Published:Updated:

பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!
பிரீமியம் ஸ்டோரி
பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

அரவிந்த் சுப்ரமணியம்

பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

அரவிந்த் சுப்ரமணியம்

Published:Updated:
பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!
பிரீமியம் ஸ்டோரி
பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

ன்னை மீனாட்சி அருளாட்சி புரியும் பாண்டிய தேசத்தில், ஐயன் மீது மாறாத பக்தியுடைய விஜயன் என்ற அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைத் தர்மதீரன் என்றும் அழைப்பார்கள். சகல வளங்களுடன் இல்லறத்தை நல்லறமாக நடத்திவந்த விஜயனுக்கு, பிள்ளை பாக்கியம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது.

‘புத்’ என்ற நரகத்தில் ஒருவன் புகாமல் காப்பவனே புத்ரன் என்பதை அறிந்த விஜயன், பிள்ளை வரம் வேண்டி பற்பல தான தர்மங்களும், தீர்த்த யாத்திரைகளும், வழிபாடு யாகங்கள் ஆகியவற்றைச் செய்து வந்தார்.

அவரது மனக்குறையை நீக்கும்விதம் துறவி ஒருவர் விஜயனின் இல்லத்துக்கு வந்தார். அவரைப் போற்றிப் பணிந்த விஜயனுக்கு நல்வழி காட்டினார் அந்தத் துறவி.

பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

ஓவியம்: ப்ரேம் டாவின்ஸி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“மறையோனே! அருள்நிதியாம் ஐயனின் தாரக மந்திரத்தை நான் உனக்கு உபதேசிக்கிறேன். அதனை எப்போதும் ஜபித்துக்கொண்டிரு. அத்துடன், மேற்கு நோக்கிச் சென்று தென்னகத் தின் பாகீரதியாம் பம்பையாற்றை அடைந்து, அந்தப் புண்ணிய நதியில் நீராடி, மேலும் தொடர்ந்து பயணித்தால், ஐயனிடம் ஐக்கியம் பெற்ற சபரியெனும் அருள்நிறை மூதாட்டியை தரிசிப்பாய். அவள் உனக்கு வழிகாட்டுவாள்” என்று கூறி, விஜயனுக்கு வேதப்பொருளின் மூல மந்திரத்தை உபதேசித்துச் சென்றார்.

விச்வரூபம் கண்ட விஜயன்

அவர் கூறியபடியே செயல்பட்ட விஜயன் பம்பையை அடைந்தார்.  நதியில் நீராடி புண்ணியம் பெற்றவர், அடுத்து சபரி தவம்புரியும் இடத்தை அடைந்தார். சத்தியப்பொருளில் லயித்திருந்த சபரி, வேதியனுக்கு வழிகாட்டினாள். அங்கிருந்து வடக்கு நோக்கி சற்று தூரம் தாண்டி, ஐயனை பூஜை செய்வதற்காக வானவர்கள் உருவாக்கிய தேவகங்கை எனும் அருவி அமைந்துள்ள இடத்துக்குச் செல்லும்படி பணித்தாள். மேலும்,  வானதியின் (அருவி நீரின்) வேகத்தை விஜயனால் தாங்க இயலாது என்பதால், அவனிடம் கும்பம் ஒன்றையும் கொடுத்து அனுப்பினாள் சபரி.

குறிப்பிட்ட இடத்தை அடைந்த விஜயன், கையிலிருந்த கும்பத்தை அருவி நீரை நோக்கி நீட்ட, நீரின் வேகம் தாளாது கும்பம் விழுந்து சிதறியது. அது விழுந்த இடம் குழிவுற்றது; குளமாக உருவானது. உலக மக்களைப் புனிதராக்கும்விதம் அதிலிருந்து ஒரு கால்வாயும் உருவாகி ஓடத் தொடங்கியது. விஜயன், முனிவர் தனக்கு உபதேசித்த மந்திரத்தை ஜபித்தபடி அந்த நீரில் மூழ்கி எழுந்தார்.

