Published:Updated:

முஹர்ரம் நோன்பின் வரலாறும் படிப்பினைகளும்! #Muharram

முஹர்ரம் நோன்பின் வரலாறும் படிப்பினையும்...

முஹர்ரம் நோன்பின் வரலாறும் படிப்பினைகளும்! #Muharram
முஹர்ரம் நோன்பின் வரலாறும் படிப்பினைகளும்! #Muharram

ஸ்லாமிய மாதங்களில் ரமலானுக்கு அடுத்து பலரும் அறிந்த ஒரு மாதம் முஹர்ரம். இதுதான் ஹிஜ்ரா நாள்காட்டியின் முதல் மாதமும் கூட. இம்மாதத்தின் பிறை 9, 10 ஆகிய தினங்களில் நோன்பு வைப்பார்கள் முஸ்லிம்கள். குறிப்பாக, பிறை 10 அன்று அரசு விடுமுறையும் உண்டு.

இந்த 10 வது நாளைத்தான் `ஆஷூரா’ என்று இஸ்லாமிய வரலாறு அழைக்கிறது. ஆஷூரா எனும் அரபுச்சொல்லுக்கு `பத்தாவது நாள்’ என்றுதான் பொருள். இந்நாளின் சிறப்புகள் பல. சுமார் மூவாயிரம் வருடங்களுக்கும் மேலான பாரம்பர்ய வரலாறு இதற்கு உண்டு.

முதன் முதலில் இந்நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாக ஆக்கியவர்கள் யூதர்கள்தாம். அதாவது, இயேசு பிறப்புக்கும் முந்திய காலத்திலேயே ஆஷூரா நோன்பு தொடங்கிவிட்டது. யூதர்களின் சரித்திரத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவர்கள் நபி மூஸா எனும் மோசஸ் அவர்களை இறைத்தூதராக ஏற்று தனி மதத்தை அமைத்துக்கொண்டவர்கள்.

நபி மூஸா (அலை) அவர்களும் அவருடைய இனத்தாரும் எகிப்தில் ஃபிர்அவ்ன் (பாரோன்) எனும் கொடுங்கோல் மன்னனின் தேசத்தை விட்டுத் தப்பித்து வெளியேறியதை நாம் அறிவோம். யூதர்கள் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்து கீழ்ப்படியாமை மூலம் தங்கள் நபி மூஸாவை வருத்தினாலும், அவரைக்கொண்டுதான் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள். மூஸா ஓர் இறைத்தூதர் என்பதால் அவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு, ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து தாங்கள் தப்பித்துவிட முடியும் என்று நம்பினார்கள். அதே சமயம், அவரிடம் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு தொல்லை கொடுப்பதும், குதர்க்கமாகத் தங்கள் சொந்த புத்திக்குப் பட்டதையெல்லாம் பேசி அவரின் கட்டளைகளை உதாசினப்படுத்துவதும், அவர் இல்லாத சமயத்தில் காளைக்கன்று சிலை ஒன்றை வழிபாடு செய்து இறைவழிபாட்டில் இணைவைப்பதுமாக எத்தனை வழிகளில் ஓர் இறைத்தூதரை இம்சிக்க முடியுமோ அனைத்தையும் செய்தார்கள்.

ஆனால், வரலாறு நெடுக தங்களை நபி மூஸாவின் ஆன்மிக வாரிசுகளாகவும் தவ்றாத் (தோரா) வேதத்தின் ஏகபோக உரிமையாளர்களாகவும் முன்னிறுத்துவதில் வாய்ப்பேச்சு வீரர்களாக விளங்கினார்கள். இந்த நிலைமை ஆயிரக்கணக்கான இறைத்தூதர்கள் அவர்களின் இனத்தில் அனுப்பப்பட்டபோதும் தொடர்ந்தது. பல இறைத்தூதர்களைக் கொலை செய்தார்கள். நபி ஈஸா (இயேசு) வந்தார். அவரையும் கொல்வதற்குச் சதி செய்தார்கள். அவர் தங்களின் இனத்தைச் சேர்ந்தவரே என்றாலும் தங்களின் மத மோசடிகளுக்கு எதிராய் களப்பணி செய்கிறார் என்று அறிந்தவுடன் அவரையும் விட்டுவைக்கக் கூடாது எனும் முடிவுக்கு வருகிறார்கள். இறைவன் அவரைக் காத்தான். சிலுவை மரணத்தில் சிக்காதபடி உயிரும் உடலுமாக அற்புதமான முறையில் அவரை வானுலகு உயர்த்தினான் என்கிறது திருக்குர்ஆன்.

