Published:Updated:

250 கி.மீ சாலை வசதி, 9 மேம்பாலங்கள், 1 லட்சம் கழிப்பறைகள்... ரூ.4500 கோடியில் அர்த்த கும்பமேளா ஏற்பாடுகள்! #VikatanInfographics

250 கி.மீ சாலை வசதி, 9 மேம்பாலங்கள், 1 லட்சம் கழிப்பறைகள்... ரூ.4500 கோடியில் அர்த்த கும்பமேளா ஏற்பாடுகள்! #VikatanInfographics
News
250 கி.மீ சாலை வசதி, 9 மேம்பாலங்கள், 1 லட்சம் கழிப்பறைகள்... ரூ.4500 கோடியில் அர்த்த கும்பமேளா ஏற்பாடுகள்! #VikatanInfographics

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புனித நிகழ்வு மகா கும்பமேளா. பிரயாகை, நாசிக், உஜ்ஜைனி மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்தக் கும்பமேளாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை.

ம் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புனித நிகழ்வு மகா கும்பமேளா. பிரயாகை, நாசிக், உஜ்ஜைனி மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் நடைபெறும் இந்தக் கும்பமேளாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. சாதுக்கள், சந்நியாசிகள், மகான்கள், ஆன்மிக அருளாளர்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு புனித நீராடுவர்.

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வெளிவந்த அமுதக் கலசத்தை அசுரர்களுக்குக் கிடைக்காவண்ணம் செய்ய, மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களின் கவனத்தை திசை திருப்பினார். அந்த நேரத்தில் தேவகுரு பிரஜாபதி அமுதக் கலசத்தை அசுரர்கள் கையில் கிடைக்காதவாறு  எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார் (மகாவிஷ்ணுவே எடுத்துச் சென்றதாகவும் சொல்லப்படுவதுண்டு).

அப்போது அமுதம் இருந்த கலசத்திலிருந்து சில துளிகள் பிரயாகை, நாசிக், உஜ்ஜைனி மற்றும் கும்பகோணம் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாகவும் அந்த இடங்களில் குறித்த நாள்களில் அமுதம் பொங்குவதாகவும் அப்போது அதில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் நம்பப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வரலாற்றில் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசன் ஹர்ஷவர்த்தன் காலத்தில் மகா கும்பமேளாக்கள் நடைபெற்ற பதிவுகள் காணப்படுகின்றன. சீனப் பயணியான யுவான் சுவாங் தனது நூல்களில் கும்பமேளாவின் கம்பீரம் குறித்து எழுதியுள்ளார். ஆதி சங்கரரும் கும்பமேளா மற்றும் அர்த்த கும்ப மேளா குறித்துப் பதிவு செய்துள்ளார்.  

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வது மகா கும்பமேளா. பொதுவாக கும்பமேளா குருபகவானின் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது. குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அப்படி அவர் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்யும் ஆண்டில் பிரயாகையிலும் (அலகாபாத்) , சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் போது நாசிக்கிலும் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் போது உஜ்ஜைனியிலும், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது கும்பகோணத்திலும் மகா கும்பமேளா கொண்டாடப்படும். இந்த நான்கு இடங்களில் கும்பகோணம் மட்டுமே குளம். மற்ற இடங்கள் நதிகள். 

மற்ற மூன்று இடங்களை விட பிரயாகை மிகவும் சிறப்புப் பெற்றது. காரணம் இங்கு மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளோடு கண்களுக்குப் புலப்படாத சரஸ்வதி நதியும் இங்கே ஓடிவந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 

கங்கை நதி தோன்றிய கதை ஒன்று புராணங்களில் காணப்படுகிறது. ஒரு முறை பார்வதி தேவி விளையாட்டாகச் சிவபெருமானின் கண்களை மூடினார். பிரபஞ்சத்தின் ஒளியாக விளங்கும் இறைவனின் கண்களை தேவி மறைத்ததால் இந்தப் பிரபஞ்சமே இருண்டது. தன் பிழை உணர்ந்து தேவி கைகளை விலக்கிக்கொண்டாள். அதன் பின் அவள் கை விரல்களில் இருந்து நீர் பிரவாகமெடுத்து பாய்ந்தது. அந்நீரின் பிரவாகத்தை யாராலும் தடுக்க முடியவில்லை. பிரபஞ்சமே பிரளயத்தில் மூழ்குவது போன்ற வெள்ளம் உருவானது. உயிர்கள் எல்லாம் சிவபெருமானை அழைத்து முறையிடவே அவர் அந்த வெள்ளத்தைத் தன் தலையில் தாங்கிக்கொண்டார். அதுவே கங்கை எனப்பட்டது.