அவர் இதுவரை புரிந்த வினைகள் அனைத்தும் பறவைகளின் உருக்கொண்டு அவன் உடலிலிருந்து வெளிவந்தன. வானில் பறக்க முயன்ற அவை, சிறிது தூரம் பறந்த பின்னர் தரையில் வீழ்ந்து மாண்டன. விஜயனின் பாவங்கள் அனைத்தும் அடியோடு தொலைந்தன. அந்ந நிலையில் ஐயனின் பாதம் மட்டுமே அவர் நினைவில் இருந்தது. மனதார ஐயனைத் துதித்து சரணடைந்தார்.

அவரைக் கண்டு மகிழ்ந்த ஐயன், அழகே உருவாய் அவர் முன் தோன்றினார். சின்னஞ்சிறு குழந்தையாக வில்லும் சரமும் ஏந்தி, சிலம்பும் சலங்கையும் குலுங்க, அபய ஹஸ்தத்துடன் புன்னகை புரியும் செவ்வாய் திறந்து விஜயனை அழைத்தார் ஐயன். காணக்கிடைக்காத கடவுளைக் கண்ணாரக் கண்ட விஜயன், வேரற்ற மரமாய் வேதப்பொருளின் மலரடிகளின் வீழ்ந்தார்.

``வேண்டும் வரம் யாது’’ என பரம்பொருள் கேட்டார். குழந்தைப்பேற்றினைக் கேட்க வந்த விஜயன், குழந்தைவடிவில் வந்த கடவுளைக் கண்டதும் அவர் மேல் மாறாதப் பற்றுகொண்டு அவரையே அடையும் பேற்றை வேண்டினார். கருணைக்கடலான சாஸ்தா, அவருக்கு வரமளித்தார்.

“விஜயா! நீ விரும்பிய வரத்தினை உனது அடுத்த பிறவியில் அருள்கிறேன். இப்பிறவியில், நற்புத்திரனைப் பெற்று உன் வம்சத்தைத் தழைத்தோங்கச் செய்வாய். உன்னால் உருவான இந்தக் குளம், ‘கும்ப தளம்’ எனும் பெயருடன் தீர்த்தமாக, உலகோரின் துயர் தீர்க்கும் மருந்தாகட்டும்” என்று உரைத்தார்.

வரத்தால் மகிழ்ந்த வேதியர் விஜயன், தாரகப் பொருளின் தத்துவ வடிவைக் காட்டியருளும்படி வேண்டினார். மூவருக்கும் தேவருக்கும் காணக்கிடைக்காத விச்வரூப தரிசனக் கோலம், விஜயனுக்குக் கிடைத்தது. ஐயன் வழங்கிய ஞானக்கண்ணால் அவரது அருள் வடிவைக் கண்டார் விஜயன்.

கோடி சூர்ய பிரகாசம் கொண்ட ஐயனின் தோற்றம் விச்வமெலாம் கடந்த ஜோதியாக, நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போக, திவ்ய பார்வை பெற்றிருந்தும் அதனைக் காண முடியாமல், கண்கள் கூசி பார்வையை இழந்தது போலாகி மயக்கமுறும் நிலையை அடைந்தார் விஜயன். ‘ஐயனின்  விச்வரூபத்தைக் காணும் சக்தி எவருக்குமில்லை’ என்பதை உணர்ந்த விஜயன், அந்த இறைவனையே சரணடைந்தார். உடன் ஐயனும் தேஜோமண்டல ஸ்வரூபமான தனது தோற்றத்தை விடுத்து, விஜயனை அனுக்ரஹித்து மறைந்தார்.

ஆண்டவனின் அருளால் விரைவில் ஒரு மகனைப் பெற்ற விஜயன், அப்பிறவியின் இறுதி வரை சாஸ்தா வின் சரணக் கமலங்களை எண்ணி வாழ்ந்து, பின்னர் உடலை உகுத்து, மீண்டும் ஒரு பிறவியை அடைந்து, அப்பிறவியில் ஐயனின் அருளுக்குப் பாத்திரமானார்.

பொன்விழா காணும் ஐயனின் வைபவம்!

