Published:Updated:

`கன்னிமாரே எங்க மேல ஆசப்பட்டு மாங்கல்யம் சூடிக்குவாங்க’ - உற்சாக இருளர் திருவிழா! #Video

மாசி மாதம், பௌர்ணமி நாள் நெருங்கினாலே இருளர் பழங்குடிகள் அனைவரும் எங்கிருந்தாலும் மாமல்லபுரத்தில் குவியத் தொடங்கிவிடுவார்கள். கடற்கரையில் சேலை மற்றும் வேட்டிகளால் கூடாரம் அமைத்துத் தங்குவர்.

`கன்னிமாரே எங்க மேல ஆசப்பட்டு மாங்கல்யம் சூடிக்குவாங்க’ - உற்சாக இருளர் திருவிழா! #Video
`கன்னிமாரே எங்க மேல ஆசப்பட்டு மாங்கல்யம் சூடிக்குவாங்க’ - உற்சாக இருளர் திருவிழா! #Video

மாசி மாதம், பௌர்ணமி நாள் நெருங்கினாலே இருளர் பழங்குடிகள் அனைவரும் எங்கிருந்தாலும் மாமல்லபுரத்தில் குவியத் தொடங்கிவிடுவார்கள். கடற்கரையில் சேலை மற்றும் வேட்டிகளால் கூடாரம் அமைத்துத் தங்குவர். கோபித்துக்கொண்டு மாமல்லபுரத்துக்கு வந்த தங்களின் குலதெய்வமான கன்னியம்மனைச் சமாதானப்படுத்தி, பூஜை செய்து குறி கேட்டுத் தம்முடன் அழைத்துச் செல்லும் வைபவம் ஒவ்வோர் ஆண்டும் மாசிப் பௌர்ணமியின்போது நடைபெறுகிறது. இந்த வருடம் இருளர் இனப் பழங்குடி மக்களின் கன்னியம்மன் பூஜையை நேரில் காணச் சென்றோம்...

இருளர் பழங்குடிகள் பாடும் கன்னியம்மன் பாட்டு!

மாமல்லபுரம் கடற்கரை முழுவதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தார்கள் இருளர் இனப் பழங்குடி மக்கள். உச்சிக்கு ஏறியிருந்த முழு நிலவின் ஒளி பகல் போன்று வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது. வழக்கத்துக்கு மாறாக ஆவேசத்துடன் காணப்பட்ட கடலைப் பார்த்தபடியே கடற்கரையில் நின்றுகொண்டிருந்தாள் கன்னியம்மன். கைகளில் ஆயுதங்கள், மஞ்சள் கயிறு மற்றும் மலர்களால் ஆன மாலை அணிந்து மஞ்சள் வண்ண உடையில் மிரட்டும் பார்வையில் காட்சியளித்துக் கொண்டிருந்தாள் கன்னியம்மன். 

கன்னியம்மன்தான் இருளர் இனப் பழங்குடி மக்களின் குலதெய்வம். அவளுக்கு அருகிலேயே கையில் வாளோடு காத்தவராயன் நின்றுகொண்டிருந்தான். ஆரியமாலா எனும் பெண்ணின் மீது காதல் கொண்டதால் கழுவேற்றிக் கொல்லப்பட்டுப் பின் கடவுள் வழிபடப்படும் பஞ்சமர் குலத்தைச் சேர்ந்தவன் காத்தவராயன். 

ஒரு அலங்காரம், தாயே நடந்து வாருமம்மா

நீ வாயேன் கன்னியம்மா, நல்ல வார்த்தை சொல்லுங்களேன்...

இந்த ஊரு உலகமே, உன் பாதத்த வணங்குதம்மா

உன் பாதத்த வணங்கினாலும், உன் பேரு நிலைக்கணும்மா..

ஒரு குயிலிருக்கும், மயிலிருக்கும், மஞ்சவெளம் காட்டுக்குள்ள

நீ வாயேன் பொட்டம்மா, நல்ல வார்த்த சொல்லுங்கம்மா...

