Published:Updated:

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்!

சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்!
சிவ-சக்தி அருளை ஒருசேரப் பெற்றுத்தரும் கேதார கௌரி விரதம்...- வழிபடும் முறைகள்!

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முடிய கடைப்பிடிக்கப்படும்.

சிவபெருமானின் ஆசியைப் பெறவும், பார்வதி தேவியின் அருளைப் பெறவும் எத்தனையோ விரதங்களும், வழிபாட்டு முறைகளும் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கேதார கௌரி விரதம் ஆகும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்போர் சிவ - சக்தி அருளை ஒருசேரப் பெற்று சகல சௌபாக்கியங்களையும் பெறமுடியும். இதன் மூலம் சிவன் - பார்வதியைப் போன்று ஒருமித்த கருத்து உடையவர்களாக அளப்பரிய ஆனந்தத்துடன் வாழும் வரம் கிடைக்கும். ஆதர்ச தம்பதியாக ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழும் பேற்றை தரும் வல்லமை இந்த விரதத்துக்கு உண்டு. குடும்பத்தில் பிரச்னையுள்ளவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமையையும் சுபிட்சமான வாழ்க்கையையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கில பட்ச தசமி முதல் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி முடிய கடைப்பிடிக்கப்படும்.

இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் எனும் புனிதத் தலத்தில், அன்னை உமையவள் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் செய்து அவரது திருமேனியில் சரிபாதி பெற்றாள். அப்படி அம்பிகை மேற்கொண்ட விரதத்துக்கு `கேதாரீஸ்வரர் விரதம்’ என்று பெயர். அந்த விரதத்தின் பயனைப் பெற்ற கௌரி தேவியிடம், அவளைப் போலவே தாமும் கணவனை விட்டு நீங்காதிருந்து சுகமான இல்லறத்தையும், வளமான வாழ்க்கையையும் வரமாகப் பெற பெண்கள் வேண்டிக் கொண்டாடும் நோன்பே கேதார கௌரி விதமாகும். கேதார கௌரி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம், ஆயுள் பலம், குழந்தை வரம், சுகமான வாழ்வு, ஒளிமயமான எதிர்காலம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம்.

கேதார கௌரி விரதம் மேற்கொள்ளப்படுவதற்குச் சுவையான ஒரு புராணக் கதையும் கூறப்படுகிறது.

பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என்று அனைவரும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வலம் வந்து வணங்கிச் செல்வார்கள். ஆனால், பிருங்கி முனிவர்  சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் செல்வார். கோபம் கொண்ட பார்வதி தேவி, சிவபெருமானுக்கும், தனக்கும் இடைவெளி இருந்தால்தானே பிருங்கி சிவனை மட்டும் சுற்றிச் செல்வார் என்று நினைத்து, சிவபெருமானுக்கு நெருக்கமாக அமர்ந்தாள். ஆனால், பிருங்கி முனிவர் வண்டு உருவம் கொண்டு கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்தி சிவபெருமானைச் சுற்றி வந்து வழக்கம் போல வணங்கிச் சென்றுவிட்டார். 

இதனால், வருத்தமும், கவலையும் கொண்ட உமையவள், கௌதம மகரிஷியின் ஆசிரமத்துக்கு வந்துவிட்டார். பிரிக்க முடியாதபடி சிவபெருமானோடு ஐக்கியமாகிவிடவேண்டும் என்று எண்ணிய அம்பிகை, கௌதம முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். அவர் அளித்த ஆலோசனையின்படி உமையவள் 21 நாள்கள் சிவபெருமானை எண்ணி மேற்கொண்ட விரதமே கேதார கௌரி விரதம். 21- ம் நாள் முடிவில் ஐப்பசி மாத அமாவாசை தினத்தின்போது சக்தி தேவியை தனது உடலுடன் ஐக்கியமாக்கி அர்த்தநாரீஸ்வரராகத் திருவுருவம் கொண்டார் சிவபெருமான்.

உமையவள் மேற்கொண்ட விரதமாகையால் இந்தக் கேதார கௌரி விரதம் பெண்களுக்கான சிறப்பு விரதமானது. கேதார கௌரி விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்பது பற்றியும் அதன் மகிமைகள் பற்றியும் திருநள்ளாறு கோட்டீஸ்வர சிவாசார்யர் கூறியதாவது...

``சிவனுக்கு உரிய எட்டுவிதமான விரதங்களில் இந்தக் கேதார கௌரி விரதமும் ஒன்று. சிவனும் சக்தியும் இணைந்து சிவசக்தியாக இணைந்த `அர்த்தநாரீஸ்வர’ திருவடிவத்தைப் பெற்றுத் தந்ததால் பெண்கள் விரும்பிய அனைத்து வளங்களையும் இந்த விரதம் மூலம் பெறலாம். புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமியில் தொடங்கும் இந்த விரதமானது ஐப்பசி மாதம் அமாவாசை அன்று நிறைவடையும், மொத்தம் 21 நாள்கள். பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதம் சிவபெருமானை மகிழ்வித்து வேண்டிய வரத்தைப் பெற்றுத் தரும். முதன்முதலில் பார்வதிதேவியால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த விரதம், பிறகு பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் கடைப்பிடித்து சிவபெருமானின் அருள் பெற்றார்கள். 

கேதார கௌரி விரத நாள்களில் புனித நீர் சேர்ந்த மங்கலக் கலசத்தில் சிவபெருமானை ஆவாஹாணம் செய்து 21 நாள்களும் பூஜைகள் செய்ய  வேண்டும். விரதமிருக்கும் நாள்களில் நாளுக்கு ஒரு நோன்புக் கயிறு (இந்தக் கயிறு மஞ்சள் பூசிய கயிறாக இருக்கும்) என்று சிவபெருமானுக்குச் சாத்தி இறுதி நாளில் 21 கயிறுகளையும் ஆண்கள் வலது கரத்திலும், பெண்கள் இடது கரத்திலும் கட்டிக்கொண்டு வணங்க வேண்டும். சமீப காலங்களில் 21 நாள்கள் கொண்டாடாமல் கடைசி நாளில் ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுவதால் மொத்தமாக 21 அதிரசங்கள், 21 வெற்றிலை, 21 பாக்கு, 21 மஞ்சள், 21 மங்கலப் பொருள்கள் எனப் படைப்பது வழக்கமாக உள்ளது. விரத நாள் அன்று உணவு எடுத்துக்கொள்ளாமல் சிவனையும் அம்பிகையையும் துதித்து கேதார கௌரி விரதமிருப்பது சிறப்பானது. விரதம் முடித்தபிறகே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லா மங்கலங்களையும் அருளும் இந்த கேதார கௌரி விரதம் குடும்ப நலனை மேம்படுத்தும் ஒரு மங்களகரமான வழிபாடு. இதை எல்லாப் பெண்களும் அனுஷ்டித்து சிவசக்தி அருளைப் பெறுதல் விசேஷமானது.

இந்த கேதார கௌரி விரதத்தைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் மேற்கொண்டு சிவபெருமானின் அருளைப் பெறலாம். இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே ஒற்றுமை மேலோங்கும், இல்லறம் செழிக்கும். அனைத்து விதமான மங்கல காரியங்களும் நடக்கும். எல்லா விதமான செல்வ வளங்களும் வந்து சேரும். இந்த விரதத்தின் மூலம் சிவபெருமானின் அனுக்கிரகத்தை மட்டுமல்லாமல் உமையவளின் அனுக்கிரகத்தையும் சேர்த்துப் பெறலாம்!” என்று கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு