Published:Updated:

மகா புஷ்கரம்... தாமிரபரணியில் நீராடி நவ திருப்பதி, நவ கயிலாயங்களைத் தரிசியுங்கள்! - ஒரு முழுமையான வழிகாட்டி #Vikatan360

144 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கரம்... நீராடும் முறைகள், நீராடுவதன் பலன்கள்...

மகா புஷ்கரம்... தாமிரபரணியில் நீராடி நவ திருப்பதி, நவ கயிலாயங்களைத் தரிசியுங்கள்! - ஒரு முழுமையான வழிகாட்டி #Vikatan360
மகா புஷ்கரம்... தாமிரபரணியில் நீராடி நவ திருப்பதி, நவ கயிலாயங்களைத் தரிசியுங்கள்! - ஒரு முழுமையான வழிகாட்டி #Vikatan360

பார்ப்பவர் மனதைப் பரவசப்படுத்துவதில் பொங்கிப் பெருகி வரும் நதிகளுக்கு ஈடு இணையே இல்லை. எத்தனை முறை பார்த்தாலும் நதியின் அழகு நமக்குச் சலிப்பதே இல்லை. நம் நாட்டில் எத்தனையோ நதிகள் பாய்ந்து மனிதர்களின் வாழ்க்கையைச் செழுமைப்படுத்தினாலும், நம் தமிழகத்தில் தோன்றி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் தாமிரபரணிக்குத் தனிச் சிறப்பு உண்டு.

மகா புஷ்கரம் செல்வோருக்காக படித்துறை வரைபடம்

பொதிகையின் பொன்மகளான தாமிரபரணி, இந்த பூமி செழிக்கவேண்டி தமிழ் முனிவர் அகத்தியர் அருளிய தனிப்பெருங்கொடை என்றே சொல்லலாம். அகத்தியரின் கமண்டலத்தில் இருந்த காவிரியை, உலக நலனுக்காக விநாயகர் காகம் வடிவில் வந்து விடுவித்தார் என்பது காவிரி பற்றிப் புராணம் கூறும் செய்தி. ஆனால், பூமி செழித்து விளங்கவேண்டும் என்பதற்காக அகத்தியர் தாமே மனமுவந்து விடுவித்த நதி தாமிரபரணி! 

தாமிரபரணி கரையோரத்தில் நவகயிலாயங்களுக்கான வழித்தடம் 360 டிகிரியில் இங்கே கிளிக் செய்து காணலாம்.

 

வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் தாமிரபரணி பெரிதும் போற்றப் பெற்றிருக்கிறது.
பூவுலகுக்கு அகத்தியர் அருளிய இந்தக் கொடையைப் பற்றி வால்மீகி முனிவர் தம்முடைய ராம காவியத்தில், ``மலைய மலையின் உச்சியில் வீற்றிருக்கிறவரும் சூரிய பகவானைப் போல மிகுந்த ஒளியுடன் திகழ்பவருமான அகஸ்திய முனிவர் பெருமானை தரிசிப்பீர்கள். அந்த இடத்தில் அதுவரையிலும் தம்முடைய கமண்டலத்தில் அடைபட்டிருந்த தீர்த்தத்தை, பூமி செழித்துச் சிறக்கவேண்டும் என்பதற்காக, மனம் உவந்து விடையளிக்க, அந்தத் தீர்த்தமே பெரிய பெரிய முதலைகள் நிரம்பப் பெற்ற பெரிய நதியாகிய தாமிரபரணி'' என்று வர்ணித்திருக்கிறார்.

வால்மீகியின் இந்தக் கருத்தையே கம்பர் 
தென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல்,
என்றும் அவன் உறைவிடமாம்; ஆதலினால்,
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திருநதி... 

பொன் துகள்கள் கலந்து வரும் காரணத்தினால், `திருநதி’ என்று போற்றுகிறார் கம்பர்.  

நம்முடைய இந்து தர்மம், நதிகளைத் தெய்வமாகப் போற்றி வணங்கச் சொல்கிறது. நதிகள் இலக்கியங்களில் பெண்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. சக்தியின் அம்சமாகப் பெண்களைப் போற்றிக் கொண்டாடும் புண்ணிய பூமி அல்லவா நம் பாரத தேசம். வடக்கில் இருப்பது ஒரு கயிலாயம்தான். ஆனால், தாமிரபரணியால் செழிப்புற்று விளங்கிய நம் தமிழ்நாட்டிலோ நவகயிலாயங்கள் இருக்கின்றன. வடதிசையில் இருப்பது ஒரு திருப்பதிதான். இங்கேயோ நவதிருப்பதிகள்.
எண்ணற்ற சிறப்புகள் கொண்ட தாமிரபரணி தோன்றிய கதைதான் என்ன?

சிவன் - பார்வதி திருமண வைபவத்தைத் தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் கயிலையங்கிரிக்கு வந்ததால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகத்தைச் சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்தாரத்தை அளித்தாள், அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

உண்மையில் அது வெறும் முத்தாரம்தானா என்றால் அதுதான் இல்லை.

