலத் திருவிழாவின் ஒன்பதாம் நாளன்று நடைபெறுகின்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தத் திருவிழாவுக்கு, திருவாதவூரிலிருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளுவார். தன் தந்தை நிகழ்த்தும் திருவிளையாடலைக் காண பிள்ளை வராவிட்டால் எப்படி? திருப்பரங்குன்றத்திலிருந்து வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமானும் மதுரை மீனாட்சி ஆலயத்துக்கு எழுந்தருளுகிறார். இந்த வருடம் நடைபெறும் மண்சுமந்த திருவிளையாடல் வைபவம் பிரதோஷ நாளில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

இந்த பிட்டுத்தோப்பு, மதுரை ஆரப்பாளையம் அருகே வைகையின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு, `பிட்டு சொக்கநாதர் கோயில்’  என்ற பெயரில் ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயில், சுமார் 800 வருடங்களுக்கு முந்தையது என்று அதன் தொன்மைச் சிறப்பை நம்மிடம் தெரிவித்தார் அர்ச்சகர் சிவசங்கர்.

இந்தத் திருவிழாவுக்காக மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து தெய்வ மூர்த்தங்கள் பிட்டுத்தோப்புக்கு எழுந்தருளுகின்றனர். திருவிழா முடிந்ததும், பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு வழங்கப்படுகிறது. மறுநாள், மீனாட்சி கோயிலில் `விறகு விற்ற’ திருவிளையாடல். அட.. நம்ம `பாட்டும் நானே பாவமும் நானே’ கதைதான். திருவிழா, பன்னிரண்டாம் நாளன்று தீர்த்தவாரியோடு நிறைவுறுகிறது.

இறைவனின் திருவிளையாடல்கள்தாம் எத்தனையோ பொருள் சொல்லுமே. மண் சுமந்த ஈசன், மனிதர்க்குச் சொல்வதென்ன?' நாமும், நாம் சுமப்பதும் பிறருக்கு உதவுவதாய் இருத்தலே பேறுபெற்ற வாழ்க்கை' என்பதே இந்த அருளாடலின் மூலம் ஈசன் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

இந்த ஆண்டுத் திருவிழா ஆகஸ்ட் 15- ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பிட்டுத் திருவிழா, வரும் 23-ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெறுகிறது!

பல வருடங்களுக்குப் பிறகு வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், வைகை அணையில் திறந்த வெள்ளம், இந்நேரம் மதுரை நகரை அடைந்திருக்கும். பிட்டுச் சுவையும் பக்திச் சுவையும் திகட்டத் திகட்டக் கலக்கும் வைகைக்கரைக்கு வாருங்களேன்!

‘பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண்சுமந்த கீர்த்தி வியன்மண்டலத்து ஈசன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.’

 - மாணிக்கவாசகர்

அடுத்த கட்டுரைக்கு