Published:Updated:

தீபாவளி எண்ணெய்க் குளியல்... ஏன், எதற்கு, எப்படி?

தீபாவளி எண்ணெய்க் குளியல்... ஏன், எதற்கு, எப்படி?
தீபாவளி எண்ணெய்க் குளியல்... ஏன், எதற்கு, எப்படி?

தீபாவளி அன்று நீராடுவதை `புனித நீராடல்' என்றே குறிப்பிடுகின்றனர். `புனித நீராடல்' என்று சொல்வதற்குக் காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும் உள்ள தண்ணீரில் கங்கையும், காவிரித் தாயும் இருப்பதாக ஓர் ஐதீகம். அதேபோல் எண்ணெய்யில் லட்சுமியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக ஒரு நம்பிக்கை...

ந்தியப் பண்பாடு, பண்டிகைகளால் நிறைந்தது. ஒவ்வொரு பண்டிகைக்கும் பல்வேறு  புராணம் மற்றும் வரலாற்றுக் காரணங்களும், கதைகளும் இருக்கின்றன. அது எப்படியாக இருந்தாலும் நம் மானுடப் புரிதல் என்பது சற்று வேறுபட்டதாகவே இருக்கவேண்டும். தீபாவளி என்ற வார்த்தையைக் கேட்டதும் நம் அனைவரின் முகத்திலும் புன்னகை தோன்றும். 

தீபாவளி அன்று நீராடுவதை `புனித நீராடல்' என்றே குறிப்பிடுகின்றனர். `புனித நீராடல்' என்று சொல்வதற்குக் காரணம், அன்றைய தினம் அதிகாலையில் எல்லா இடங்களிலும் உள்ள தண்ணீரில் கங்கையும், காவிரித் தாயும் இருப்பதாக ஓர் ஐதீகம். அதேபோல் எண்ணெய்யில் லட்சுமியும், அரப்புப் பொடியில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும் வசிப்பதாக ஒரு நம்பிக்கை.

இந்நாள் ஆண்டுக்கு ஒருமுறை எனப் பலரும் எண்ணெய்க் குளியல் செய்யும் நாளாக  அமைகிறது. சித்த மருத்துவத் தாத்பரியத்தின்படி உடலின் அதீத பித்தத்தை  எண்ணெய்க் குளியல் மூலம் சமப்படுத்தலாம். இனிவரும் காலங்களில் வாரம் இருமுறை எண்ணெய்க் குளியலைப் பழக்கப்படுத்திக் கொண்டால்,  அது நம் உடலுக்கு, நம்மையும் அறியாமல் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.

பொதுவாக, இந்தப் பண்டிகை `சுவீட் எடு... கொண்டாடு...' என்ற விதத்தில் அமைவது  வழக்கம். தீபாவளி என்பது பல வீடுகளில் பலகாரங்களை மையமாகக் கொண்டே இருக்கும். அதுவும் தலை தீபாவளிக்கு வரும் மாப்பிள்ளைகளின் நிலைமை சற்று கவலைக்கிடமாகவே இருக்கும்.

சர்க்கரைநோய் உள்ள வீட்டுப் பெரியவர்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. `பண்டிகை நாளில் மட்டும் ஒரு மாத்திரை சேர்த்துப் போட்டுக்கோங்க', `இந்தாங்க... கொஞ்சமா சாப்பிடுங்க...' என பல வீட்டம்மாக்களின் கருணை அன்றுமட்டும் சற்று தூக்கலாகவே இருக்கும். அப்படியான கருணையை சற்றே ஓரம் கட்டிவையுங்கள். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இனிப்புகளைச் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர்களின் ரத்தச் சர்க்கரையின் அளவு சற்று உயர்ந்து கொண்டே வருகிறது என அறிந்து செயல்பட வேண்டும். வீட்டில் செய்யும் இனிப்புகளையும் வெள்ளைச் சர்க்கரையையும் தவிர்த்து, நாட்டு வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்திச் செய்வது உடலுக்கு வன்மை அளிக்கும்.

எண்ணெய்க் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் ஏற்றது. நல்லெண்ணெயில் சிறிது மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, பச்சரிசி  சேர்த்துப் புகை மற்றும் நெடி ஏறாதவாறு காய்ச்ச வேண்டும். அதை உடல் முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதையடுத்து கடலை மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து அந்தக் கலவையை உடல் முழுவதும் தேய்க்க வேண்டும். கால் மணி நேரம் கழித்து இதமான வெந்நீரில் குளிப்பது நல்லது.  நல்லெண்ணெய் தவிர தேங்காய் எண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். விளக்கெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். சூரிய உதய வேளையில் எண்ணெய்க்குளியல் செய்வது நல்லது.

 தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சாப்பிடும் உணவுகளால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாந்தி, பேதி, வயிற்றுப் பிரட்டல் ஆகியவை ஏற்படலாம். இது சிறு குழந்தைகளுக்கு மட்டும் ஏற்படுவதில்லை. பல வீடுகளில் வயதான 'பெரிய குழந்தைகளுக்கு' ஏற்படுவதும் இயல்புதான். இதற்கு சரியானமுறையில் செய்யப்பட்ட உடலுக்கு ஊட்டம் தரும் பலகாரங்களை உண்பதே சிறந்தது. பலகாரங்கள் செய்யப் பயன்படுத்தும் எண்ணெய்களைத் தரமானதாகப் பெற்று பயன்படுத்தவேண்டும்.

எது தரமான எண்ணெய்..?

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் என எல்லா எண்ணெய்களிலும் கொழுப்பு இருப்பதாகச் சொன்னதன்பேரில் சன்ஃப்ளவர் ஆயிலைப் பயன்படுத்தினோம். இப்போது ரீஃபைண்டு ஆயில், ஐரோப்பாவில் இருந்து வரும் ஆலிவ் ஆயில், ஜப்பானில் அதிகம் பயன்படுத்தும் தவிட்டு எண்ணெய் போன்றவை நல்லதென்று சொல்லப்படுகிறது. ஆனால், இதில் எந்த எண்ணெய் தரமானது எனப் பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். 

நம் நாட்டுச் சந்தையில் எண்ணெய்களுக்குப் பஞ்சமில்லை. எந்த எண்ணெயில் பொரித்தாலும் கொழுப்புதான். கூடுமானவரை அதிகமாக எண்ணெயில் பொரித்த பண்டங்களைத் தவிர்ப்பது நல்லது. மாறாக, நம் நாட்டு நல்லெண்ணெய்க்கு ஈடாக வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுதான் நாம் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்திய சமையல் எண்ணெயாக இருந்திருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 47 சதவிகிதம் 'பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம்' (poly unsaturated fatty acids) உள்ளது. அதற்குப் பின்னால் நாம் அதிகம் ஓரம்கட்டிய தேங்காய் எண்ணெய். தாய்ப்பாலில் உள்ள, நோய் எதிர்ப்புத்தன்மை கொண்ட 'லாரிக் அமிலம்' (Lauric Acid) தேங்காய் எண்ணெயில் இயற்கையாகவே உள்ளது.

மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்துவதே நல்லது. எந்த எண்ணெய்யாக இருந்தாலும் அளவுடன் பயன்படுத்த வேண்டும். முக்கிமாக எண்ணெய்களில் வறுக்கும்போது எவ்வளவு நேரம் வறுக்கிறீர்களோ அதே அளவுக்கு நம் உடலையும் அது வறுத்தெடுக்கும். எண்ணெயைக் கொண்டு உணவுகளை வறுப்பதால் அளவுக்கு அதிகமாக கொழுப்பு அமிலம் உருவாகி இதயம், இதயத் தசை ஆகியவற்றைக் கெடுக்கும்.

பண்டிகைக்கு வீட்டில் பண்டங்கள் செய்த காலம்போய், தற்போது ஆன்லைனில் பலவித இனிப்புகளை ஆர்டர் செய்யும் காலத்துக்கு வந்துவிட்டது நம் சமூகம். அதனை முடிந்தவரை தவிர்த்து நமது அடுத்த சமூகத்துக்கு நம் நாட்டுப் பாரம்பர்யத்தைக் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான நிலையில் இருக்கிறோம்.

பாரம்பரிய பதார்த்தங்களுக்கான ரெசிபிகள் சில!

தினை தேன் லட்டு/தினை உருண்டை:

தினை மாவு - ஒரு கப்

தேன் – தேவையான அளவு

நன்றாகப் பொடித்த தினைமாவுடன் தேன் கலந்து சிறிதுநேரம் ஊறவைத்து நன்றாகக் கிளறி லட்டுகளாகப் பிடிக்க வேண்டும்.

ராகி முறுக்கு:

ராகி மாவு ,பொட்டுக்கடலை மாவு, உளுந்து மாவு, நெய், சீரகம், எள் மற்றும் உப்பு. 

இவை அனைத்தையும் கலந்து கிளறி முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் போட்டுப் பொரித்து உண்ணலாம். இதுபோன்ற மரபுரீதியான பண்டங்களை வீட்டில் செய்து உண்ணலாம்.

பண்டிகைக் காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து வீட்டில் பெரியவர்களிடம் ஆசிபெற்று, அவர்களோடு நேரம் செலவிட வேண்டும். அவ்வாறு செய்வதை விட்டுவிட்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆனந்த (மது) பானங்களை அருந்துவதால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. கொண்டாட்டம் என்பது நம் மனதில் மட்டுமே உள்ளது. ஒவ்வொரு மனிதனுக்கும் சுயக் கட்டுப்பாடு அவசியம் தேவை. 

அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.

அடுத்த கட்டுரைக்கு