Published:Updated:

`காடு,கரை செழிக்கணும்...ஆடு மாடு சேரணும் அழகரே!' - வாழைப்பழங்களைச் சூறைவிட்டு விநோத வழிபாடு

`காடு,கரை செழிக்கணும்...ஆடு மாடு சேரணும் அழகரே!' - வாழைப்பழங்களைச் சூறைவிட்டு விநோத வழிபாடு
`காடு,கரை செழிக்கணும்...ஆடு மாடு சேரணும் அழகரே!' - வாழைப்பழங்களைச் சூறைவிட்டு விநோத வழிபாடு

கடவுளை வழிபடுவதில்தான் எத்தனை முறைகள். ஒவ்வொரு தெய்வத்துக்கும், ஒவ்வொரு விதமாகப் படையல், வழிபாடுகள் நடக்கின்றன. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஒரு கிராமத்தில் வண்டி வண்டியாக வாழைப்பழத்தைச் சூறையிட்டு வழிபடுகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியத்தில் இருக்கிறது சேவுகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பிழைப்புக்காகப் பலரும் திருப்பூர், சென்னை, வெளிநாடு எனப் பல இடங்களில் இருக்கிறார்கள். ஆனால், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தை மாதம் பிறந்ததும் அனைவரும் இந்தக் கிராமத்துக்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள். உற்றார், உறவினருடன் மகிழ்ச்சியாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

தை மாதம் 3-ம் தேதி, இங்குள்ள சோலைமலை அழகர் கோயிலில் விழா எடுக்கிறார்கள். தங்கள் கிராமத்தைக் காக்கும் அழகரை உள்ளம் உருக வழிபடுகிறார்கள். விவசாயம் செழிக்க வேண்டும்..தொழில் சிறக்க வேண்டும். ஆடு மாடு பட்டி நிறைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் அழகரை பிரார்த்தனை செய்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்வாக அழகருக்குப் படைத்த வாழைப்பழங்களை சூறைவிடுகிறார்கள். ஊரில் இருக்கும் அனைவரும் தங்கள் சக்திக்கு ஏற்ப வாழைப்பழங்களைக் காணிக்கையாக அளிக்கிறார்கள்.

ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து, கோயிலில் வைத்து அர்ச்சனை செய்கிறார்கள். அதன் பிறகு அந்தப் பழங்களை தூக்கிச் சூறைவிடுகிறார்கள். ஆயிரக்கணக்கான பழங்கள் இப்படிச் சூறைவிடப்படுகின்றன. இந்தப் பழங்களை பிரசாதமாகக் கருதி பெண்கள் முந்தானை ஏந்திப் பிடிக்கிறார்கள். பல ஆண்டுகளாக இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது. இதில், 50,000 க்கும் மேற்பட்ட வாழைப்பழங்கள் சூறைவிடப்பட்டன.