Published:Updated:

மகா புஷ்கரம் இன்று நிறைவடைகிறது- குப்பைக் காடாக மாறிய நெல்லை!

மகா புஷ்கரம் இன்று நிறைவடைகிறது- குப்பைக் காடாக மாறிய நெல்லை!
மகா புஷ்கரம் இன்று நிறைவடைகிறது- குப்பைக் காடாக மாறிய நெல்லை!

புஷ்கரம் ஒவ்வோர் ஆண்டும் ஒரு புனித நதியில் நடத்தப்பட்டு வருகிறது. குரு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது இந்த விழா நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 முக்கிய நதிகள் புனித நதிகளாகக் கருதப்படுகின்றன. இந்த நதிகளில் புனித நீராடுவதுதான் புஷ்கரம் விழாவாகும். இந்தப் பன்னிரண்டு நதிகளுக்கும் 12 ராசிகள் குறிப்பிடப்படுகின்றன.

அதன்படி, 
மேஷம் – கங்கை 
ரிஷபம் – நர்மதை 
மிதுனம் – சரஸ்வதி 
கடகம் – யமுனை
சிம்மம் – கோதாவரி 
கன்னி – கிருஷ்ணா
துலாம் – காவிரி 
விருச்சிகம் – தாமிரபரணி 
தனுசு – சிந்து 
மகரம் – துங்கபத்திரை 
கும்பம் – பிரம்மபுத்ரா 
மீனம் – பரணி 

இந்த ஆண்டு குருபகவான், துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறியிருக்கிறார். இதையடுத்து திருநெல்வேலி தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்குப் பின்னர் புஷ்கர விழா வைகாசி விசாகத் தினமான அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தினம் ஒரு ராசிக்காரர்கள் தாமிரபரணியில் புனித நீராட வேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஏராளமானோர் குடும்பத்தோடு வந்து நீராடினர்.

புஷ்கர விழாவையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது. மேலும், ஆன்மிக அமைப்பினரும், அறக்கட்டளையினரும் கடந்த ஓராண்டாகவே இந்த விழாவுக்காக வேலை செய்தார்கள். கழிவுகளாகவும் புதர்களாகவும் கிடந்த தாமிரபரணி நதிக்கரைகள் சுத்தம் செய்து பராமரிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வரையில் தாமிரபரணி நதியில் 64 தீர்த்தக் கட்டங்கள், 144 படித்துறைகள் சீரமைக்கப்பட்டு அங்குள்ள கழிவுகளும், புதர்களும் அகற்றப்பட்டன.

பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதுார், முக்கூடல், கோடகநல்லுார், கரிசூழ்ந்த மங்கலம், திருவேங்கடநாதபுரம், குறுக்குத்துறை, சீவலப்பேரி ஆறுகளில் உள்ள படித்துறைகள், சேரன்மகாதேவி வியாசர், அத்தாளநல்லுார் கஜேந்திர மோட்சம், அருகன்குளம் ஜடாயு ஆகிய தீர்த்த கட்டங்களில் பக்தர்கள் குளிப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 
அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் நவ கயிலாயங்களில் குருஸ்தலமாக விளங்கும் முறப்பநாடு சிவன்கோயில் பகுதி தாமிரபரணி ஆறு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல் ஆகிய படித்துறைகள் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்பதால் அங்கும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

புஷ்கர விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், புஷ்கர விழா நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளும், சில தனியார் அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. குறிப்பாக, `திருநெல்வேலி தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை ஆகிய இடங்களில் ஆறு ஆழமாக இருப்பதாலும் பாதுகாப்பு இல்லாததாலும் நீராட அனுமதிக்க முடியாது' என்று கூறி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்தத் தடையை நீக்குமாறு சென்னையைச் சேர்ந்த ஒரு சமூகநல ஆர்வலர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.  உயர்நீதிமன்றம் மாவட்ட நிர்வாகத்தின் தடையை நீக்கியது. இதனால் மீண்டும் ஏற்பாடுகள் தீவிரமடைந்தன.  

