Published:Updated:

பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்!

பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி-  வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்!
பெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்!

ம்பிகையைக் கொண்டாடும் காலம் நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி. ஆனால், அம்பிகைக்கு ஒன்பது ராத்திரி நவராத்திரி. அனைத்து இயக்கங்களுக்கும் ஆதார சக்தியாக இருப்பவள் அம்பிகையே. அதனால்தான் நம் தேசம் பெண்களை தெய்வமாகப் போற்றுகிறது. அம்பிகையை வழிபடும் நவராத்திரி விரத மகிமை பற்றி ஶ்ரீமத் தேவி பாகவதத்தில், ஜனமேஜய மகாராஜனுக்கு வியாச முனிவர் விவரமாகக் கூறியிருக்கிறார். 

சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று இரண்டு நவராத்திரிகள் பிரதானமாகக் கொண்டாடப் படுகின்றன. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாள்கள் கொண்டாடுவது வசந்த நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் ஒன்பது நாள்கள் சாரதா நவராத்திரி. சாரதா நவராத்திரி தமிழகத்தில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

புரட்டாசி அமாவாசை மற்றும் சித்திரை அமாவாசை இரண்டும் யமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை. இந்தக் காலங்களில் மனிதர்களுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் பல விதமான பிணிகளும், துன்பங்களும், இயற்கைச் சீற்றங்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவேதான், இந்தக் காலங்களில் நன்மைகளே நடைபெற வேண்டும் என்று விரும்புபவர்கள், சண்டிதேவியை ஆராதனை செய்யவேண்டும் என்று தேவிபாகவதத்தில் வியாசர் கூறுகிறார்.

அருள் தரும் நவராத்திரி!

நவ என்றால் ஒன்பது என்று மட்டுமல்லாமல், புத்துணர்ச்சி என்ற பொருளும் உண்டு. நவராத்திரி ஒன்பது நாள்களும் பூஜை செய்து தேவியை வழிபட்டால், நம் மனதில் புத்துணர்ச்சி பெருகும். மனம் செம்மையாகும். செம்மையான மனதின் எண்ணங்களும் செம்மையாகும். செயல்களும் செம்மையாகும்; வாழ்க்கையும் செம்மையுடன் சிறப்பாகும். நவகிரகங்களினால் ஏற்படக்கூடிய சகல விதமான தோஷங்களையும் நீக்கும்.  எனவே நவராத்திரி காலங்களில் அம்பிகையைப் பக்தி சிரத்தையுடன் வழிபடவேண்டும். 

நவராத்திரிக் காலத்தில் வழிபட வேண்டிய அம்பிகை, படைக்க வேண்டிய நைவேத்தியங்கள், வழிபடும் முறை, படைக்க வேண்டிய அர்ச்சனைப் பொருட்கள், பாடவேண்டிய மந்திரங்கள். போட வேண்டிய கோலம் குறித்து அறிந்துகொள்ள கீழேயுள்ள ஸ்லைடு ஷோவை கிளிக் செய்யுங்கள்!

 

விரத நியதிகள்...

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் தொடக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம்.

நவராத்திரி வழிபாடு செய்யும் வழிமுறைகளைத் தேவி பாகவதம் நமக்கு அழகாகச் சொல்லித் தருகிறது.

புரட்டாசி அமாவாசை அடுத்த பிரதமை தொடங்கி 9 நாள்கள் நவராத்திரி அனுஷ்டிக்க வேண் டும். நவராத்திரிக்கு  முதல் நாள், அதாவது அமாவாசை தினத்திலேயே பூஜைக்கு வேண்டி யவற்றை சேகரிக்க வேண்டும். அன்றைய தினமே பூஜையறையைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜையறையில் பூஜை மண்டபம் அமைப்பதற்கான இடம் மேடு பள்ளம் இல்லாமல் சமதளமாக இருக்க வேண்டும். அதைப் பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு செம்மண் இட வேண்டும். அந்த இடத்தின் நான்கு மூலைகளிலும் 16 முழம் உயரத்துடன் தூண்கள் நட்டு, தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். தூண்களில் அம்பாள் உருவம் உள்ள சிவப்புக் கொடி கட்டுவது சிறப்பு.

ஒரு ஜாலி விளையாட்டு. கீழேயுள்ள கொலுப் படியில் கடைசி வரிசையில் தசாவதாரப் பொம்மைகளை முறைப்படி அடுக்கி உதவுங்கள். நீங்கள் அடுக்கியது சரிதானா என்று உடனே தெரிந்துகொள்ளலாம். 

