Published:Updated:

நாளை (28.10.2018) வாஸ்து நாள்... பூமி பூஜை போடுவது எப்படி? #VastuDay

குடியிருக்கப் போகும் மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது வாஸ்து சாஸ்திரம். அந்த வாஸ்து எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

நாளை (28.10.2018) வாஸ்து நாள்... பூமி பூஜை போடுவது எப்படி? #VastuDay
நாளை (28.10.2018) வாஸ்து நாள்... பூமி பூஜை போடுவது எப்படி? #VastuDay

`மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்று கூறுவார்கள். மனைவி மட்டுமல்ல வாழப்போகும் மனையும்கூட நல்ல விதமாக அமைவதும் இறைவன் கொடுத்த வரமே. நல்ல மனை அமைவதுதான், வளமான வாழ்க்கைக்கு அடிப்படை.

நாம் சிலரைப் பார்த்திருப்போம். மகிழ்ச்சியுடன் ஒரு வீட்டில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். ஆனால், வசதி போதவில்லை என்று வேறொரு வீட்டுக்குக் குடிபுகுவார்கள். ஆனால், அந்த வீட்டில் அவர்களின் நிம்மதியும், மகிழ்ச்சியும் பறிபோய்விடும். வீட்டைவிட்டு வெளியேறும்போது நோயாளிகளாகவோ அல்லது வாழ்வில் அல்லல்பட்டு துயரத்துடனோ வெளியேறுவார்கள். சிலருக்கோ புது மனைக்குக் குடியேறியதும் அனைத்துவிதமான யோகங்களும் வந்து சேர்ந்து வாழ்க்கை நிலையே மாறிவிடும்! 

குடியிருக்கும் மனையானது நமது வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். குடியிருக்கப் போகும் மனையின் அமைப்பைத் தீர்மானிப்பது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நாள் வருடத்தில் 8 நாள்கள் மட்டுமே வருகிறது. கும்பகர்ணனைப் போல எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் வாஸ்து புருஷன் கண் விழிக்கும் நேரமே வாஸ்து நாள் என்று சொல்லப்படுகிறது. புது வீடு கட்ட அன்றுதான் நாம் பூமி பூஜை செய்கிறோம். 

வாஸ்து புருஷன் என்பவர் யார், அவர் ஏன் எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கிறார், வாஸ்து நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமி பூஜை போடலாமா, போன்ற பல்வேறு சந்தேகங்கள் நமக்கு ஏற்படக்கூடும். நம்முடைய சந்தேகங்களைத் தெளிவு படுத்துகிறார் சென்னை வாஸ்து நிபுணர் ஜெகன்னாதன்.

``வாஸ்து என்றால், பொருள்கள் அதாவது வஸ்துக்கள் இருக்கும் இடம் என்று பொருள். வாஸ்து முறைப்படி வஸ்துக்களை அமைத்தால் வாஸ்து புருஷனின் ஆசிகள் பெற்று வளமோடு வாழலாம். மனிதன் ஏற்படுத்திக்கொண்ட வசதி வாய்ப்புகளை இயற்கைச் சக்திகளோடு ஒருங்கிணைக்கும் ஓர் அறிவியல்தான் `வாஸ்து’ சாஸ்திரம். ஐம்புலன்களால் அறியக்கூடியதும் அறிய முடியாததுமான இயற்கை  சக்திகளை, மனித வாழ்வுக்குப் பயன்படும் வகையில் அமைத்துக் கொள்வதே வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படைக் குறிக்கோள்.

