Published:Updated:

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

Published:Updated:
ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

முருகப் பெருமானுடைய ஆறு திருமுகங்களில், ஆறாவது திருமுகம் உலகமெல்லாம் இன்பவாழ்வு பெறுவதற்காக ‘வள்ளி’யோடு மகிழ்ந்து விளங்கு கிறது. மற்ற ஐந்தும்... ஒளி தரும் முகம், அன்பர்க்கு அருளும் முகம், வேள்வி காக்கும் முகம், ஞானம் உணர்த்தும் முகம் மற்றும் வீரம் விளைவிக்கும் முகமாகத் திகழ்வதாக நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் வர்ணித்திருக்கிறார்.

‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே’ என்று அவர் பாடும்போது, தேவமகளாகிய தேவயானையுடன் அமர்ந்து மகிழும் ஆண்டவன், குறவர் மடமகள் என்று எண்ணாமல், அவளுடனும் மகிழ்ந்த  முருகனின் பரம கருணையைக் காட்டுகிறது. மடவரல் வள்ளியொடு அவர் மகிழ்ந்து அமர்ந்திருப்பது, உலகத்தார் தக்க வாழ்க்கைத் துணையுடன் இல்லற இன்பம் பெற்று அறவாழ்வு நடத்தவேண்டும் என்பதற்காகத்தான்.

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

‘காமநுகர்ச்சி இல்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந் தான் என்பது, உலகில் இல்லற வாழ்க்கை நடத்துதற்கு என்று உணர்க’ என்பார் நச்சினார்க்கினியர். வள்ளி நாயகி குறவாணர் குடியிலே பிறந்து வளர்ந்தவளாகத் தன்னை எண்ணிக்கொண்டிருந்தாள். அதாவது வள்ளி என்னும் ஆன்மாவானது ஐம்புல வேடரிடையே தன்னை மறந்து, தன் நாயகனையும் மறந்து வாழ்ந்தது.

குறவர் கூட்டத்தில் கிழவனாய்த்தோன்றி, குருவியோட்டித் திரிந்த தவமானைக் குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டி ஆண்டுகொண்டான் அருள்முருகன். எம்பெருமானோடு ஒன்றிய பிறகு, தன் முன்னை நிலையை எண்ணி வள்ளிநாயகி புன்முறுவல் பூக்க, அது கண்டு இறைவனும் புன்முறுவலை விரும்பினான் என்னும் பொருள்படும்படி நக்கீரரின் பாடல் வரிகள் அமைந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

‘ஏறுமயிலேறி விளையாடும் முகம்’ என்று தொடங்கும் திருப்புகழ்ப் பாடலிலும் ஆறாவது முகத்தின் செயலை, ‘வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே’ என்று பாடும் போது என்ன பொருத்தம் பாருங்கள்!
மென்மையும் இளமையும் உடைய மடமகள் வள்ளிப் பிராட்டி. அவள் இடையில் பெருமானுடைய திருக்கரம் வளைந்து தழுவி நிற்கிறது. காமவல்லி எனும் கொடி கற்பக மரத்தைச் சுற்றிச் சூழ்ந்து தடவிப் படரும். அதனைப்போன்று இங்கே கொடி போன்ற வள்ளியின் இடையை கற்பகம் போன்ற முருகனின் கரம் தழுவுகிறது.

ஞானமலை ஞானபண்டிதனின் திருக்கோயில் கருவறையில், ஞானவள்ளி, ஞானக்குஞ்சரி சமேத ஞானபண்டித சுவாமி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். பின் இரு கரங்களில் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி, முன் இரு கரங்களில் வலக் கரத்தில் அபய முத்திரை திகழ, இடது கரத்தை இடுப்பில் வைத்துத் திகழும் பிரம்ம சாஸ்தா வடிவம். தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் பிரதிஷ்டை செய்த மூர்த்தங்களில் இதுவும் ஒன்று; 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மூலஸ்தானக் கோயிலின் தென்புறம் மிகப்பெரிய ஞான வேல் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

மலையின் மேற்புறத்தில் ஞானகிரீச்வரர் சந்நிதி உள்ளது. அருணகிரிநாதரைப் பரமகுருவாகக் கொண்டு வாழ்ந்த ஞானவெளிச் சித்தர் என்னும் பாலைச் சித்தர் தவமிருந்தது இந்த அருள் ஞான மலையில்தான். அவர் சமாதி கொண்டுள்ள இடத் தில், ஞானகிரீச்வரர் லிங்க வடிவில் அருள்கிறார்.

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

முருகப்பெருமான், வள்ளிமலையில் வள்ளியை மணந்து அவளுடன் தணிகைமலை நோக்கி வரும் வழியில் ஞானமலையில் தங்கி இளைப்பாறினார். அங்கே அவரது பாதம் படிந்த சுவடுகள் நமக்குப் பரவசத்தை ஏற்படுத்துகின்றன. நீல மயிலில் ஞாலம் வலம் வந்த அந்தக் கோல மயிலின் திருவடி களையும் இந்த மலையில் காண்பதே தனி இன்பம். இந்தப் புனிதமான இடத்தில் ‘திருவடிப் பழங் கோயில்’ என்ற பெயரில் அடியார்கள் அமைதியாக தியானம் செய்யவும், அங்க பிரதட்சணம் வரவும் நூதன மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

ஞானமலையில், பல்வேறு திருப்பணிகளைத் திட்டமிட்டு, கடந்த பதினெட்டு ஆன்டுகளாக செய்து வரும் ‘ஞானாச்ரமம் அறக்கட்டளை’ மலையடிவாரத்தில் ஞானாச்ரமம் திருமாளிகை யைக் கட்டியுள்ளது; வழிபட வரும் அடியார்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பரில் லட்சார்ச்சனை, அருணகிரி நாதருக்குக் காட்சிவிழா, திருப்புகழ்த் திருப்படி விழா முதலான வைபவங்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றன.

ஞானமலையில் மகா கும்பாபிஷேகம்!

தற்போது, குறமகள் தழுவிய குமரனின் திருக் கோயில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. விமான சுதைச் சிற்பங்கள் மற்றும் மண்டபங் களில் வர்ண (பெயிண்டிங்) வேலைகள் செய்ய வேண்டும். திருப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று ஞானசித்தி கணபதி, ஞான சரஸ்வதி, ஞான பண்டித சுவாமி, ஞானகிரீச்வரர் முதலான அனைத்து சந்நிதிகளுக்கும் வருகிற ஆனி மாதம் 17-ஆம் தேதி (1.7.2018 ஞாயிற்றுக்கிழமை), காலை 8:30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெற வுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை பூஜைகள், 29.6.18 வெள்ளிக்கிழமை அன்று மாலை முதற்காலம், 30.6.18 சனிக்கிழமை காலை இரண் டாம் காலம்; அன்று மாலை மூன்றாம் காலம் என்றபடி நடைபெறவுள்ளது.

இந்த அற்புத வைபவத்தில் நாமும் கலந்து கொண்டு முருகனின் அருளைப் பெற்று வருவோம். முன்னதாக, ஞான மலையில் இன்னும் பூர்த்தியாக வேண்டிய - மீதியுள்ள திருப்பணிகளுக்கும், கும்பாபிஷேகத்துக்கும் நம்மால்  இயன்ற அளவு பொருளுதவி செய்து, திருப்பணியிலும் பங்கேற்போம். ஞானமலை முருகனின் பேரருள் நம்மையும் நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.

திருப்பணியில் பங்கேற்க வங்கிக் கணக்கு விவரம்:


INDIAN OVERSEAS BANK, BESANT NAGAR,
CHENNAI- 600 090
A/C No: 025801000018042
IFSC: IOBA0000258
தொடர்புக்கு: 9003232722