பூஜை இடத்தில் மையமாக நான்கு முழம் நீளஅகலமும், ஒரு முழம் உயரமும் கொண்ட ஒரு பீடம் (மேடை) அமைக்க வேண்டும். பிரதமை அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜைக்குத் தயாராக வேண்டும்.

பூஜை மேடையில் வெண்பட்டு விரித்த ஆசனம் இட்டு, அதன் மீது சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஏந்திய நான்கு கரங்களுடன் திகழும் தேவியின் திருவுருவம் அல்லது 18 கரங்கள் கொண்ட அம்பாளின் திருவடிவத்தை வைத்து தூய ஆடை, ஆபரணம், மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

அருகில் அம்பிகைக்கான கலச பூஜைக்காகக் கலசம் வைத்து அதில் நீர் நிரப்பி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றைப் போட்டு, மாவிலைகளை மேலே வைத்து மங்கல இசை முழங்க, வேத கோஷம் ஒலிக்க, பூஜையைத் தொடங்க வேண்டும்.

''தாயே... உன்னைப் பிரார்த்தித்து நவராத்திரி பூஜை செய்யப் போகிறேன். அது நல்லபடியாக நிறைவேற உன்னருள் வேண்டும். பூஜையில் ஏதேனும் குற்றம் குறைகள் இருப்பினும் பொறுத்துக்கொண்டு, உனது அனுக்கிரகத்தை எங்கள் வீட்டில் நிறையச் செய்ய வேண்டும்'' என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜிக்க வேண்டும். பலவிதமான பழரசங்கள், இளநீர், மாதுளை, வாழை, மா, பலா முதலானவற்றையும், அன்னத்தையும் (சித்திரான்னங்கள்) நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

இப்படி தினமும் மூன்று கால பூஜை செய்ய வேண்டும். 9 நாள்களும் விரதம் இருப்பவர்கள் பூஜை முடித்து, ஒரு வேளை உண்ண வேண்டும். தரையில் படுத்துத் தூங்க வேண்டும்.

நவராத்திரி கொண்டாடுவது ஏன்...  நவராத்திரி உணர்த்தும் தத்துவம் எது... நவராத்திரியின்போது அம்பிகையை ஒன்பது ரூபங்களில் வழிபடுவது ஏன்...  லட்சுமி, சரஸ்வதி படங்களை ராஜா ரவிவர்மா வரைந்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யங்கள் பற்றி அறிந்துகொள்ள சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீயின் அழகுத்தமிழ் பேச்சு... அவசியம் கேளுங்கள்! 

9 நாள்கள் விரதம் இருக்க இயலாதவர்கள் என்ன செய்யலாம்?

சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று நாள்கள் விரதமிருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை  எனில், அஷ்டமி தினத்தில் அம்பாளைப் பூஜித்து வழிபட்டு அருள் பெறலாம். இந்த தினத்தில்தான் தட்ச யாகத்தை அழித்த அம்பாள், அநேக கோடி யோகினியருடன் தோன்றினாள். அதனால் இந்த தினம் விசேஷமானது.

எவரொருவர் இந்த விரதத்தைத் தொடர்ந்து 9 நாள்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்குத் தேவர்களுக்கும் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும்.

தேவியை, 'யா தேவி ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண' என்று தாயின் வடிவமாகப் போற்று கிறோம். நம் அன்னையர்க்கெல்லாம் மூலமான அம்பிகையை நவராத்திரி நாள்களில் வழிபட்டு, நன்மைகள் அனைத்தையும் பெற்றிடுவோம்.

நவராத்திரி விரத பலன்...

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள்.

தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், கல்வி கேள்விகளில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருள்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருள்களை பயன்படுத்துவது சிறப்பு.

நவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை... குமாரி முதலாக 9 வடிவங்களாகப் பாவித்து வழிபடுவது மரபு.

அன்னை சக்தியை மட்டுமல்லாமல், அன்னை சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிடும் அற்புத வைபவமே நவராத்திரித் திருவிழா! பெண்களைப் போற்றிடும் புண்ணிய பாரதத்தில், அன்னை சக்தியுடன் பெண்களையும் தேவியின் வடிவங்களாக வழிபடும் நவராத்திரி ஒன்பது நாள்களும் நாம் செய்யும் தேவி பூஜை, நம்மையும் நம் சந்ததியினரையும் காலம் முழுவதும் அனைத்து வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்யும்.