Published:Updated:

சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி.... நினைவில் நிற்கும் அந்தக்கால கார்த்திகைத் திருநாள்! #KarthikaiDeepam

கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி.... நினைவில் நிற்கும் அந்தக்கால கார்த்திகைத் திருநாள்! #KarthikaiDeepam
சொக்கப்பனை எரித்து, சாம்பலை வயலில் தூவி.... நினைவில் நிற்கும் அந்தக்கால கார்த்திகைத் திருநாள்! #KarthikaiDeepam

`தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து புரவி பூட்டிய தேரில் போருக்குச் செல்கிறான். தலைவனின் பிரிவைத் தாங்காத முடியாத தலைவியோ துயரத்துடன் அழுகிறாள். அவளது துயரைப் பார்த்த தோழி, தலைவன் மீது கோபப்படாமல் அவனை இழுத்துச் செல்லும் புரவியின் மீது கோபம் கொள்கிறாள். `நீதானே தலைவன் அமர்ந்திருக்கும் தேரை இழுத்துச் செல்கிறாய். குருவிப் பறையானது சிறுவர்களிடம் அடிவாங்குவதைப் போன்று நீயும் செமத்தியாக அடிவாங்குவாயாக’ என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறாள். போருக்குச் சென்ற தலைவன் வெற்றியுடன் திரும்புகிறான். அவன் திரும்பும் நாள்தான் கார்த்திகை விளக்கீட்டுத் திருநாள். 

சங்க இலக்கியமான நற்றிணையானது அந்தக் காலத்தில் கார்த்திகை தீபத்தன்று விளக்கேற்றும் நிகழ்வை அற்புதமாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. தமிழர்களின் தொன்மையான பண்டிகைகளில் திருக்கார்த்திகை தீப விழாவும் ஒன்று. ஒளி வடிவில் இறைவனை வணங்கும் பெருவிழாவே கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா. சங்க இலக்கியங்களான நற்றிணை, பரிபாடல், புறநானூறு போன்றவற்றில் பல்வேறு இடங்களில் கார்த்திகைத் தீபத்தன்று மக்கள் விளக்கேற்றி வழிபட்ட காட்சிகள் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட பல்வேறு விழாக்கள் இன்று உருமாறிவிட்டன. அத்தகைய விழாக்களுள் ஒன்றுதான் `கார்த்திகைத் தீபத் திருவிழா' எனப்படும் கார்த்திகை விளக்கீடு விழா.

பத்து வருடங்களுக்கு முன் கொண்டாடப்பட்ட கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கும், இன்று கொண்டாடப்படும் கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கும் ஏகப்பட்ட வேற்றுமைகளைக் கண்டறியலாம். அன்று குப்பைக் குழி, நன்செய் மற்றும் புன்செய் நிலங்களின் எல்லைகள், கொட்டகை, கூரை மற்றும் வீடு முழுவதும் அகல் விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து வழிபடுவோம். கார்த்திகைத் தீபத் திருநாளன்று மாலை நேரத்தில் ஊர் முழுவதும் அவ்வளவு ரம்மியமாக இருக்கும். எந்தத் திசையை நோக்கினாலும் அகல் விளக்குகளில் எண்ணெய் ஊற்றித் திரிகளை வைத்து தீபம் ஏற்றிப் பிரகாசிப்பதைக் காணலாம். சுத்தமான விளக்கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.

ஆனால், இன்றோ அகல் விளக்குகளுக்குப் பதில் மெழுகுவத்திகளும், மின் விளக்குகளும் ஏற்றப்படுகின்றன. கிராமங்களில்கூட மாற்றம் ஏற்படத் தொடங்கிவிட்டது. கார்த்திகை தீபம் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பே `மாவளி' செய்து கார்த்திகைச் சுளுந்தைக் கொளுத்தி வானத்தில் பூத்திருக்கும் விண்மீன்களுக்கு இணையாகத் தீப்பொறியைப் பறக்கவிடுவோம். இன்று இந்தப் பழக்கம் அருகிவிட்டது. சில பகுதிகளில் கார்த்திகை மாவளி விற்கப்படும் நிலையிலும் அவற்றை வாங்கிச் சுற்றுவதற்கு ஆளில்லை. தற்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்குக் கார்த்திகைத் தீப மாவளி என்றாலே என்னவென்று தெரியாது.

கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்' மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன. பனைமரத்தின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. பனை ஓலைகள் கூரை வேய, ஓலையின் அடிக் காம்புகள் நார் எடுக்க, நுங்கு உணவாக, பனையின் பாளை பதநீர் தயாரிக்க, மரக்கட்டை அடுப்பு எரிக்க... என்று பனையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுவதால்தான் இதை `பூலோகக் கற்பக விருட்சம்’ என்று கூறுவார்கள். பல்வேறு தலங்களில் பனைமரம் தலமரமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தீபத் திருவிழா அன்று அதிகாலையில் திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படும். அதைத் தொடர்ந்து மாலையில் மலை மீது மகாதீபம் ஏற்றுவார்கள். வீடுகளில் அகல் விளக்குகளும், மாவிளக்கு தீபமும் ஏற்றி வழிபடுவார்கள். சிறுவர்கள் மாவளி சுளுந்து கொளுத்திச் சுற்றி விளையாடுவார்கள். கார்த்திகையன்று வேறொரு வழிபாடும் சிறப்பாகக் கிராமந்தோறும் நடக்கும். அதன் பெயர்தான் சொக்கப்பனை வைபவம். திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும், அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும். 

கிராமங்களில் சொக்கப்பனை எரிந்து முடிந்ததும், அந்தக் கரியை உடலில் பூசிக்கொள்வார்கள். சொக்கப்பனை சாம்பலை இறைவனின் அம்சமாகக் கருதி வீடுகளுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து திருநீறாகப் பூசிக்கொள்வார்கள். சொக்கப்பனை சாம்பலை வயல், காடுகளுக்கு எடுத்துச் சென்று தூவும் நடைமுறை இன்றளவும் கிராமங்களில் உண்டு. இதனால் விளைச்சல் பெருகும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை. 

கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று `பனையோலைக் கொழுக்கட்டை' பிரசாதமும் சிறப்பானது. அதிலும் தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டை மிகவும் பிரசித்தி பெற்றது. பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்!