Published:Updated:

``எங்க ஊரு பொங்கச் சீர்...'' விவரிக்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை.

``பொங்கல் சமைக்க 1 கிலோ புது பச்சரிசி,  அதுக்குத் தேவையான வெல்லம், நெய், முந்திரி, கிஸ்மிஸ் பழம்... அப்புறம் பொங்க வைக்கக் கொடுக்கிற அரிசிக்குத் தக்கன வெண்கலப் பாத்திரம், அதை மூடறதுக்குத் தட்டு, கரண்டி, அரிசிக் களைய ஒரு எவர்சில்வர் பாத்திரம்... இதோட ஒரு கட்டுக் கரும்பு, ஒரு  வாழைத்தார், பூ, பழம். வெத்தலைப் பாக்குனு பொங்கல் வைக்கிறதுக்கு மட்டுமே இவ்வளவு சீர் வந்து இறங்கும்.''

``எங்க ஊரு பொங்கச் சீர்...'' விவரிக்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை.
``எங்க ஊரு பொங்கச் சீர்...'' விவரிக்கிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிமேகலை.

`பொங்கச் சீர்...' பொங்கலையொட்டிய நாள்களில் கிராமங்களில் எல்லோராலும் உச்சரிக்கப்படுகிற சொல் இது. `பொங்கல் சீர்'  தான் மருவி பொங்கச் சீராகத்  தற்போது வழக்கில் இருக்கிறது.  பெண்ணுக்குத் திருமணம் செய்துகொடுத்தவுடன் வருகிற தலை தீபாவளி எப்படி ஸ்பெஷலோ, அதேபோல தமிழகத்தின் பல பகுதிகளில் திருமணம் முடித்தவுடன் வருகிற தலைப் பொங்கலும் ரொம்பவே ஸ்பெஷல். பெண்ணைப் பெற்றவர்கள் பொங்கல் வைப்பதற்குப் பாத்திரம், பண்டங்களுடன் பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னதாகவே சம்பந்தி வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள். `பொங்கச் சீர்' வழக்கம் பற்றித் தெரிந்துகொள்ள, அருப்புக்கோட்டையை அடுத்த சென்னமரெட்டிப்பட்டியைச் சேர்ந்த மணிமேகலை செந்தில்குமாரிடம் பேசினோம். 

``எனக்குக் கல்யாணம் முடிஞ்சு 4 வருசமாயிடுச்சு. எனக்கு நவம்பரில் கல்யாணம் நடந்ததால, ரெண்டு மாசத்துலேயே தலைப் பொங்கல் வந்துடுச்சு. கல்யாணமான புதுசுங்கிறதால், பக்கத்தூரில் இருக்கிற என் அவ்வா(அம்மாவைப் பெற்றப் பாட்டி), சென்னையில் இருக்கிற என் அம்மா, அப்பான்னு எல்லோரும் எனக்குப் பொங்கச் சீர் கொடுக்க ஊருக்கு வந்திருந்தாங்க. அந்த நாளை இப்ப நினைச்சாலும் எனக்கு சந்தோஷத்துல றெக்கை முளைச்சிடும்'' என்று முகமெல்லாம் பூரிக்க, பேச ஆரம்பித்தார் மணிமேகலை. 

பொங்கல் சீர் என்றால் பச்சரிசியும், வெல்லமும், அதை வைக்கப் புதுப் பானையும் தருவார்கள் என்பது மட்டுமே அறிந்திருந்த நமக்கு, பொங்கச் சீராகப் பெண் வீட்டினர் தருகிற லிஸ்ட்டை மணிமேகலை அடுக்க, நமக்கு வியப்பில் புருவங்கள் உயர்ந்துவிட்டன. 

