Published:Updated:

இன்று தை அமாவாசை, பூம்புகாரில் ஏராளமானோர் புனித நீராடல்!

இன்று தை அமாவாசை, பூம்புகாரில் ஏராளமானோர் புனித நீராடல்!
இன்று தை அமாவாசை, பூம்புகாரில் ஏராளமானோர் புனித நீராடல்!

நாகை மாவட்டம், பூம்புகாரில் உள்ள காவிரி சங்கமத் துறையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு தர்ப்பண பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்களின் மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்துக் கடலில் புனித நீராடி வருகின்றனர்.

பூம்புகார், கடலும், காவிரி ஆறும் சங்கமிக்கும் துறை. எனவே, இது மிகவும் புனிதமான இடமாகக் கருதப்படுவதால் ஆண்டுதோறும் ஆடி, தை அமாவாசை தினங்களில் இங்கு விசேஷ தர்ப்பணம் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை தினமான இன்று அதிகாலை 4 மணி முதலே தர்ப்பணம் செய்யப் பொதுமக்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், இந்த அமாவாசை தினத்தில் பித்ரு பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கும் என்பது ஐதீகம்.

தை அமாவாசையின் சிறப்புகள் மற்றும் தர்ப்பணம் செய்யும் முறைகளைப் பற்றி காவிரி சங்கமத் துறையில் தர்ப்பண பூஜைகள் செய்பவரிடம் கேட்ட போது, 

``பித்ருக்கள் ஆன்மா சாந்தியடைய அவர்களுக்கு ஆண்டுதோறும் திதி கொடுப்பது வழக்கம். இவை தவிர்த்து அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்வதும் அவசியம். இன்றைய நாளில் முதலில் நதிகள் அல்லது சமுத்திரத்தில் புனித நீராடி ஈர ஆடையுடன்  மறைந்த முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பின்னர் அரிசி மாவினால் செய்யப்பட்ட பிண்டம் சமர்ப்பித்து  பூஜைகள் முடித்து எள், தர்ப்பை, பிண்டம் முதலியவற்றை நீர் ஆதாரத்தில் விட்டு வணங்க வேண்டும். வசதி உள்ளவர்கள் ஆதரவற்றவர்களுக்கு வஸ்திரம், உணவு போன்றவற்றைத் தானம் செய்வது விசேஷம். இந்த நாளில் பசுவுக்கு ஏதேனும் ஒரு கீரை அளிப்பதும் புண்ணிய பலனைக் கொடுக்கும் " என்றார்.

இன்று நாள் முழுதும் தர்ப்பண பூஜைகள் செய்யலாம் என்பதால், காவிரி சங்கமத் துறையில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் நூற்றுக்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.