புஷ்கர விழாவின் முதல் நாளில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தி விழாவைத் தொடங்கி வைத்தார். பக்தர்கள் வரிசையாகச் சென்று ஆற்றில் நீராட ஆங்காங்கே சவுக்குக் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் தயாராக இருந்தனர். ஆழமான மற்றும் ஆபத்தான இடங்கள் குறித்து எச்சரிக்கை விளம்பரங்களும் வைக்கப்பட்டிருந்தன. மேலும், பல இடங்களில் குடிநீர்த் தொட்டிகள், நடமாடும் கழிவறைகள், முதலுதவி சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆற்றில் யாரும் மூழ்கி விட்டால் அவர்களைக் காப்பாற்ற உதவும் வகையில் நீச்சல் தெரிந்தவர்கள் பாதுகாப்புக் கவசங்களுடன் ஆற்றில் நீந்தி வந்தனர். ஆற்றுக்குள் கழிவுத் துணிகளை போடாமல் இருக்க ஆங்காங்கே  இரும்பு வலையாலான தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. நகரம் முழுவதும் உள்ள தனியார் விடுதிகள், தங்கும் இடங்கள் பக்தர்கள் வருகையால் நிரம்பி வழிந்தன. ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் இரவு பகலாகத் திறந்து வைக்கப்பட்டிருந்தன. 

வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. கடந்த 12 நாள்களாக நடந்துவந்த தாமிரபரணி மகா புஷ்கரம் இன்றோடு (23.10.2018) நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கு லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் பெரும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எங்குப் பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. போதிய அளவுக்குக் கழிவறைகள் அமைக்கப்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். இந்த விழாவில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திரைப்பட நடிகர்கள், இயக்குநர்கள் அதிக அளவில் வந்து புனித நீராடினர். சுமார் 5 லட்சம் பேர் வரை  நீராடி இருப்பதாகாக் கூறப்படுகிறது.  

புஷ்கரத் துளிகள்!

*தாமிரபரணி அன்னை சிலை, திருநெல்வேலியிலிருந்து பாபநாசத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியா முழுவதுமுள்ள 12 புனித நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் தாமிரபரணியில் கலக்கப்பட்டன.
* நெல்லையில் கடந்த 12 நாள்களும் வணிகம் அபாரமாக இருந்தது. குறிப்பாக, நெல்லையில் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா  கடையில் கூட்டம் களைகட்டியது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் போலீஸார் உதவியுடன் வரிசை அமைக்கப்பட்டு அல்வா விற்பனை  நடந்தது. ஏராளமானோர் வாங்கிச் சென்றனர்.       
*நெல்லை சுற்றுப்புறக் கிராமங்களில் மல்லி, பிச்சி ஆகிய பூக்கள் அதிகமாக விளைகின்றன. வழக்கமாக கிலோ 200 ரூபாய் முதல் 400 வரை  பூக்கள் விற்கப்படும். புஷ்கர நாள்களில் கிலோ ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. அதேபோல் தேங்காய், மாலை விற்பனையும் களைகட்டியது.    
* நெல்லையை அடுத்த அருகன்குளம் பகுதியில், ராமபிரான் ஜடாயுக்கு மோட்சம் அளித்துத் தவம்செய்த ஜடாயு கட்டம் அமைந்துள்ளது. அந்த இடத்தில் பக்தர்களின் வசதிக்காகப் புதிதாக படித்துறை அமைக்கப்பட்டிருந்தது.
* மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் திருநெல்வேலி அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தில் இஸ்லாமியர்கள் தாமிரபரணியில் நீராடி கூட்டாகப் பிரார்த்தனை செய்தனர். 
* தாமிரபரணியில் நடைபெற்ற ஆரத்தி பூஜையின்போது காசியிலிருந்து 7 சிறப்பு ஆரத்தி தட்டுகள் கொண்டு வரப்பட்டன.
*தமிழகம் முழுவதுமிருந்து 12 ரதங்கள் ஊர்வலமாக நெல்லைக்கு வந்தன .  

* ஆற்றில் ஏற்கெனவே கழிவுகள் பெருமளவில் இருந்தன. புனிதநீராடும் பக்தர்கள் துணிகளைப் போட தனியாகத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், பெரும்பாலானோர் ஆற்றுக்குள்ளேயே போட்டுச் சென்றதால் துணிகள் நிறைந்து தாமிரபரணியே குப்பைக்காடாக மாறிக்கிடக்கிறது. இதைச் சுத்தம் செய்தால் மட்டுமே மக்கள் மீண்டும் நீராடமுடியும். 
* உணவுப் பொட்டலங்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் என்று வெளியூரிலிருந்து வந்தவர்கள் இறைத்துச் சென்றுள்ள குப்பைகளால்  நகரமே அசுத்தமாகிக் கிடக்கிறது. 
* வெளியூரிலிருந்து வந்த வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக விருப்பத்துக்குக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. 
* ஹோட்டல்களில் உணவுப் பண்டங்கள் விலை தாறுமாறாக இருந்தது.
*அருகன்குளம் உள்ளிட்ட இரு இடங்களில் நதியில் நீராடியபோது சிலர் நகைகளைத் தொலைத்தனர். அதை போலீஸார் மீட்டுக் கொடுத்தனர். 

Phot Credits : Madhan