Published:Updated:

நலமும் வளமும் அருளும் நாராயணனை தரிசிக்க எழுந்து வா தோழி! திருப்பாவை - 15

நலமும் வளமும் அருளும் நாராயணனை தரிசிக்க எழுந்து வா தோழி! திருப்பாவை - 15
நலமும் வளமும் அருளும் நாராயணனை தரிசிக்க எழுந்து வா தோழி! திருப்பாவை - 15

அதிகாலை பாவை நோன்புக்காகத் தங்கள் தோழியைத் துயிலெழுப்ப வந்த பெண்களுக்கும், வீட்டுக்குள் இருந்த தோழி எழ மறுத்து தன்னை அழைப்பவர்களுக்கு பதில் சொல்வதுமான உரையாடலாக அமைந்துள்ளது

"எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ..?
சில்லென்றழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லை யுன் கட்டுரைகள் பண்டேஉன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தானாயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானைக் கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.." - திருப்பாவை 15

திருப்பாவையில் இந்தப் பாடல், அதிகாலை பாவை நோன்புக்காகத் தங்கள் தோழியைத் துயிலெழுப்ப வந்த பெண்களுக்கும், வீட்டுக்குள் இருந்த தோழி எழ மறுத்து தன்னை அழைப்பவர்களுக்குப் பதில் சொல்வதுமான உரையாடலாக அமைந்துள்ளது.

துயிலெழுப்ப வந்த தோழிகளில் ஒரு பெண், ''இளங்கிளியைப் போன்ற அழகிய பெண்ணே, இன்னுமா நீ உறங்குகிறாய்?'' என்று கேட்க,

உள்ளே படுக்கையில் புரண்டபடி அந்தத் தோழி, ''என்னைக் கிண்டலான வார்த்தைகளைக் கூறி எழுப்பாதீர்கள். இதோ நான் புறப்பட்டுவிட்டேன்'' என்கிறாள்.

அப்படியும் வெளியிலிருந்த தோழிகள் விடவில்லை... ''நீதான் வாய்ப் பேச்சில் வல்லவள் ஆயிற்றே. தெரியாதா எங்களுக்கு?'' என்று வம்பிழுக்கிறார்கள்.

உள்ளே இருந்தவளும் இவர்களுக்குச் சளைத்தவளில்லை என்பதைப் போல், ''வாய் பேசுவதில் உங்களை யாரும் விஞ்ச முடியுமா? சரி விடுங்கள், நீங்கள் சொன்னபடி வாய்ப் பேச்சில் நானே வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்'' என்று கூறினாள்.

'இனியும் வம்பிழுத்தால்,  தங்கள் தோழி கோபம் கொண்டுவிடப் போகிறாளே...' என்று நினைத்தவர்களாக, ''சரி, விடு. நமக்குள் எதற்குக் கருத்து வேறுபாடு? விரைந்து வா. கோயிலுக்குச் செல்வோம்'' என்று அழைக்கிறார்கள்.

ஆனால், உள்ளிருக்கும் தோழியோ படுக்கையிலிருந்து எழுந்துகொள்ளாமல், மெள்ள அடுத்த கேள்வியைக் கேட்கிறாள். ''நம் தோழிகள் எல்லோரும் வந்துவிட்டார்களா?'' 

''எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிப் பார்த்துக்கொள்'' என்றனர். மேலும், ''வலிமையான யானையை ஒரே அடியில் சாய்த்தவனும், பல மாயச் செயல்கள் செய்பவனுமான நம் கண்ணனை நினைத்து நாம் எல்லோரும் பாடலாம். சீக்கிரம் எழுந்து வா'' என்று தோழியை எழுப்புகிறாள் கோதை.

'இன்னம் உறங்குதியோ..?' என்று தோழியை எவ்வளவு அழகாகக் கேட்கிறாள் பாருங்கள் இந்தக் கோதை..!