பெண்களின் வடிவமாக நாம் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்துகொண்டிருந்தன. 
அந்த முத்தாரம் அம்பிகையிடம் வந்து சேர்ந்த கதைதான் என்ன..?

சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள் ஞானசக்தியாகிய பார்வதி தேவிக்குப் பணிவிடை செய்தனர். அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், `வேண்டும் வரம் கேளுங்கள்’ என்று சொல்ல, அவர்களோ, `தேவி,தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணக்கவேண்டும்' என்பதாக வரம் கேட்டனர். தன்னில் சரிபாதியைத் தனக்குத் தந்த சிவபெருமானைப் பிரிய மனம் இல்லாத தேவி, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாராயணனாகவும், நாரணியாகவும் வடிவெடுத்தாள். நாரணியாக தன் நாயகன் ஈசனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.
தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர் விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல, அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து தாமிர நிறம் பெற்று முத்துகளாக மாறின. அம்பிகை அந்த முத்துகளைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள். நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.

காலங்கள் வேகமாகக் கடந்து செல்ல, தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல் தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே தீயில் விழுந்து மாண்டாள்.
பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பித் தவம் இயற்றினாள். பராசக்தி, தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்குக் கொடுத்து அருளினாள். அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.

அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது. அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிரவர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று அந்தப் பெண்ணைப் போற்றிக் கொண்டாடினர். பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், `தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும், உரிய  காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்’ என்று கூறி, அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

மகா புஷ்கரத்தின் சிறப்புகளை விளக்கும் `சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்... வீடியோவைப் பார்க்க... இங்கே க்ளிக் செய்யவும்.

குடதிசைக் குடகுமலைப் பகுதியில் விநாயகப் பெருமான், அகத்தியருக்குத் தெரியாமல் அவருடைய கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து சிந்திய சிறிது நீரிலிருந்து தோன்றியதே காவிரி என்பது நமக்குத் தெரியும். பின்னர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்த அகத்தியர், கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார். மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர், வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார். கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி. அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும் தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

தாமிரபரணி கரையோர நவதிருப்பதி வழித் தடங்கள்... தல வரலாறு! 

 

ஸ்ரீவைகுண்டம்:

இந்த தாமிரபரணி நதிக்கரையில்தான் ஆதியில் தமிழர் நாகரிகம் தோன்றி வளர்ந்தது. நாகரிகத்துடன், பண்பாடு, கலாசாரம், வாழ்வியல் நெறிகள் அனைத்தும் தாமிரபரணிக் கரையில்தான் தோன்றி மனித மனங்களைச் செழுமைப்படுத்தின; அவர்தம் வாழ்க்கையை வளப்படுத்தின. இந்த வகையில் தாமிரபரணி என்பது நமக்குப் பார்வதி தேவியின் அருளால் கிடைத்த பெரும் கொடை என்றே சொல்லலாம்.

அமாவாசை தோறும் கங்கை, யமுனை போன்ற நதிகள் எல்லாம் தாமிரபரணியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுகின்றன என்பது ஐதீகம். எனவே, அமாவாசைதோறும் இங்கு வந்து பாணதீர்த்தத்தில் நீராடினால், அளவற்ற புண்ணியம் பெறலாம்.

காசியில் கங்கை புனிதநதியாகப் போற்றப்பெறுவதற்குக் காரணம், கங்கை அங்கே உத்தரவாகினியாகப் பாய்கிறாள் என்பதுதான். ஆனால், கங்கைக்கும் புனிதம் சேர்ப்பிக்கும் தாமிரபரணியோ, குப்தசிருங்கத்திலிருந்து பாணதீர்த்தம் வழியாக பூர்வவாகினியாக (கிழக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சி வரையிலும், பிறகு உத்தரவாகினியாக (வடக்கு நோக்கி) கல்லிடைக்குறிச்சியிலிருந்து சேரன்மகாதேவி வரையிலும், பின்பு அங்கிருந்து வைகுண்டம் வரை மறுபடியும் பூர்வவாகினியாகவும் எனப் பல திசைகளிலும் போக்குக் காட்டி, ஆட்டம் காட்டி நடைபயின்று, தன் குழந்தைகளாகிய நாம் புண்ணியம் சேர்த்துக்கொள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தக் கட்டங்களை தன் இரு கரைகளிலும் வைத்திருக்கிறாள். வேறு எந்த நதிக்கும் இப்படி ஒரு சிறப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

ஆதி நாகரிகம் என்றால் அது தமிழர் நாகரிகம்தான். அந்தத் தமிழர் நாகரிகம் தோன்றி வளர்ந்தது தாமிரபரணிக் கரையில்தான். அந்த வகையில் தாமிரபரணி என்பது நமக்கு ஆன்மிக ரீதியாக மட்டுமல்லாமல், கலாசாரம், பண்பாடு ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற நதியாகப் புகழுடன் விளங்குகிறது. 

நமக்கு வளமும் பெருமையும் சேர்க்கும் தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெறுவது மகிழ்ச்சிக்கு உரிய வைபவம் மட்டுமல்ல, நாமும் கலந்துகொள்ள வேண்டிய மகத்தான வைபவமும்கூட!