Published:Updated:

வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!
வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!

திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

`வைகுண்ட வாசனுக்கு வருடம் முழுவதுமே கொண்டாட்டம்' என்பார்கள். அதிலும் சிறப்பாக மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசல் திறப்பும் வைணவர்களுக்குக் கதி மோட்சம் அளிக்கும் உன்னதமான விழாவாகும். தமிழகம் முழுவதுமுள்ள வைணவக் கோயில்கள் என்றில்லாமல் ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

பகவான் ஶ்ரீமன் நாராயணனின் 108 திவ்ய தேசங்களில் திருப்பாற்கடல், ஶ்ரீவைகுண்டம் ஆகிய திவ்ய தேசங்களை நாம் இந்த நிலவுலகில் தரிசிக்க முடியாது. ஒரு மனிதனின் புண்ணியப் பலனாக பகவானின் அனுகிரகம் பெற்றால் மட்டுமே அந்த இரண்டு திவ்ய தேசங்களை நாம் தரிசிக்க முடியும். ஆனால், திருவரங்கம் திருத்தலத்தில் அருளும் ரங்கநாத பெருமாளை தரிசிப்பதன் மூலம் அந்த இரண்டு திவ்ய தேசங்களை தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

ஆழ்வார்கள் அருளிச் செய்ததும், வேதங்களுக்கு இணையாகப் போற்றப்படுவதுமாகிய நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களுக்கு வேதங்களுக்கு நிகரான சிறப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, திருவரங்கத்தில் பகவத் ராமாநுஜரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு வைபவம்தான் 'பகல் பத்து ராப்பத்து' உற்சவம். 

மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியையொட்டி, வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக பத்து நாள்களும், பிறகு பத்து நாள்களும் பகல் பத்து, ராப்பத்து வைபவம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும். `திருநெடுந்தாண்டகம்' என்னும் நிகழ்ச்சியுடன் பகல் பத்து ராப் பத்து உற்சவம் தொடங்குகியது.

`மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது. இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி'  விரதமென மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள்.

இதையொட்டி நாளை 18-ம் தேதி செவ்வாய்க்கிழமை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5 மணிக்கு  நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்  

மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்த அசுரன் முரணை மகாவிஷ்ணு வீழ்த்தினார். போரில் தோற்ற முரண், 'நான் எங்குதான் போய் இனி வசிப்பது?' என்று கேட்கவே, 'இந்த நாளில் நீ அரிசியில் போய் தங்கிக்கொள்' என்று கூறுகிறார். 

மார்கழி மாதம் சுக்லபட்சம் ஏகாதசி நாளில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் இந்த நாளையே 'வைகுண்ட  ஏகாதசி'யாக அனுஷ்டிக்கிறோம்.

ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதாகும்

இந்த  நாளில் விரதம் இருந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பதாக வாக்குறுதியை பெருமான் மக்களுக்கு அளிக்கின்றார்.  ஏகாதசி விரதத்தைத் தொடர்ந்து அனுஷ்டிப்பவர்களின் சந்ததிக்கு, இம்மையிலும் மறுமையிலும் மனமகிழ்ச்சி, சுகம், ஆரோக்கியம், செல்வம், புகழ் ஆகியவற்றை வாரி வழங்குகிறார் என்பது ஐதீகம்.

வைகுண்ட ஏகாதசி விரதம் மிக நல்ல பலன்களைத் தரும். காலையில் மகா விஷ்ணுவை வழிபட்டு உண்ணாமல் உறங்காமல் விழித்திருந்து ஆழ்வார் பாசுரங்களைப் பாடியும் கேட்டும் பகவான் சிந்தனையிலேயே இருந்து மறுநாளான துவாதசி நாளில் காலைக் கடன்களை முடித்துவிட்டு அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து, அதிதிகளுக்கு அளித்து உண்ண வேண்டும்.  

 இந்த நாளில் வைகுண்ட வாசனை வழிபட்டு மனதை ஒரு நிலைப்படுத்தி விரதம் இருந்தால், கேட்பவர்களுக்கு கேட்ட வரத்தை வழங்கிடுவார். 

நாளும் பெரிய பெருமாள் அரங்கர் நகைமுகமும்

தோளும் தொடர்ந்து என்னை ஆளும் விழியும் துழாய் மணக்கும் 

தாளும் கரமும் கரத்தில் சங்கு ஆழியும் தண்டும் வில்லும்

வாளும் துணை  வருமே தமியேனை வளைந்துகொண்டே.

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் பெருமாள் அலங்கார உடையணிந்து, பரமபத வாசல் வழியாக, ஊர்வலமாக பவனி வருகிறார். இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசிக்கின்றனர்.  ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தை அடைகிறார். வைணவ ஆலயங்களில்  நடத்தப்படும் அனைத்து திருவிழாக்களிலும் உன்னதமான விழாவாகும்.

நாள் முழுவதும் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் ஆச்சார்யர்களால் இசைக்கப்படுகின்றது. பெருமாள் மகிழ்ந்திருக்கும்  இந்தத் தருணத்தில் பக்தர்கள் வேண்டும் வரங்களை அருளுகிறார் என்பது ஐதீகம்.

அடுத்த கட்டுரைக்கு