Published:Updated:

காக்கும் இறையருளின் கருணை என்றும் புதிது - புத்தாண்டை இறைவழிபாட்டோடு தொடங்குவோம்!

காக்கும் இறையருளின் கருணை என்றும் புதிது - புத்தாண்டை இறைவழிபாட்டோடு தொடங்குவோம்!
காக்கும் இறையருளின் கருணை என்றும் புதிது - புத்தாண்டை இறைவழிபாட்டோடு தொடங்குவோம்!

காக்கும் இறையருளின் கருணை என்றும் புதிது - புத்தாண்டை இறைவழிபாட்டோடு தொடங்குவோம்!

ன்று  புத்தாண்டு பிறக்கிறது. அதுவும் நரசிம்ம பெருமானுக்கு உகந்த சுவாதி நட்சத்திரத்திலும் ஏகாதசி திதியிலும் சிறப்பாகப் பிறக்கிறது. எல்லா ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். நள்ளிரவு முதலே பக்தர்கள் கோயில்களுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து, இறையருளுடன் புத்தாண்டைத் தொடங்குவார்கள். ஆனால், இதையும் ஒரு சிலர் குறையாகக் கூறுவது உண்டு.

அது என்ன, புத்தாண்டு தினத்தில் மட்டும் பக்தி?  இந்த நாளில் மட்டும் அப்படி என்ன விசேஷம்?  எல்லா நாளும் ஒரே நாள்தானே... என்று தர்க்கம் செய்பவர்களும் உண்டு. எதையும் எதிர்மறையாகவே சிந்தித்துப் பழகிவிட்ட வர்களுக்கு எதிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை. ஒரு நாளின் கொண்டாட்டத்தில் எல்லாம் மாறிவிடுமா என்பதுதான் அவர்களின் கேள்வி. 

ஒருவர் தனது பிறந்த நாள், திருமண நாள் என தன் வாழ்நாளின் முக்கியமான நாள்களை நினைக்க நினைக்க எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படி நல்ல நாள் என்று ஒருவர் நினைக்கும் போதே அவர் மனதில் புத்தொளியும் நம்பிக்கையும் வேர்பிடிக்கிறது. அகத்தின் அழகு முகத்தில். காணும் யாரும் என்ன விசேஷம் என்று விசாரிக்கும் அளவுக்கு அது வெட்டவெளிச்சமாகிவிடும். ஒருவர் மனதின் சிந்தனையே அப்படி ஒரு பேரொளியை ஏற்படுத்த முடியுமென்றால் ஒட்டுமொத்த மக்கள் கூட்டமே நல்ல நாள் என்று நம்பும் ஒரு நாளில் உருவாகும் ஆக்கப்பூர்வமான விசை எவ்வளவு பெரிதாக இருக்கும்?! அதுவும் சாதி, மத, தேச எல்லைகளைக்கடந்து ஒட்டுமொத்த மனித இனமே ஒரு நாளில் மகிழும்போது, அதில் நம் பங்கு இருக்கவேண்டாமா? உலகெங்கும் ஆக்கவிசை எண்ணங்களின் வழி பகிரப்படும்போது அதைப் பெற்றுக்கொள்ள வேண்டாமா?

இன்று எல்லா ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். திருப்பதியோ திருவண்ணாமலையோ கேட்கவே வேண்டாம். கூட்டம் குவிந்திருக்கும். இந்த ஒரு நாள் பக்தி போதுமா என்று கேட்டால், போதாதுதான். ஆனால், அந்த ஒரு நாளில்கூட பக்தி செய்யாது, மனதைப் பலவழிகளில் அலைபாய விடுவதைவிட, அந்த ஒரு நாளிலாவது பக்தி செய்வது புண்ணியம் தானே. இறைவன், நம்மிடம் கேட்பதெல்லாம் ஒரு கணம் அவனை நோக்கிய ஓர் அன்புப் பார்வையைத்தான். ஒரு வில்வ இலையிலும் ஒரு துளசிதளத்திலும் மகிழ்ந்துவிடும் பரம்பொருள் அவன் என்னும்போது, அவனைக் காணக் காத்திருக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சாத்தியம் மட்டுமல்ல, சத்தியமும்கூட!

நாள் தெரியாது, நட்சத்திரமும் தெரியாது. கரிய இருள். அந்த இரவில் வனத்தில் பயணிக்கப் பயந்து மரமேறி அமர்ந்து உறங்கிவிடாமல் இருக்க ஒவ்வோர் இலையாகப் பறித்துப் போட்டான் ஒரு வேடுவன். தான் செய்வதன் காரணம் அவனுக்குத் தெரியாமலே இருந்தாலும்,  அவனுக்கும் இறைவன் பேரருள் புரிந்தான். அறியாமல் செய்யும் வினைக்கே அத்தனை பெரிய பலன் கிட்டும் போது, இறைவன் படைத்திருக்கும் இந்த நாள் நல்ல நாள் என்று உணர்ந்து அந்த நாளில் அவன் நாமத்தைச் சொல்லவும் அவனைத் தரிசிக்கவும் வேண்டும் என்று நினைத்து அவன் ஆலயத்திற்கு வந்து சேரும் பக்தர்கள், அவனிடம் பெறுவது நிச்சயம் நல்லவையாகத்தானே இருக்க முடியும்?!

இந்த ஆண்டில் இரண்டு அனுமத் ஜயந்திகள். ஆண்டின் தொடக்கமான 5-ம் தேதி அனுமத் ஜயந்தி வருகிறது. மற்றொன்று டிசம்பர் 25 -ம் தேதி. அனுமன் நம் மனதை வலுப்படுத்தும் தெய்வம்.

புத்திர்-பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்-படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத் ||

இதற்குப் பொருள் கூறும் மகாபெரியவா, 'அனுமனைத் தொழுதுகொண்டால் ஒன்றல்ல, புத்தி, பலம், புகழ், தைரியம், அபயத்வம், ஆரோக்கியம், வாக்குவன்மை ஆகிய ஏழும் கிடைக்கும் என்று விளக்கம் அளிக்கிறார். 'சொல்லின் செல்வன்' என்றும் 'சிரஞ்சீவி' என்றும் போற்றப்பெறும் அனுமன் ஜயந்தி இந்த வருடம் இரண்டு முறை வருவதால், இந்த ஆண்டு ராமபக்த அனுமனின் பேரருளால் அனைத்து வளங்களையும் நம் வாழ்வில் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி!

எனவே, புத்தாண்டு பற்றிய சர்ச்சைகளில் ஈடுபடாமல், வருடத்தின் தொடக்க நாளான இன்று ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபட்டு, அவன் அருளுடன் புத்தாண்டில் பல சாதனைகளை நிகழ்த்தலாமே!

அடுத்த கட்டுரைக்கு