Published:Updated:

பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!

பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!
பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா - வண்டி கோமாளி நிகழ்ச்சி!

ழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள 39 உப கோயில்களுள் பழநி மாரியம்மன் கோயிலும் ஒன்று. இது கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மாசித் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மாசி விழா கடந்த 1 - ம் தேதி முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது. கம்பம் சாட்டுதல்     5 - ம் தேதியும்‌ முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் நிகழ்ச்சி கடந்த 12 - ம் தேதியும் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு மற்றும் தீச்சட்டி எடுத்து வேண்டுதல்களை நிறைவேற்றி அம்மனை வழிபட்டனர். உற்சவர் திருக்கல்யாணம் நேற்றிரவு 8.30 மணிக்கு நடந்தது. திருக்கல்யாணத்தையொட்டி அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு திருக்கம்பம் சமேத மங்கல நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் தலைமை குருக்கள் அமிர்தலிங்கம் மாங்கல்யத்தை அணிவித்தார். நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கோயில் மேலாளர் உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. தேரோட்டத்தைத் தொடர்ந்து பக்தர்கள் வேண்டுதலின் பேரில் பல்வேறு வேடம் அணிந்து தெருக்கள் தோறும் சுற்றி வரும் `வண்டி கோமாளி' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 21 - ம் தேதி இரவு 10 மணிக்குக் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெற உள்ளது.