ஐயனுக்கு அன்னமிட்ட கம்பங்குடி வம்சம்

காலங்கள் ஓடின. ஆண்டவனின் பேரருளைப் பெற்ற விஜயனின் வம்சத்தில் வந்த அந்தணர் ஒருவர், தென்தமிழகத்தில், (கல்லிடைக்குறிச்சி என்று இன்று வழங்கப்படும்) கரந்தையர் பாளையம் எனும் ஊரில் வசித்து வந்தார். அவரும் அவரின் மனைவியும் சதாசர்வ காலமும் சாஸ்தாவின் ஸ்மரணமும், அவரின் திருநாமமுமே உயிர் மூச்சாக வாழ்ந்து வந்தார்கள். தெய்வத்தை நேசிப்பவர்களை நேசித்தால், தெய்வம் நம்மை நேசிக்குமன்றோ?

தன் பக்தனை ஆட்கொள்ள விரும்பிய ஐயன், சிறு பாலகனாய் வடிவமெடுத்து அந்தணரின் குடிலை வந்தடைந்தார். அந்தப் பாலகனை அருகில் அழைத்து அணைத்துக்கொண்ட அந்தணர், அவனைக் குறித்த விவரங்களைக் கேட்டார்.

“ஐயா! எனது தேசம் வெகு தூரத்தில் இருக்கிறது. நான் காடுமேடெல் லாம் சுற்றி மிகக் கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். எனக்கு மிகவும் பசிக்கிறது. எனக்கு உண்ண உணவும், இன்றிரவுப் பொழுதினைக் கழிக்க இடமும் தரவேண்டும்” என்றார் பாலகன்.

பாலகனின் திருமுகப்பொலிவும் வாக்கின் இனிமையும், ‘இவன் பரமனோ?’ என்று ஐயமுறச் செய்தன அந்தணரை. ‘அதிதி தேவோ பவ’ எனும் வேத வாக்கை உயிரினும் மேலாகக் கருதும் அந்தணருக்கு,  அன்று தேவாதிதேவனே அதிதியாக வந்திருப்பதாக உள்ளுணர்வு சொன்னது. ஆகவே, தன் மனைவியை அழைத்து, பாலகனுக்கு உணவிடச் சொன்னார். அந்த மாதரசியும் பாலகனை உள்ளே அழைத்துச் சென்று,  தாங்கள் அருந்தும் எளிய உணவை அன்புடன் ஊட்டினாள். அவர்கள் இல்லத்திலேயே அந்த பாலகன் தங்கவும் இடம் கொடுத்தார்கள்.

அவர்களது எளிமையிலும், நேர்மையிலும், தொண்டிலும் அடிமை யாகி அகமகிழ்ந்த ஆண்டவன், தன் சுயரூபத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தார். உறங்கிக்கொண்டிருந்த தம்பதி திடுக்கிட்டு விழிக்க, அவர்கள் எதிரே தேஜோமண்டல மத்யகனாக, சத்யஸ்வரூபனும், சர்வேசனும், பக்தர்களுக்கு அனுகூலனுமான பரம்பொருள் மகாசாஸ்தா நின்றுகொண்டிருந்தார்.

சிறுவனாக வந்தது சிவபுத்ரனே என்றுணர்ந்த அந்தத் தம்பதி, செய்வதறியாது பக்தி மேலீட்டால் கதறி அழுதார்கள்.

“எப்போதும் உன் கருணைவேண்டும். உனக்குத் தொண்டு புரிவதாகவே எங்கள் குலம் தழைக்க வேண்டும். அதற்கு அருள்புரிவாய்’’ என்று ஐயனின் திருவடிகளில் வீழ்ந்து பிரார்த்தனை செய்தார்கள்.

அவர்களது தன்னலமற்ற பக்தியில் மகிழ்ந்த ஆண்டவனும்,  “பக்தர்களே! உங்கள் தெய்விகத் தொண்டு என்றென்றும் தொடரட்டும். அன்னதான பிரபுவான எனக்கே உணவளித்த உங்களுக்கு நான் கடமைப்பட்டவன். நீங்களும் உங்கள் சந்ததியரும் எனது அருளுக்குப் பாத்திரமானீர்கள். என்னை நீங்கள் நினைக்கும்போதெல்லாம் உங்கள் கவலைகளைப் போக்கி அருள்வேன். உங்களுக்கு நான் அடிமைசாஸனம் தந்து, `கம்பங்குடி’ என்ற ஸ்தானமும் தருகிறேன்.” என்று ஆசி கூறி மறைந்தார்.

