Published:Updated:

``இந்தக் கலையை அழியவிடக் கூடாது..!’’ கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் நடராஜன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``இந்தக் கலையை அழியவிடக் கூடாது..!’’ கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் நடராஜன்
``இந்தக் கலையை அழியவிடக் கூடாது..!’’ கிருஷ்ணர் பொம்மைகள் செய்யும் நடராஜன்

``இந்தக் கலையை அழியவிடக் கூடாது..." - கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பைக் குடும்பத் தொழிலாகச் செய்யும் விக்னேஷ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கண்ணன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்' என்று எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடும் கோகுலாஷ்டமி நாளை கொண்டாடப்படவிருக்கிறது. கோகுலாஷ்டமி என்றாலே கிருஷ்ணர் பொம்மைகள் விதவிதமாக அணிவகுக்கும். வருடம்தோறும் புதுப்புது கிருஷ்ணர் பொம்மைகளை வாங்கி வழிபட்டால்தான் பெரும்பாலானோருக்கு கோகுலாஷ்டமியைக் கொண்டாடிய மனநிறைவே ஏற்படும். 

கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி எனப் பொம்மைகளை வைத்துக் கொண்டாடும் விழாக்கள் நெருங்கிவிட்ட நிலையில், களிமண் கொண்டு பொம்மைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் வாழ்க்கை பரபரப்பாக மாறியிருக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை - காரைக்கால் சாலையில் அமைந்திருக்கும் விஜய் மண் தொழிலகத்தில், விதவிதமான கிருஷ்ணர் சிலைகள் தயாரித்து வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.  

கடையின் உரிமையாளர் நடராஜனிடம் பேசினோம்...

``நாங்க மூன்று தலைமுறையா இந்த வேலைய செய்றோம். கிட்டத்தட்ட 15 பேர் இங்க வேல செய்றாங்க. எங்க பசங்ககூட இந்த வேலைய ஆர்வமா செய்வாங்க. அந்தந்த சீஸனுக்கு ஏத்த மாதிரி சிலைகளைச் செய்வோம். இப்போ கோகுலாஷ்டமி வர்றதால, விதவிதமான கிருஷ்ணர் பொம்மைகளைச் செஞ்சிக்கிட்டிருக்கோம். கோகுலாஷ்டமிக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே கிருஷ்ணர் சிலைகளைச் செய்யத் தொடங்கிட்டோம். அதுல பாதி விற்பனையாயிடுச்சு. குழந்தையா இருக்குற கண்ணன் சிலையத்தான் எல்லாரும் ஆர்வமா வாங்கிட்டுப் போறாங்க. சில்லறை விற்பனை மட்டுமல்லாம தஞ்சாவூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களுக்கு மொத்த விற்பனையும் செய்றோம். இந்த ஊர்ல உள்ளவங்க கடைக்கே வந்து வாங்கிட்டுப் போவாங்க. கிருஷ்ண ஜயந்திக்குப் பிறகு, கொஞ்ச நாள்லயே விநாயகர் சதுர்த்தி வர்றதால இங்க விநாயகர் சிலைகள் செய்யும் வேலையையும் ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருக்கு. இது முடிந்த பிறகு, நவராத்திரி கொலுவுக்குத் தேவைப்படும் சிலைகளைச் செய்ய தொடங்குவோம்... இதுல பெரிய லாபமில்லை... ஆத்ம திருப்தி இருக்கு... அதனாலதான் குடும்பத்தோட செய்யிறோம்" என்றார்.

அவருடன் அவருடைய பிள்ளைகளும் இதே தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். நடராஜனின் மகன் விக்னேஷ் நம்மிடம், ''சிலைகள் செய்யறது எங்கக் குடும்பத் தொழில். நான் இளங்கலை ஓவியம் படிச்சிருக்கேன். என்னோட அண்ணன் எம்.ஃபில் முடிச்சிருக்கார். ஆனாலும், நாங்களும் சிலைகளைச் செய்வோம். எங்களோட கற்பனைக்கு ஏத்த மாதிரியான சிலைகளைச் செய்யறதோட, சில நேரத்துல வாடிக்கையாளர்கள் என்ன மாதிரியான சிலை வேணும்னு சொல்றாங்களோ அதே போலவும் செஞ்சி தர்றோம். நாங்க களிமண், காகிதக்கூழ் மட்டும்தான் பயன்படுத்தி சிலைகளைச் செய்யறோம். பொம்மைங்கள்ல எந்தக் கெமிக்கலும் சேர்க்கறதில்லை. 

பெரிய சிலைகள் செய்றதுக்கான வசதி இல்லை. வெளியிலிருந்து வாங்கி, வண்ணம் பூசி விற்பனை செய்யறோம். ஒரு சிலைக்கு உயிர் கொடுக்கறது, அந்தச் சிலைக்கு நாம எந்த மாதிரியான வண்ணம் பூசறோம்ங்கறதுலதான் இருக்கு. அதனால வண்ணம் பூசறதுல ரொம்ப கவனமா இருப்போம். இப்போ கிருஷ்ண ஜயந்திங்கறதால கிருஷ்ணர் சிலைகள் தயாரிப்பு ரொம்ப மும்முரமா நடந்துக்கிட்டிருக்கு. மத்த நேரங்கள்ல எல்லா விதமான பொம்மைகளும் செய்வோம். தேசத் தலைவர்களோட சிலைகளையும்கூட செய்வோம். ஆனா, இப்ப இந்தக் கலை மெள்ள மெள்ள அழிஞ்சிக்கிட்டு வருது. இன்னைக்குள்ள தலைமுறை இந்தத் தொழிலை விரும்புறதில்லை. ஆனா, உலகம் முழுக்க, தமிழர்களோட இந்தக் கலைக்கு பெரிய வரவேற்பு இருக்கு. இதை அழியவிடக் கூடாது. அதனாலதான் நாங்க படிச்சிருந்தாலும்கூட, பொம்மை செய்யற வேலையில் எங்களை ஈடுபடுத்திக்கிட்டோம்'' என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு