Published:Updated:

விடிவெள்ளியாய் தோன்றிய கண்ணனுக்கே பக்தி செய்வோம் தோழி! திருப்பாவை - 13

'கண்ணனை நான் உணவாக உண்பேன்' என்று கம்சனுக்கு உறுதியளித்துவிட்டு, கொக்கின் வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்ற கண்ணனின் லீலையையும், பொல்லாத அரக்கனாம் ராவணனின் பத்து தலைகளைக் கிள்ளி எறிந்த ராமனின் வீரத்தையும் போற்றிப் பாடியபடி நாங்கள் நீராட வந்திருக்கிறோம்...

விடிவெள்ளியாய் தோன்றிய கண்ணனுக்கே பக்தி செய்வோம் தோழி! திருப்பாவை - 13
விடிவெள்ளியாய் தோன்றிய கண்ணனுக்கே பக்தி செய்வோம் தோழி! திருப்பாவை - 13

"புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.."

`பறவை வடிவில் தன்னைக் கொல்ல வந்த பகாசுரனின் வாயைக் கிழித்துக் கொன்ற கண்ணனை, ராவணனின் பத்து தலைகளையும் தன் கணைகளால் கிள்ளியெறிந்து அவனை வதம் செய்த ராமனைப் போற்றிப் பாடி பாவை நோன்பு நோற்க அனைத்துப் பெண்களும் வந்து சேர்ந்துவிட்டனர். இதோ, வெள்ளி எழுந்து வியாழமும் உறங்கிவிட்டது. விடியலை வரவேற்கும் வண்ணம் பறவையினங்களும் குரலெழுப்பி ஆரவாரிக்கின்றன. ஆனால், அழகிய தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே! உள்ளமும் உடலும் குளிர, எங்களுடன் சேர்ந்து நீராட வராமல், படுக்கையில் படுத்திருக்கலாமோ தோழி?' என்று கேட்டு மற்றொரு தோழியைத் துயிலெழுப்புகிறாள் கோதை.

தன்னைக் கொல்லப் பிறந்த கண்ணன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான் என்பதை அறிந்த கம்சன், கண்ணனைக் கொல்வதற்காக பூதகி, சகடாசுரன் மற்றும் திருணாவர்த்தன் ஆகியோருக்கு அடுத்தபடியாக பகாசுரனை அனுப்புகிறான். 'கண்ணனை நான் உணவாக உண்பேன்' என்று கம்சனுக்கு உறுதியளித்துவிட்டு, கொக்கின் வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து கொன்ற கண்ணனின் லீலையையும், பொல்லாத அரக்கனாம் ராவணனின் பத்து தலைகளைக் கிள்ளி எறிந்த ராமனின் வீரத்தையும் போற்றிப் பாடியபடி நாங்கள் நீராட வந்திருக்கிறோம் என்று சொல்லும் ஆண்டாள், அடுத்ததாக, `வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று' என்று பாடுகிறாள். இந்த வரியின்மூலம் கோதைக்கு அறிவியல் மற்றும் வானியலில் இருந்த ஆழ்ந்த தேர்ச்சி நமக்குத் தெரிய வருகிறது.
இங்கேயும் ஒரு சொல்நயம் இருப்பதை நாம் ரசித்து அனுபவிக்கலாம். வியாழன் உறங்கியதும் வெள்ளி வருவதாகச் சொல்லாமல், வெள்ளி வந்த பிறகு வியாழன் உறங்கச் செல்வதாகக் கூறுகிறாள். வெளிச்சம் வந்தால்தான் இருள் மறையுமே தவிர, இருள் மறைவதால் வெளிச்சம் வரும் என்பது சரியல்லதானே?!

இங்கே ஆண்டாள் குறிப்பிடும் வியாழம் என்பது நவகிரகங்களில் குருவையும், வெள்ளி என்பது சுக்கிரனையும் குறிப்பதாகும். 
ஜூபிடர் என்னும் வியாழன் இரவு முழுவதும் வானத்தில் பிரகாசித்துக்கொண்டிருக்கும். விடிவதற்குச் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக, வானின் கீழ்த் திசையில் வெள்ளி என்னும் சுக்கிரன் தோன்றும்போது, ஜூபிடர் மேற்றிசையில் மெள்ள மெள்ள மங்கத் தோன்றும்.

கீழ்த் திசையில் வெள்ளி தோன்றுவதையே நம் முன்னோர் விடிவெள்ளி என்று குறிப்பிட்டனர். 'வெள்ளி முளைத்துவிட்டது, பொழுது விடியப்போகிறது' என்று இன்றைக்கும் கிராமப்புறங்களில் பெரியவர்கள் பேசுவதை நாம் கேட்கலாம். 

மிகவும் பிரகாசத்துடன் தோன்றும் வெள்ளி, `சூரியன் வரப் போகிறான்..!' என்று சொல்லாமல் சொல்வது போல் கீழ்வானில் பளிச்சென மின்னிக்கொண்டிருக்கும். 

வெள்ளி என்பது ஒரு கிரகம்தானே தவிர நட்சத்திரமல்ல. இது பூமியின் சுற்றுப் பாதைக்குள் இருப்பதாலும், சூரியனை ஒட்டியே சுற்றி வருவதாலும் சூரியன் உதிப்பதற்கு முன்பும், சூரியன் மறைந்த பிறகும் வானில் பளிச்சென்று தெரியும். விடிவதற்கு முன்பு தோன்றும் வெள்ளியை விடிவெள்ளி என்றும், சூரியன் அஸ்தமித்த பிறகு தோன்றும் வெள்ளியை அந்திவெள்ளி என்றும் அழைப்பார்கள். 

வெள்ளி எழுவதும் வியாழம் உறங்குவதும் மார்கழி மாதத்தில் மட்டுமே துல்லியமாக நிகழும் நிகழ்வாகும். இதை நன்கு உணர்ந்துகொண்ட கோதை, தன் திருப்பாவையில் இந்தப் பாடல் மூலம் நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறாள். 

அறிவியல் ரீதியாக வெள்ளி என்னும் சுக்கிரனும் வியாழன் என்னும் குருவும் எதிரும் புதிருமாக இருப்பதைப் போலவே, புராண ரீதியாகப் பார்த்தாலும் வியாழன் என்னும் பிரகஸ்பதி தேவர்களுக்கு குருவாகவும், சுக்கிரன் அசுரர்களுக்கு குருவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றனர். பிரகஸ்பதி ஆங்கீரஸ முனிவரின் மகன். நான்கு வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றறிந்தவர். மேலும், எண்ணற்ற யாகங்களைச் செய்து, அதன் பலனாக தேவர்களுக்கு குருவாகும் பேறு பெற்றவர்.

வெள்ளி என்னும் சுக்கிரன் பிருகு முனிவரின் மகன். சுக்கிரன் என்றாலே பிரகாசம் என்று பொருள். இவர் அசுரர்களின் குருவாக இருந்து வழிநடத்துகிறார். இவர்கள் இருவருமே, `ராஜ கிரகங்கள்' என்று போற்றப்படுகின்றனர்.

கருக்கலுக்குப் பிறகு தோன்றும் விடிவெள்ளியின் காரணமாகப் பளிச்செனத் துலங்கும் வானைப் போல், நம்முடைய வாழ்க்கையில் எதிர்ப்படும் துன்பங்கள் மற்றும் சோதனைகளில் இருந்து விடிவு என்கிற வெளிச்சத்தைத் தந்தருளும் பகவான் ஶ்ரீகிருஷ்ணனின் புகழைப் போற்றிப் பாட வாருங்கள் என்று தோழியரை அழைக்கிறாள் கோதை!