சிவபெருமானின் தலையில் இருந்த பிரவாகம் பூமிக்கு வந்ததற்கு கௌதம முனிவரும் பகீரதனும்  காரணம். கௌதம முனிவர்மேல் பொறாமை கொண்ட பிற முனிவர்கள் அவருக்கு கோஹத்தி சாபம் ஏற்பட்டதாகச் சொல்லி அவர் கங்கையில் நீராடினால்தான் அவரது பாவம் விலகும் என்று கூறினர். கௌதமரும் மனம் தளராமல் சிவபெருமானை நோக்கித் தவமிருந்தார். அவர் தவத்தின் பலனாகச் சிவன் கங்கையைப் பூமிக்கு அனுப்பி அருளினார். அதனாலேயே கங்கைக்கு கௌதமி என்ற பெயரும் ஏற்பட்டது.

சூரியகுலத்தின் மன்னனான திலிபனின் மகன் பகீரதன். அவனது முன்னோர்கள் சாபத்தின் காரணமாக இறந்த செய்தியை அறிந்து வருந்தினான். அவர்கள் நற்கதி அடைய வழி என்ன என்று வசிட்ட முனிவரைக் கேட்டான். அதற்கு அவர் கங்கை நதி அவர்களின் அஸ்தியின் மேல் பட, அவர்கள் நற்கதி அடைவார்கள் என்று கூறினார். பகீரதன் அவர் வழிகாட்டுதலின்படி கடுந் தவம் செய்து சிவனின் அருளால் கங்கையைக் கொணர்ந்தான். அதனால் கங்கைக்குப் பாகீரதி என்ற பெயரும் உண்டு.

யம தர்ம ராஜனின் மகளான யமியே யமுனை நதியாக மாறினாள். கடலில் நேரடியாகக் கலக்காத நதி யமுனை. யமுனை நதி பிரயாகையில் கங்கையோடு சங்கமிக்கிறது.

இத்தகைய பெருமைகள் கொண்ட நதிகளின் சங்கமத்தில் நீராடுவது மிகுந்த புண்ணிய பலனைத் தரும் என்று நம்பப்படுகின்றது. அதிலும் கும்பமேளா நடைபெறும் நாள்களில் புனித நீராடுவது சிறப்புக்குரியது. 2013-ம் ஆண்டு அலகாபாத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. அதிலிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு அர்த்த கும்பமேளா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை யுனெஸ்கோ உலகக் கலாசாரப் பண்பாட்டு நிகழ்வாக அங்கீகரித்திருக்கிறது. எனவே உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் கலந்துகொள்கின்றனர்.

சுமார் 1 கோடியே 25 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வின் முதல் நாளான மகரசங்கராந்தி தினத்தன்று 1 கோடியே 5 லட்சம் பேர் புனித நீராடினர். எனவே எதிர்பார்ப்பை விட மிக அதிக அளவில் மக்கள் மீதமிருக்கும் நாள்களில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது. இதற்காக உத்திரபிரதேச மாநில அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற மகாகும்ப மேளாவை விட அதிக அளவில் பணம் ஒதுக்கீடு செய்து நிகழ்வுகளை மாநில அரசு ஒழுங்கு படுத்தியுள்ளது.

மாபெரும் தற்காலிக நகரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தற்காலிக நகரில் 250 கி.மீ சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

பக்தர்களின் கூட்டம் காரணமாக சுகாதாரக் குறைபாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 1,22,000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல ஆயிரம் கழிப்பிடங்கள் நிகழ்வின் முதல் நாளான மகரசங்கராந்தி தினத்தன்று, எதிர்பார்த்ததை விட அதிகமான பக்தர்களின் வருகையால் சரிவர இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவற்றை மீண்டும் இயக்கும் முயற்சியில் மாநகர ஊழியர்கள் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள். 

பக்தர்களுக்குப் பாதுகாப்புக் குறைபாடு ஏற்படாத வண்ணம் காக்க 40,000 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் சிறப்பு பூத்கள் அமைத்துக் கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக நீராடும் துறைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நீராடும் துறைகளில் பாதுகாப்பான பகுதிகளில் நின்று குளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் குறிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வளையத்தை தாண்டிச் சென்று நீராடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். நீர் நிலைகளுக்குள் 3 'ஜல்' காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றது. மொத்தம் 9 தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய செயல்பட்டு வருகின்றன. 

வரும் மார்ச் 4-ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்வில் தற்போது இருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எனவே அவற்றைச் சமாளிப்பது நிச்சயம் மாநில அரசுக்கு ஒரு சவாலாகவே அமையும்.