Published:Updated:

மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்ட மரியாளுக்கு அமலோற்பவப் பெருவிழா! #TheVirginMary

மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்ட மரியாளுக்கு அமலோற்பவப் பெருவிழா! #TheVirginMary
மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்ட மரியாளுக்கு அமலோற்பவப் பெருவிழா! #TheVirginMary

ரியாவின் அமலோற்பவப் பெருவிழா அல்லது தேவ மாதா கருவுற்ற நாள் கத்தோலிக்கத் திருச் சபையினரால் ஆண்டுதோறும் டிசம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் தாயான மரியாள், அவரது தாயின் வயிற்றில் பாவமின்றி கருவானதைக் கொண்டாடும் விழாவே இது. `மரியா பிறப்பு நிலைப் பாவமின்றி பிறந்தார்' என்னும் கருத்தை மையப்படுத்தும் விழாவாகவும் அமைந்துள்ளது.

பொதுவான கிறிஸ்தவ நம்பிக்கையின்படி, ஆதாம் - ஏவாளால் தோன்றிய பாவம், மரபுவழியாகத் தொடர்ந்து உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறக்கிறது. இது ஜென்ம பாவம் அல்லது பிறப்பு நிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய பாவம் மனிதரைக் கடவுளின் அருள் நிலையிலிருந்து பிரித்து, உலகின் தீய நாட்டங்களுக்கு அடிமையாக்குகிறது. தந்தையாகிய கடவுள், உலக மீட்பரின் தாயாகுமாறு மரியாவைத் தேர்ந்தெடுத்தார். எனவேதான், மரியாவுக்கு மிகுதியான அருளைப் பொழிந்து, பாவ மாசற்ற நிலையில் தாயின் வயிற்றில் கருவாக உருவாகச் செய்தார். இதுவே, `மரியாவின் அமலோற்பவம்' என்று அழைக்கப்படுகிறது. மீட்பரின் தாயானதால், மீட்பின் பேறுபலன்கள் மரியாவுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டன. மரியாவின் அமலோற்பவ விழா பற்றியும், அதன் வரலாறு குறித்தும் விவரிக்கிறார் அருள்தந்தை மரிய அந்தோணி ராஜ்.

``அமலோற்பவம் என்பது மரியாள் பெற்ற பாக்கியம் என்று சொல்வதைவிட, தனது மகன் இயேசுவின் பொருட்டு கடவுள் மரியாளுக்குக் கொடுத்த பேறு என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வந்தது. 1854-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் `மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவிப்பு செய்தார். மேலும், தான் எழுதிய இனெப்பிலிஸ் டியூஸ் (Ineffabilis Deus) என்ற மடலில் ``மனிதக் குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்ம பாவ மாசுகள் எதுவும் அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார். 

திருத்தந்தையின் அந்த அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற 14 வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா `நாமே அமலோற்பவம்’ என்று அறிவித்தார். அன்றுமுதல் இன்றுவரை மரியா `அமலோற்பவி' என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் 8-ம் தேதி மரியாவின் அமலோற்பவப் பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. 

பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காகக் கோயில் கட்ட நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், ``நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோயில் கட்ட வேண்டாம்” (1 குறி 22 :8) என்று தெரிவித்தார்.  

தனக்குக் கோயில் கட்ட நினைப்பவரே தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கடவுள், தன்னுடைய மகன் இயேசுவைப் பெற்றெடுக்க இருக்கும் பெண் எவ்வளவு தூய்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்? ஆதலால்தான் தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவ மாசு அணுகாத மரியாவைத் தேர்ந்தெடுக்கிறார். அதற்காக அவர் மரியாவை ஜென்ம பாவத்திலிருந்து விடுவித்தார்; அவரை இறைவன் தங்கும் இல்லிடமாக மாற்றினார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாக விளங்கியதால்தான் வானதூதர் கபிரியேல் கூட, ``அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்முடனே” (லூக் 1: 28) என்று வாழ்த்தியிருக்கிறார்.

புனித அந்தோனியார் தன்னுடைய வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், இன்னல்களையும் சந்தித்து வந்தார். அப்படிப்பட்ட நேரங்களில் எல்லாம் அவர் மரியன்னையை நோக்கி இவ்வாறு மன்றாடுவார், `என் அரசியே... என் தாயே... என்மேல் கவனமாய் இரும்' என்று. இதனால் அந்தோனியார் இறப்பதற்கு ஒருசில நாள்களுக்கு முன்பாக மரியன்னை அவருக்குக் காட்சி தந்து, `உன் நேர்மைக்கும், என்மீது நீ கொண்டிருந்த அன்புக்கும் விண்ணகத்தில் உனக்கொரு இடம் காத்திருக்கிறது' என்று சொல்லி மறைந்தார். 

மரியாள் மீது ஆழமான பக்திகொண்டு வாழும்போது, இறைவன் தன் அன்னை வழியாக நமக்கு எல்லா ஆசியையும் தருவார் என்பதே இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே, மரியாள் அமலோற்பவி என்ற விழாவைக் கொண்டாடும் இந்த வேளையில் மரியாவைப் போன்று நாமும் தூயோராக, மாசற்றவராக வாழ்வோம். ஆகவே மரியாவின் அமலோற்பவத்தை நினைவுகூரும் வேளையில் கடவுள் மரியாவுக்கு அளித்த மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்வோம். மரியாள் தன்னுடைய மாசற்ற வாழ்வால் பாவத்தை வெற்றிகொண்டாள். நாமும் அவளைப் போன்றே மாசற்ற வாழ்வு வாழ்ந்து இறைவனின் கருணையைப் பெறுவோம்.