நாம் வாழப்போகும் வீட்டை உயிரற்ற ஜடப் பொருளாகக் கருதாமல், உயிர்ச் சக்தியாகப் பாவித்து `வாஸ்து புருஷன்’ எனும் குறியீடாக எழுதப்பட்டதே வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நூலில் `வாஸ்து புருஷன்’ பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. வாஸ்து புருஷன் என்கிறவர் ஆதிகாலத்தில் பிரபஞ்சம் உருவானபோது தோன்றிய பெரும்பூதம். பிரம்மன் உலகத்தைப் படைத்தபோது நிலத்தையும், ஆகாயத்தையும் ஒருசேர வியாபித்துக்கொண்டு வடகிழக்கில் தலையையும், தென்மேற்கில் காலையும் வைத்துக்கொண்டு குப்புறக் கிடந்தபடி தோன்றினார்,  ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டு பெரும்பூதமென உறங்கிக்கொண்டிருந்த வாஸ்து பகவானைக் கண்டு நடுநடுங்கிப் போன பிரம்மனும், தேவர்களும் அவரை எழுந்திருக்க விடாதபடி, அப்படியே குப்புறக் கிடந்த நிலையிலேயே அழுத்திக்கொண்டார்கள். வாஸ்து பகவான் அப்படியே உறங்கத் தொடங்கிவிடுவார். அப்போது யார், யார் எந்தெந்தப் பகுதியைப் பிடித்து அழுத்திக்கொண்டார்களோ, அவரவர் அந்தந்தப் பகுதிகளுக்கு அதிபதியானார்கள். பிரம்மனாலும், தேவர்களாலும் உறங்கவைக்கப்பட்ட வாஸ்து புருஷன் வருடத்தில் 8 நாள்கள்தாம் கண் விழிப்பார். அந்த நாள்களிலும் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) விழித்திருப்பார், பிறகு மீண்டும் உறக்க நிலைக்குச் சென்றுவிடுவார்.

அவர் விழித்திருக்கும் ஒன்றரை மணி நேரத்தில் கடைசி 36 நிமிடங்கள் மட்டுமே பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம். வாஸ்து புருஷன் கண் விழித்து உணவு உண்டு, தாம்பூலம் தரிக்கும் நேரம் இது. இந்த நேரத்தில் மனை பூஜையைத் தொடங்கி முடித்தால் மனை சிறப்பாக அமையும். மற்ற நேரத்தில் பூஜை செய்யக்கூடாது.

மனையின் வடகிழக்கு மூலையில்தான் பூமி பூஜை செய்ய வேண்டும். வடகிழக்கு மூலையில் மூன்றுக்கு மூன்றடி பள்ளம் தோண்டி, அங்கிருக்கும் மண்ணை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மண் கொண்டுவந்து நிரப்ப வேண்டும். பிறகு, அதில் ஓர் அடி ஆழமுள்ள குழி எடுத்துக்கொள்ள வேண்டும். ஆறு, கடல், ஓடை, ஏரி ஆகியவற்றிலிருந்து நீர் கொண்டுவந்து அதில் பால் சேர்த்து குடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், முறைப்படி விநாயகர், குலதெய்வம் மற்றும் விருப்பமான தெய்வத்தை மனதார வேண்டியபடி, மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் செங்கற்கள் எடுத்து அவற்றுக்குச் சந்தன குங்குமத் திலகம் இட்டு, குழியில் ஊன்ற வேண்டும். இதைத் தொடர்ந்து கன்னிப்பெண்கள், குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்களை பால் கலந்த நீரை குழிக்குள் ஊற்றச்செய்ய வேண்டும். பிறகு ஒன்பது நவதானியங்களையும் தூய்மையான வெள்ளைத் துணியில் முடிச்சிட்டு பாலக்கோலில் கட்டி, குழிக்குள் இறக்க வேண்டும். இதுவே பூமி பூஜை செய்யும் முறை. இந்தப் பூமி பூஜையை வாஸ்து நேரத்தில் கடைசி 36 நிமிடத்துக்குள் செய்து முடித்துவிட வேண்டும். 

வாஸ்து பகவான் கண் விழிக்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமி பூஜை போடலாம் என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால், இது தவறு. வாஸ்து நேரத்தில் மற்ற கிரகப் பலன்களையும் பார்த்து, நல்ல நேரமாக இருந்தால் மட்டுமே பூமி பூஜையைச் செய்ய வேண்டும். நாளை, ஞாயிற்றுக்கிழமையன்று வரும் வாஸ்து நாள் பூமி பூஜை செய்வதற்கு ஏற்ற நாள். காலை மணி 7.42 முதல் 8.18 வரை உள்ள நேரம் பூஜை செய்வதற்கு உகந்த நேரம்.இந்த நேரத்தில் பூமி பூஜை செய்தால் வாஸ்து புருஷன் மற்றும் பஞ்ச பூதங்களின் அருள் பெற்று, சகல வசதிகளையும் பெற்று சிறப்புற வாழலாம்.''