அன்யோன்யமேகேன ஸாம்பாவ்ய கம்பங்குடி ஸ்தானம்
ஆரோப்யா தர்மசாக்தப்ரபாவ 


- என்று `சாஸ்தா தண்டக’த்தின் ஸ்லோகம் இந்தச் சம்பவத்தை விசேஷமாகப் புகழ்கிறது!

கருணாம்புதே உமது கமல பொற்பாதமே கதியென்று
காத்திருக்கும் கம்பங்குடிக்கு அடிமை - உன் பொன்
அடிக்கடிமை கண்ட லிகிதப்படிக்கு உன்
சரணாரவிந்தமே ஸர்வதா ஸ்துதி செய்து வம்ச வழியாய்
நடந்தும் சற்றாகிலும் மனமிரங்காததேனென்று
சாற்றியெம்மை ஆட்கொள்ளுவீர் ஐயா
- என்று கம்பங்குடி வம்சத்து மணிதாஸர் போற்றுகிறார்.

ஆண்டவனின் வாக்கு பொய்க்குமோ? கம்பங்குடி வம்சத்தவர் இன்றும் ஆண்டவனுக்குற்ற அடிமைகளாக அவன் அளித்த உயரிய ஸ்தானத் துடன் வாழ்கிறார்கள். ஐயனின் வழிபாட்டு நெறிமுறைகளும் சாஸ்தா ப்ரீதி எனும் உத்தமமான வழிபாடும் கம்பங்குடி வம்சத்தரால் கிடைத்த சிறப்புகளே.

சாஸ்தாவின் மேல் அளவற்ற பாடல்களை மழையென பொழிந்து நமக்குப் பெரும் பொக்கிஷத்தை அளித்த மணிதாஸரும் கம்பங்குடி வம்சத்தை சேர்ந்தவர்தான். நம் நூற்றாண்டில் ஐயனின் தாலாட்டாக விளங்கும் `ஹரிவராஸனம்’ பாடலை இயற்றிய குளத்து ஐயரும், இன்னும் பல குருமார்களும் அந்த வம்சத்தில் உதித்து ஐயன் ஐயப்பனின் அருள் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்தா ப்ரீதி மஹோத்ஸவம்

கல்லிடைக்குறிச்சி, கொச்சி, கோவை சாஸ்தா ப்ரீதி வைபவங்களில் இந்த கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர்களே சாஸ்தாவின் பிரதிநிதியாக ஸ்தானத்தை ஏற்று இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் கம்பங்குடி (பெங்களூரு) ஹரிஹரய்யர், எளிய முறையில் தொடங்கிய சாஸ்தா ப்ரீதி மஹோத்ஸவம் இந்த ஆண்டில் பொன்விழா காண்கிறது. பெங்களூருவில் சர்தார் படேல் பவனில் (எண்:16, திம்மையா சாலை. பாய்விஹார் ஹோட்டல் அருகில்), வரும் நவம்பர் 10-ம் தேதி சனிக்கிழமை முதல், 18-ம் தேதி ஞாயிறு வரையிலும் மிக அற்புதமாக நடைபெறவுள்ளது இந்த வைபவம்.

ஒவ்வொருநாளும் மகா கணபதி ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், நவகிரக சாந்தி ஹோமம், மகா ருத்ரம், சண்டி ஹோமம், பிரபலங்களின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் - உபந்யாசங்கள், பக்தி இன்னிசை பஜன் வைபவங்கள் என களைகட்டப்போகும் சாஸ்தா ப்ரீதி மஹோத்ஸவ வைபவத்தில், பக்த அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஐயன் ஐயப்பனின் அருளைப் பெற்று வருவோம்.

பக்தர்கள் கவனத்துக்கு

மகோத்ஸவ காலம்: 10.11.18 முதல் 18.11.18 வரை
இடம்: சர்தார் படேல் பவன்,
16, திம்மையா சாலை,
(கண்டோன்ட்மென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகில்)
வசந்த்நகர், பெங்களூரு 560 052
மேலும் விவரங்களுக்கு: H.சுப்ரமணியன் (83109 61070)