 'நீங்கள் எல்லோரும் நிம்மதியாக உறங்குங்கள். காலையில் நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறிய தோழியை அழைக்கும்போது, 'நாயக பெண்பிள்ளாய்' என்று அழைக்கும் கோதை, அதிகாலையில் மற்றவர்களைத் துயிலெழுப்ப வருவதாகச் சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் தோழியை, 'பேய்ப் பெண்ணே' என்று ஏசுகிறாள்.

சோம்பலுடன் நீண்டநேரம் தூங்கும்போது, 'பேய்ப் பெண்' என்று கோதை அழைக்கிறாளே, அப்படியானால், நீண்ட உறக்கம் என்பது மோசமானதா? 

நீண்ட தூக்கத்தின் பின்னணியில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதற்குப் புராணங்களில் பல நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன.

முதலில் முசுகுந்தச் சக்கரவர்த்தியைப் பார்ப்போம்.

இக்ஷ்வாகு வம்சத்தில் முசுகுந்தச் சக்கரவர்த்தி. சத்தியம், நேர்மை, பக்தி, வீரம் என்று உயரிய பண்புகள் கொண்டவன். 

தேவர்களுக்கும் அசுரர்களும் சுமார் ஐந்நூறு வருடங்களாகப் போர் நடந்துகொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தேவர்கள் களைத்துவிட்டனர். பின்னர் தேவேந்திரன் முசுகுந்தச் சக்கரவர்த்தியின் உதவியைக் கேட்டுப் பெற்றான். முசுகுந்தன் தேவர்களின் படைகளுக்குத் தலைமை வகித்த பிறகு, தேவர்களின் தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல் அசுரர்கள் பாதாளலோகம் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.

வெற்றிக்கு உதவிய முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு தேவேந்திரன் பல அரிய பரிசுகள் வழங்க முன்வந்தபோது, முசுகுந்தச் சக்கரவர்த்தி அவற்றை மறுத்து, தான் இடைவிடாமல் போரிட்ட காரணத்தினால் மிகவும் களைப்புற்று இருப்பதாகவும், தான் நிம்மதியாக உறங்குவதற்கு மட்டும் உதவி செய்தால் போதுமென்றும் கூறிவிட்டார். 

இந்திரன் பூலோகத்தில் விந்தியமலையில் ஒரு குகையை ஏற்படுத்தி, அதில் முசுகுந்தன் இடையூறு இல்லாமல் உறங்க ஏற்பாடு செய்தான். குகை வாசலில் அக்னி, வருணன் ஆகியோரைக் காவலும் வைத்தான். மேலும், முசுகுந்தச் சக்கரவர்த்தியின் உறக்கத்தைக் கலைப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர் எரிந்து சாம்பலாகி விடுவார் என்று ஒரு வரமும் கொடுத்துச் சென்றான்.

முசுகுந்தர் நிம்மதியாக உறங்கத் தொடங்கினார்.  

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த நிலையில் துவாபரயுகமும் கண்ணனின் அவதாரமும் நிகழ்ந்தது. அதே தருணத்தில், காலயவனன் என்ற அசுரன் பிரம்மதேவரிடம் தன்னுடன் மோதும் எவரையும் வெல்லும் வரத்தினைப் பெற்று, அந்தச் செருக்கில் தேவர்களைப் பலவாறாகத் துன்புறுத்தி அவர்களை வெற்றி கொண்டான்.

