Published:Updated:

சரஸ்வதிதான் என்னை வழிநடத்துறா...- நெகிழும் நித்யஶ்ரீ! 

சரஸ்வதிதான் என்னை வழிநடத்துறா...- நெகிழும் நித்யஶ்ரீ! 
சரஸ்வதிதான் என்னை வழிநடத்துறா...- நெகிழும் நித்யஶ்ரீ! 

நித்யஶ்ரீ மகாதேவன் கர்நாடக சங்கீத உலகில் தனி முத்திரை பதித்தவர்.  ஜி.கே. பட்டம்மாள், பாலக்காடு மணி ஐயரின் பேத்தி. அவர் வெளியிட்டுள்ள 200- க்கும் மேற்பட்ட பக்திப் பாடல் ஆல்பங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. 300-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் பாடி இருக்கிறார்.  நவராத்திரியை ஒட்டி வீட்டையே கோயிலாக மாற்றியிருக்கிறார் நித்யஸ்ரீ. எல்லா தெய்வங்களும் வீட்டில் நிறைந்திருக்கிறார்கள். சரஸ்வதி பூஜை  வழிபாட்டில் இருந்தவரிடம் பேசினோம்.

"நம்முடைய பண்டிகைகள்ல நீண்ட நாள்கள் கொண்டாடும் பண்டிகை நவராத்திரி பூஜைதான். சின்ன வயசிலிருந்தே எனக்கு நவராத்திரி ரொம்பவும் ஸ்பெஷல். ஸ்கூல் விட்டு வந்ததுமே கொலு வைக்கிறது. ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் அலங்காரத்தில் தேவியை அலங்கரிக்கிறது, விதவிதமான பூக்களால் சரம் தொடுக்குறதுனு சந்தோஷமா இருக்கும்.

கொலுவையே ராத்திரி வரைக்கும் சுத்தித் சுத்தி வருவோம். ஒரு ஊரிலோ, நாம் வசிக்கும் தெருவிலோ ஒரு திருவிழா நடந்தா மனசு நம்மை அறியாமலே கொண்டாட்ட மனநிலைக்குப்போயிடும். நவராத்திரியோ நம்ம வீட்டுக்குள்ளேயே நடக்கிற திருவிழா. உறவினர்கள், நண்பர்கள்னு பலரும் நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போவாங்க. வீடே மகிழ்ச்சியால் நிறையும். ஒவ்வோர் ஆண்டும் விதவிதமான பரிசுப் பொருட்கள் வாங்குவோம். வித்தியாசமான ராகங்கள்ல பக்திப் பாடல்கள் பாடி மகிழ்வோம். அது இப்பவும் தொடருது. கல்வி, செல்வம், வீரம் இது மூணும் நம்மக்கிட்ட நிறைஞ்சிருக்க முப்பெரும் தேவியரையும் நாம வணங்குவோம். 

கையில் வீணையுடன், வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் ரூபம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கலைகளுக்கெல்லாம் அரசியாக இருந்து இந்த உலகையே ஆட்சி புரிகின்றார். அந்த ரூபத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். கலைகளுக்கெல்லாம்  தாயானவர். 

எங்க வீட்டுத்தோட்டத்துல  சரஸ்வதியின் சிலையை வெச்சு, தினமும் கும்பிட்டு  வர்றேன். காலையில எழுந்ததும், தோட்டத்து மலர்களை யெல்லாம் என் கையாலேயே பறிச்சு, பூச்சரம் கட்டி சரஸ்வதிக்குப் போடுவது எனக்கு அவ்வளவு இஷ்டம். இசைதான் எனது வாழ்க்கை என்பதாலும் இசை அரசி எனக்கு எப்போதும் ஸ்பெஷல்தான். 

13 வயசுல பாட ஆரம்பிச்சேன் 31 வருஷமா பாடிக்கிட்டு இருக்கேன்.  தமிழ்நாட்டுல ஏன் உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான கோயில்களுக்குப்போய் பக்திப் பாடல்களைப்  பாடி இருக்கேன்னா அதுக்குக் காரணம் சரஸ்வதி தேவியோட அருள்தான். 'விஷ்ணு சகஸ்ரநாமம்', 'விநாயகர் அகவல்', 'கந்தசஷ்டி கவசம்', 'வேங்கடேச சுப்ரபாதம்'னு இதுவரைக்கும் 200 க்கும் மேற்பட்ட தலைப்புகள்ல எல்லா தெய்வங்களையும் புகழ்ந்து பாடி பக்திப்பாடல் ஆல்பங்கள் வெளியிட்டு இருக்கேன். 

 எங்க குடும்பத்துல, நான் வளரும்போது என்கூடவே சங்கீதமும் இருந்தாலும், இன்னிக்கு இசையுலகத்துல எனக்குனு ஒரு இடம் இருக்குன்னா அதுக்குக்காரணம் கலைகளுக்கெல்லாம் அரசியான சரஸ்வதி தேவிதான். அவதான் என்னை வழிநடத்துறா...'' என்றவரிடம், 'எந்தக்கோயிலுக்கு விரும்பிப் போவீங்க. உங்களுடைய  வழிபாட்டுமுறை என்ன?' எனக்கேட்டோம்.

"நேரமும் சூழ்நிலையும் அமைஞ்சுதுன்னா, திருப்பதிக்கும் குருவாயூருக்கும்  அடிக்கடி போயிட்டு வருவோம். திருப்பதி வேங்கடேசப் பெருமாள் எப்பவுமே எனக்கு ரொம்ப ஸ்பெஷல். திருமலையில் வேங்கடேசப் பெருமாளின் மனசிலேயே லட்சுமி வாசம் செய்கிறார். திருமகளை தன் நெஞ்சிலேயே இடமளித்து பெருமாள் வைத்திருப்பதால்தான்  திருமலையில் தாயாருக்குத் தனி சந்நிதி இல்லை.

திருப்பதியில் அவரை தரிசனம் பண்றது சில நொடிகள்தான். ஆனா, அந்த நேரம் நம்ம மனசுக்குள்ள ஒண்ணுமே இல்லாம போயிடும். அவரைப்  பார்க்கப் போகும்போதெல்லாம் அசாத்தியமான ஒரு எலக்ட்ரிசிட்டி பவர் நமக்குள்ள உற்பத்தியாகுறதை நம்மால உணர முடியும். லக்ஷ்மியோட கடாட்சம் முழுசா இருக்கும் இடம். அந்த இடத்தில் இருக்கிறபோது மனசுல ஒரு பரவசமான உணர்வு ஏற்படும். அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது. 

எங்க பாட்டிக்குச் சொந்த ஊர் காஞ்சிபுரம். அதனால காஞ்சிபுரம் போகும்போதெல்லாம் ஶ்ரீகாமாட்சி அம்மனை தரிசனம் செய்யாம வரமாட்டேன். இப்படி மூன்று சக்திகளும்தான் இந்த உலகை இயக்குது.  அதனால இவங்க மூணு பேரையும் எப்பவும் வணங்கத் தவறவே மாட்டேன்.

தினப்படிக்கான வழிபாட்டுமுறைகள்னா திங்கள்கிழமை சோமவாரம்ங்கிரதால சிவனையும், செவ்வாய்க்கிழமை முருகனையும்  புதன்கிழமை விநாயகரையும் வணங்குவேன். வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள்ங்கிறதால சீரடி சாய்பாபா, ராகவேந்திரர், தக்ஷிணாமூர்த்தி... வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு, சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு, ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்குனு பாடல்கள் பாடி வணங்குவேன்''