``பொங்கல் சமைக்க 1 கிலோ புது பச்சரிசி,  அதுக்குத் தேவையான வெல்லம், நெய், முந்திரி, கிஸ்மிஸ் பழம்... அப்புறம் பொங்க வைக்க கொடுக்கிற அரிசிக்குத் தக்கன வெண்கலப் பாத்திரம், அதை மூடறதுக்குத் தட்டு, கரண்டி, அரிசிக் களைய ஒரு எவர்சில்வர் பாத்திரம்... இதோட ஒரு கட்டுக் கரும்பு, ஒரு  வாழைத்தார், பூ, பழம். வெத்தலைப் பாக்குனு பொங்கல் வைக்கிறதுக்கு மட்டுமே இவ்வளவு சீர் வந்து இறங்கும். இதைத் தவிர, மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் புதுத் துணி வாங்கித் தருவாங்க. சில வீடுகளில் புதுத் துணிக்குப் பதிலா, வெத்தலை பாக்கு மேலே பணம் வைச்சு தந்துடுவாங்க'' என்றவர், பொங்கல் அன்னிக்கு வைக்கிற விருந்துப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 

``பொங்கச் சீருங்கிறது பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் வைக்கிறது. இதைத் தவிர, என் அவ்வா எனக்கு, ஒரு மாசத்துக்குத் தேவையான நெல்லரிசி, பருப்புல ஆரம்பிச்சு மிளகு, சீரகம்னு எல்லா மளிகைச் சாமான்களையும் சீராகக் கொடுத்தாங்க. அப்புறம் அவ்வா தோட்டத்துல விளைஞ்ச  வெண்டை, சீனி அவரைன்னு விதவிதமான காய்கறிங்க... எங்க ஊர்ல கிழங்கு வகையெல்லாம் விளையாதுங்கிறதால உருளை, சேனை, சேப்பங்கிழங்குன்னு கடையில் வாங்கிட்டு வந்திருந்தாங்க அவ்வா. அன்னிக்கு என் புகுந்த ஊருல என் வீட்டுக்கு அக்கம் பக்கத்துல இருந்தவங்க, சொந்தக்காரங்க எல்லோருக்கும் அவ்வா கொண்டு வந்த நெல்லரிசியில் சோறாக்கி, பருப்புல சாறு வைச்சு, காய்கறிகள் வெஞ்சனம் செய்து விருந்து வைச்சோம். எங்க வீடுகளில் இதுதான் முறை'' என்கிற மணிமேகலையின் அத்தைக்கு (மாமியார்) வயது 50 ஐ கடந்தும், இந்த வருடம் வரை, அதாவது, வருடந்தோறும் அவர் பிறந்த வீட்டிலிருந்து `பொங்கச் சீர்' வருகிறதாம். 

``ரெண்டு, மூணு தலைமுறை முன்னாடி வரைக்கும் எங்க ஊரில் பொங்கச் சீருங்கிறது இவ்வளவு கிராண்டா இருந்ததில்லைன்னு என் அவ்வா சொல்லிக் கேட்டிருக்கேன். அப்ப அருப்புக்கோட்டைக்குள்ளேயே பொண்ணுக் கொடுத்து, பொண்ணெடுப்பாங்களாம்.  அப்புறம் தெக்குச் சீமையில் பொண்ணெடுத்து, கொடுக்க ஆரம்பிச்சதும்தான் இந்தப் பழக்கம் வந்துச்சுன்னு சொல்வாங்க. அங்கெல்லாம் வெண்கலப் பொங்கல் பானை, எவர்சில்வர் பொங்கல் பானைன்னு ரெண்டு பொங்கல் பானை தருவாங்க. ரெட்டை பொங்கச் சீர்னு அதைச் சொல்லுவாங்க. எங்க அருப்புக்கோட்டையை ஒட்டின ஊர்களிலும் இந்த ரெட்டைச் சீர் மெள்ள மெள்ள பரவிட்டு வருது. எப்படி இருந்தாலும், அம்மா வீட்டிலிருந்து வர்ற பொங்கச் சீரைப் பொறுத்துதான் புகுந்த ஊரில் நமக்கு மரியாதை கிடைக்கும்கிறதுதான் யதார்த்தமான உண்மை'' என்று முடித்தார் மணிமேகலை.