தேவர்களை வெற்றி கொண்ட மமதையில், ஶ்ரீகிருஷ்ணர் ஆட்சி செய்து வந்த துவாரகைக்கும் படையெடுத்து வந்தான். காலயவனனைக் கொல்லவோ வெல்லவோ முடியாது என்பதை உணர்ந்துகொண்ட கண்ணன், காலயவனன் துவாரகைக்கு வருவதற்கு முன்பாகவே அவனை விந்தியமலைக் காடுகளில் எதிர்கொள்ளச் சென்றார். இருவருக்கும் இடையில் நடைபெற்ற போரில், பயந்தவன் போல் மாயம் காட்டிய கண்ணன், முசுகுந்தச் சக்கரவர்த்தி உறங்கிக் கொண்டிருந்த குகைக்குள் சென்று மறைந்துகொண்டார். அவரைத் துரத்தி வந்த அசுரன், இருட்டில் தெரியாமல் முசுகுந்தச் சக்கரவர்த்தியை கண்ணன் என்று நினைத்துக் காலால் உதைத்தான். உறக்கம் கலைந்து எழுந்த முசுகுந்தச் சக்கரவர்த்தியின் பார்வை பட்டு, அசுரன் எரிந்து சாம்பலாகிவிட்டான்.

பின்னர் கண்ணன் முசுகுந்தச் சக்கரவர்த்திக்குத் தன் சுயரூபம் காட்டியதுடன், அவர் கேட்டுக்கொண்டபடியே மோட்சமும் அருளினார். அவரை ஒரு தாமரை மலராக மாற்றித் தன் கரத்தில் வைத்துக்கொண்டார்.

மனிதனுக்குத் தூக்கம் என்பது வரம்... அது மட்டுமல்ல தூக்கம் என்பது அத்தியாவசியத் தேவையும்கூட. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகப் போனால், சோம்பல் என்ற பேய் அவனைப் பிடிக்கும். 

சரியான அளவிலான தூக்கம் ஒரு மனிதன் இழந்த சக்தியை எப்படி மீட்டுத் தருகிறதோ, அதேபோல், அளவுக்கு அதிகமான தூக்கம் வெறும் சோம்பலையே ஏற்படுத்துகிறது. சோம்பலின் விளைவாக ஒருவரின் செயல்திறன் குறைந்து, சேமித்த ஆற்றல்கள் அனைத்தையும் போக்கடிப்பதுடன், வெற்றியையும் திசை திருப்பிவிடுகிறது.

மருத்துவ ரீதியாகப் பார்த்தாலும், அடர்ந்த இருட்டில் நாம் அளவாகத் தூங்கும்போது நம் உடலில் சுரக்கும் மெலடோனின், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதுடன், ஜீரண மண்டலத்தைச் சரியாக இயக்கவும், கொழுப்பை நீக்கவும் உதவி புரிகிறது. அதே தருணத்தில் அளவுக்கு அதிகமான தூக்கம் சோம்பலைத் தருவதுடன், உடற்பருமன், இருதய நோய், சர்க்கரை நோய் போன்ற வளர்சிதை நோய்களுக்கு (Metabolic Syndrome) வழி வகுக்கிறது. 

முன்னிரவில் உறங்கி, அதிகாலையின் விழித்தெழுவதுதான் உறக்கத்துக்கான நியதி. எனவேதான், அதிகாலை நேரத்தில் உறங்கும் தன் தோழியை, 'இன்னம் உறங்குதியோ?' என்று கேட்கிறாள் கோதை. 'இன்னம்' என்ற ஒரு வார்த்தையில், அதன் அழுத்தத்தில் ஒரு வாழ்க்கை முறையை மிக அழகாக எடுத்துரைக்கிறாள் கோதை. 

பரந்தாமனைப் பாடக் கற்றுக்கொடுக்கும்போதே, நல்ல பழக்க வழக்கங்களையும் சேர்த்தே கற்றுக்கொடுக்கிறாள் கோதை. 

ஆக, இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்று நீண்ட நேரம் உறங்காமல், அளவோடு உறங்கி, அதிகாலையில் எழுந்து நாராயணனைத் தரிசித்து, நலமோடும் வளமோடும் வாழ பதினைந்தாம் நாளில் தன் தோழியை அழைக்கிறாள் கோதை.


 

அடுத்த கட்டுரைக்கு