இறைத்தூதர்களுக்கும் இறைவேதங்களுக்கும் எதிராய் இவ்வளவு அழிச்சாட்டியம் செய்திருந்த நிலையில்தான் நபிகளார் இந்த யூதர்களை மதீனா மாநகரில் எதிர்கொள்கிறார்கள். அதற்கு முன்பு வரை யூதர்களுக்கு மத்தியில் வாழ்கின்ற நிலை நபிகளாருக்கு வாய்த்ததில்லை. மக்காவில் பிறந்து அதையே வாழ்விடமாகக்கொண்டு வயது 53-ஐ எட்டிவிட்டார் அவர். தமது சொந்த ஊர் மக்கள் தம்முடைய ஏகத்துவப் பிரசாரத்தை எதிர்த்து தம்மைக் கொலை செய்யவும் துணிந்த பிறகே மதீனா வந்தார்கள் நபிகளார். இங்குதான் யூதர்களுடனான உரையாடல் தொடங்குகிறது.

தங்களின் இனத்தில் இல்லாமல் அரபுக்கோத்திரமான குறைஷ் மக்களிலிருந்து ஒருவர் இறைத்தூதராக வந்திருப்பதை ஒருக்காலும் சீரணிக்க முடியாமல் அவரை எதிர்த்துச் சதி செய்வதையே இலட்சியமாகக்கொண்டு இயங்கினார்கள் யூதர்கள். ஆனால், தங்கள் இனத்திலிருந்து வந்த இறைத்தூதர்களிடமும் இப்படித்தான் அவர்கள் நடந்தார்கள் என்பதை வரலாறு முழுக்கப் பார்க்கிறோம்தானே?

இப்படியான ஒரு காலகட்டத்தில் மதீனாவில் நபிகளாரும் முஸ்லிம்களும் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் ஆஷூரா நோன்பிருந்த சமயத்தில்தான் அவர்களுக்கு ஒரு சங்கதி தெரிய வந்தது. யூதர்களும் நோன்பு வைக்கிறார்கள் என்று. நபிகளார் கேட்டார்கள், `உங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று?’ நபி மூஸாவின் பெயரில் பெருமையடிப்பதற்குக் கொஞ்சம் சளைக்காத யூதர்கள் சொன்னார்கள், ‘இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தையும் அல்லாஹ் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தையும் கடலில் மூழ்கடித்தான். எனவே, மூசா அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்.’

இந்தப் பதிலைக் கேட்ட நபிகளார், ‘உங்களைவிட நாங்களே மூசா அவர்களின் மீது மிகவும் உரிமையுள்ளவர்கள், நெருக்கமானவர்கள்’ (ஆதாரநூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2083)

நபிகளார் தமது சொந்த ஊர் மக்காவில் தாம் இறைத்தூதர் ஆகுவதற்கு முன்பே இந்நோன்பை வைப்பது வழக்கம். நபி இப்றாஹீம் (அலை) எனும் ஆப்ரகாமின் புதல்வர் நபி இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழிமுறையில் வந்த வணக்கங்களின் மிச்சம் இது எனலாம். (ஸஹீஹ் நமுஸ்லிம் 2072) இந்தப் பத்தாவது நாளில்தான் அங்குள்ள கஅபா எனும் பள்ளிவாசலின் மீது போர்த்தப்பட்டுள்ள திரை மாற்றப்படும். (ஸஹீஹுல் புகாரீ 1592)

இருப்பினும், தங்கள் இறைத்தூதரை இம்சித்து நன்றிகெட்ட நிலையில் வெற்றுச் சடங்காக நோன்பை வைத்து திருப்தியடைந்துகொள்கிற யூதர்களைப் பார்த்தபோது, அவர்களைவிட பல மடங்கு உண்மையான விசுவாசத்துடன் நபி மூஸாவை நேசித்து மரியாதை செய்கின்ற தாமும் முஸ்லிம்களுமே இந்நோன்பை அதிக விருப்பத்துடன் அனுசரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள் நபிகளார். அதே சமயம், அவர்களுக்கு ஒப்பாக தம்முடைய வழிபாட்டை ஆக்கிக்கொள்வதில் உடன்பாடு அற்றவர்களாகவும் இருந்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு இரண்டு நாள் நோன்பை வழிமுறை ஆக்கினார்கள். ஆஷூரா என்றால் பத்தாவது நாளைத்தான் குறிக்கும் என்றாலும், `இனி ஒன்பதிலும் நான் நோன்பு நோற்பேன்’ என்றார்கள். இன்று முஸ்லிம்கள் ஆஷூரா நோன்பை இரண்டு நாள்களாக அனுசரிக்க இதுவே காரணம். இதன் மூலம் நபி மூஸாவின் வெற்றியை நினைவுகூர்ந்து ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன், நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யூதர்களுக்கு மாற்றமாகவும் நடந்து தனித்துவத்தையும் நிலைநாட்டுகிறார்கள்.

இவ்வளவுதான் இஸ்லாமிய வரலாற்றில் ஆஷூராவின் சுருக்கமான செய்தி. இது தவிர்த்து கூடுதலாக எந்த வழிபாட்டையும் மூலாதாரங்களில் காண முடிவதில்லை. இன்று முஸ்லிம்களிடம் பரவலாக அறியப்படும் பிற சடங்குகள் அனைத்தும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவை. குர்ஆன் அல்லது நபிவழியின் அங்கீகாரமோ, நபித்தோழர்களின் வழிகாட்டலோ அவற்றுக்கு இல்லை.