Published:Updated:

பல்லாயிரம் பக்தர்கள் சூழ, கவுனி தாண்டின திருப்பதி திருக்குடைகள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பல்லாயிரம் பக்தர்கள் சூழ, கவுனி தாண்டின திருப்பதி திருக்குடைகள்..!
பல்லாயிரம் பக்தர்கள் சூழ, கவுனி தாண்டின திருப்பதி திருக்குடைகள்..!

பல்லாயிரம் பக்தர்கள் சூழ, கவுனி தாண்டின திருப்பதி திருக்குடைகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முன்னர் தமிழகத்தின் வட எல்லையாகத் திகழ்ந்த திருமலை வேங்கடவனுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவு பக்திபூர்வமானது. மாநிலங்களின் பிரிவினைக்குப் பிறகும் இன்று வரை அந்த உறவு நீடிக்கிறது. அந்த உணர்வுபூர்வமான பக்தியின் வெளிப்பாடுதான் புரட்டாசி பிரம்மோற்சவத்தின்போது, வேங்கடவனுக்கு குடைகள் அர்ப்பணிக்கும் அற்புத நிகழ்வு. சென்னையிலிருந்து திருப்பதி குடை புறப்பாடு என்பது பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வைபவம்.

புரட்டாசி நெருங்கிவிட்டாலே, சென்னை மக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கேட்கும் முதல் கேள்வி, 'திருப்பதி குடை ஊர்வலம் எப்போது புறப்படுகிறது?' என்பதாகத்தான் இருக்கும்.

கேள்விக்கு விடையாக இன்று காலை திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டுவிட்டது.

திருமலையில் வேங்கடேச பெருமாளுக்கு வரும் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் நடைபெறும் கருட சேவை மிகவும் பிரதானமான வைபவம். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து பெருமாளின் கருடசேவை வைபவத்தை தரிசித்துப் பரவசப்படுவார்கள். அன்றைய தினத்தில் சென்னையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் குடைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும். 

இந்த நிகழ்ச்சி கடந்த 180 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

''சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம்

நின்றால் மரவடியாம் நீள் கடலுள்: என்றும் 

புனையாம் மணிவிளக்காம் பூம்பாட்டாம், புல்கும்

அணையாம் திருமாற்கு அரவு''  எனப் பாடுகின்றார் பொய்கையாழ்வார்

நின்றால் குடை, உட்கார்ந்தால் சிம்மாசனம், படுத்தால்  சயனம் என ஆதிசேஷன் திகழ்வதால், இந்தக் குடைகள் ஆதிசேஷனுக்கு நிகரான முக்கியத்துவம் பெறுகின்றன. 

சென்னை, தேவராஜ முதலித்தெருவில் இருக்கும் அருள்மிகு சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடைகளின் ஊர்வலம் தொடங்கியது. முன்னதாக, திருப்பதி குடைகளுக்கு இன்று காலை 9 மணி அளவில் சென்ன கேசவர் கோயிலில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவுக்கு, ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம் தலைமை தாங்கினார். அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி திருப்பதி குடைகள் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரி, வெள்ளிமலையில் உள்ள ஸ்ரீவிவேகானந்தா ஆசிரமத் தலைவர் சுவாமி சைதன்யானந்தா மகராஜ் ஆசியுரை வழங்கினார். அதன் பிறகு காலை 10.30 மணி அளவில் திருப்பதிகுடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. 

வழிநெடுகிலும் பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருப்பதி குடைகளுக்கு பூரண கும்ப மரியாதை செய்தனர். ஊர்வலப்பாதை நெடுகிலும் அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

பூக்கடை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. ஜனத்திரளுக்கு மத்தியில் 11 குடைகள் எடுத்துச்செல்லப் பட்டன. இவைதவிர, பெருமாளின் பொற்பாதங்கள், தசாவதார உற்சவர் சிலைகள்,  ஸ்ரீதேவி பூதேவி சமேத வேங்கடேசப் பெருமாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வந்தன. 

பிற்பகல் 12.30 மணிக்கு பைராகி மடத்துக்கு வந்த குடைகள் மாலை 4.30 மணிக்கு கவுனி தாண்டிச் சென்றன. சூளை நெடுஞ்சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, ஓட்டேரி மேம்பாலம் வழியாக அயனாவரம் காசி விசுவநாதர் கோயிலை அடைகின்றன.  

நாளை 12-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்படும் ஊர்வலம், கொன்னூர் நெடுஞ்சாலை, அயனாவரம், பெரம்பூர், அகரம் சந்திப்பு, திரு.வி.க.நகர், வழியாக வில்லிவாக்கம் சௌமிய தாமோதர பெருமாள் கோயிலை அடைகின்றது.   

நாளை  மறுதினம் 13-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, பாடி முகப்பேர், அம்பத்தூர், அத்திப்பட்டு வழியாகத் திருமுல்லைவாயிலை அடையும்.

14-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, ஆவடி இந்துக் கல்லூரி, பட்டாபிராம், திருநின்றவூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோயில் வழியாக ஆ.கே.என் திருமண மண்டபத்தை அடைகிறது.

15-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருப்பாச்சூர் கனகம்மாள் சத்திரம் வழியாக கீழ்த்திருப்பதி எஸ்.எம்.ஓ .சபா கல்யாண மண்டபம் அடையும். 

16-ம் தேதி காலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3 மணியளவில் மேல் திருப்பதியை அடைந்து பெருமாளுக்கு குடைகள் சமர்ப்பிக்கப் படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு