Published:Updated:

களைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்!

களைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்!
களைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் 6-வது நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு சஷ்டிவிழா கடந்த 8-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

தினமும் காலை சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு எழுந்தருளலும், பின்னர் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரத்துக்குப் பிறகு சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருக்கோயில் வளாகத்தில் தங்கி சுவாமி ஜெயந்திநாதரை தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் 6-ம் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடற்கரையில் நடைபெற உள்ளது.

சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண தூத்துக்குடி மட்டுமல்லாமல், நெல்லை, குமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

பாதுகாப்புப் பணிகளுக்காக தூத்துக்குடி மட்டுமல்லாமல் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 3,200 போலீஸார்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் மற்றும் திருட்டுச் செய்கைகளில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்களைக் கண்காணிக்கும் வகையில், நகரில் 10 இடங்களில் கண்காணிப்புக் கோபுரங்கள், 70 சிசிடிவி கேமராக்கள், எல்.இ.டி.-க்கள் ஆகியவை பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதியில் ரோந்து செல்லக்கூடிய இரண்டு ரோந்து வாகனங்கள் (ஏ.டி.வி) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருச்செந்தூருக்கு 185 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகச் சுற்றுவட்டார மக்கள் திருப்போரூரில் குவிந்துள்ளனர். கந்தசஷ்டியின் ஆறாம் நாளான இன்று முருகன் குதிரை வாகனத்தில் அமர்ந்து சூரசம்ஹாரம் செய்யும் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை மாலை 6 மணி முதல் 7.30 வரை முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாணம் நடைபெறும். சூரசம்ஹாரத்துக்காக திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய மூன்று தாலுகாவுக்கு இன்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. கந்தசஷ்டி தொடங்கியதிலிருந்து கோயிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மூலவரான கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் ராஜ அலங்காரத்தில் பக்கதர்களுக்கு காட்சியளித்து வருகிறார். உற்சவமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் தினம் ஒருவாகனத்தில் நான்குமாடவீதிகளிலும் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 5 மணியிலிருந்து ஆறுமணிக்குள்ளாக மகா சூரசம்ஹாரம் விழா தொடங்க உள்ளது. வெள்ளிக்குதிரை வாகனத்தில் கந்தபெருமான் ஆகாயத்தின் வழியே சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் திருப்போரூரில் குவிந்தள்ளதால் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ குமரகோட்டம் முருகன் கோயிலிலும் இன்று மாலை கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தைக் காணப் பக்தர்கள் திரளாகக் கோயிலுக்கு வந்து 108 முறை சுற்றி முருகனை வழிபட்டு வருகிறார்கள். பக்தர்களின் வரவால் கோயில் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் காவல்துறையினரால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.