என்று கன்னியம்மனைப் போற்றியும், கன்னியம்மனின் அருள் பெறவும் பலர் ஒன்று சேர்ந்து இசை இசைத்துப் பாட்டு பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பாடிய பாடலைக் கேட்டுச் சிலர் சாமி வந்து ஆடிக்கொண்டிருக்க, சிலரோ பக்திமிகுதியோடு அம்மனை வணங்கிக் கொண்டிருந்தார்கள். கன்னியம்மனிடம் குறி கேட்காமல் அவர்கள் எந்தவொரு செயலையும் செய்வதில்லை. ஒவ்வொரு வருடமும் மாமல்லபுரக் கடற்கரையில் கன்னியம்மனின் காலடியில்தான் திருமணம், திருமணம் நிச்சயித்தல், முடி எடுத்தல், காது குத்துதல் போன்ற மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் செய்கிறார்கள். 

ஆதிகாலத்தில் இருளர் குலத்தில் பிறந்த பெண்தான் கன்னியம்மா. காடுகளில் வாழ்ந்து வேட்டையாடிய காலத்தில் அனைவருக்கும் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்தவள். இறந்தபிறகு அவர்களின் குலதெய்வமாக மாறிப்போனாள். 

இருளர் பழங்குடிகள் நடத்திய கன்னியம்மன் பூஜை!

ஒவ்வொரு வருடமும் மாமல்லபுரத்துக்கு எதற்காக வருகிறார்கள்? கடலில் மூழ்கிக் கன்னியம்மனை ஒவ்வொரு குடும்பமும் வழிபடுவதற்கான காரணத்தைப் பக்திப் பரவசத்துடன் தெரிவித்தார் வல்லரசு...

``எங்க முன்னோர்கள்ளாம் ஒரு காலத்துல மரம் வெட்டி, வேட்டையாடிதான் பொழச்சாங்க. மரங்களும், விலங்குகளும் உசுரு தானே, அதனால எங்களுக்குப் பாவம் அதிகமா சேர்ந்துது. இந்த நேரத்துல முன்னோர் ஒருத்தரு கஷ்டப்பட்டு ஒரு உடும்ப வேட்டையாடுனாரு. வேட்டையாடுனதுக்கு அப்புறமா, வால புடிச்சுதான் தூக்குவோம். அவரு உடும்போட வாலைப் புடிச்சு தூக்குனப்போ, அந்த உடும்புக்குத் திடீர்னு உசுரு வந்துச்சு. உடும்பு கடல் நோக்கி இழுக்குது, இவரு உடும்பு வால புடிச்சி இந்தப் பக்கமா இழுக்குறாரு. இவரு பிடிவாதமா உடும்போட வால விடவே இல்ல. கடைசில உடும்புதான் வெற்றி பெற்றுச்சி. உடும்பு அவர கடலுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போயிடுச்சி. அதுக்கு அப்புறமா அவரு திரும்பி வரவே இல்ல. அவர காப்பாத்தப் போன எங்களோட குல தெய்வமும் திரும்பி வரல. நாங்க வேண்டினதுக்கு அப்புறமா மாசி முழுநிலவு அன்னைக்குதான் கன்னியம்மா திரும்பி வந்தா. திரும்பி வந்தவளை எங்ககூட அழைச்சிகிட்டுப் போறதுக்குதான் ஒவ்வொரு வருசமும் மாசி முழுநிலவு அன்னைக்கு இந்தக் கடற்கரைல கூடுறோம். கன்னியம்மன நெனச்சிக் கடல்ல எறங்கி மூழ்கி எங்க பாவத்தையும் கடல்லையே விட்டுட்டுப் போறோம்” என்றார்.

இரவு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மகிழ்ச்சியோடு திருவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள், கிழக்கு வானம் வெளுக்கத் தொடங்கியதும் கடல் அலை கரையைத் தொடும் இடத்துக்கு வந்து குடும்பம் குடும்பமாகப் பந்தல் அமைத்தார்கள். பந்தலை வேப்பிலையால் நிரப்பி மாவு விளக்கு ஏற்றினர். அதன் பிறகு பந்தலுக்கு முன்பு ஏழு படிகளை அமைத்தார்கள். ஒவ்வொரு படியையும் தண்ணீர் தெளித்து மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி மலர் மாலை அலங்காரம் செய்து தேங்காய் உடைத்து வைத்தனர். 

குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடலுக்குள் மூழ்கி, உடலில் சந்தனம் பூசி, மாலை அணிந்து பக்திப் பரவசத்துடன் ஏழு படிகளைச் சுற்றிலும் நின்றனர். குடும்பத்தில் மூத்தவர்தான் சாமியாடி. அனைத்துப் படிகளிலும் வைக்கப்பட்டிருந்த சூடக் கட்டிகளை ஏற்றியபிறகு கையில் இருந்த தட்டிலும் சூடத்தை ஏற்றித் தலைக்கு மேலே உயர்த்தி, `கன்னியம்மா...'  என்று உரக்க அழைத்தார். அடுத்த கணம் அவருக்குள் கன்னியம்மன் இறங்க, சத்தம் எழுப்பியவர் கையில் வைத்திருந்த சூடத்தட்டைத் தூக்கி எறிந்து ஆவேசத்துடன் சாமியாடத் தொடங்கினார். அடுத்த கணம், அங்கு நின்றுகொண்டிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் சாமி வந்து ஆடத் தொடங்கினார்கள். சாமி வந்தவர்கள் ஆடியபடி முரட்டுத்தனத்துடன் கடலை நோக்கி ஓடத்தொடங்க, அவர் கடலலையைத் தொடும் முன்பே சிலர் பத்திரமாகப் பிடித்துக்கொண்டார்கள். கடலலையைத் தொட்டுவிட்டால் அவர்கள் திரும்பமாட்டார்கள் என்பது தொன் நம்பிக்கை.

அவர்கள், நிதானத்துக்கு வந்த பிறகு குடும்பத்தில் இருக்கும் பெண் தனது தமையனுக்கு மாலை அணிவித்தாள். அதன் பிறகுதான் முடி எடுத்தல், காதணி குத்துதல், திருமணம் நிச்சயித்தல், திருமணம் போன்ற வைபவங்கள் அரங்கேறின. வீட்டிலிருக்கும் கன்னிப் பெண் அந்தப் படிகளுக்கு முன் நின்று குறி கூறத் தொடங்கினாள். அடுத்த ஒரு வருடத்துக்குத் தேவையான ஆரூடத்தை அந்தப் பெண் அப்போது கூறுவாள். திருமணம், வேலை என்று அனைத்தும் கன்னியம்மனின் குறிகேட்டே செய்கிறார்கள். மாமல்லபுரக் கடற்கரையில் கன்னியம்மன் என்ன குறி கூறுகிறாளோ, அது அப்படியே பலிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. 

ஏழு படிகள் அமைத்து நடைபெறும் பூஜை எதற்காக என்று விளக்கினார் ரவிச்சந்திரன்...

``கன்னிமார்கள் மொத்தம் ஏழு பேரு, அக்கா தங்கைகள். அவுங்கள சப்த கன்னிகள்னு சொல்லுவோம். ஏழு பேருக்கும் ஏழு படிக்கட்டு செஞ்சி, சப்த கன்னிகள்ள ஒருத்தவங்கள நாங்க திருமணம் செஞ்சிக்கற வைபவம்தான் இந்த ஏழு படிபூஜை. இதுக்குப் பேரு மாலை, மாங்கல்யம் சூடிக்கிறது. மொத்தம் 18 வகையான தாலி இருக்குது. நாங்க கட்டுறது பொட்டு தாலி. இருளர்கள் எங்க இருந்தாலும் ஒவ்வொரு வருசமும் மாலை, மாங்கல்யம் சூடிக்க இந்த மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்துடுவோம். நாங்க கடல்ல நீராடிட்டு, படி பூஜைய தொடங்கறப்போ எங்கள எந்தக் கன்னிமாருக்குப் புடிக்குதோ அவுங்க ஏழாவது படிக்கட்டுக்கு வந்து எங்களுக்காகக் காத்திருப்பாங்க. நாங்க மாலை, மாங்கல்யம் எடுத்துகிட்டு வரப்போ அவுங்க எங்கமேல வந்து சாமி ஆடுவாங்க. அப்போ, எங்கூட பிறந்த பெண் பிள்ளைங்க கன்னிமார் எங்கமேல வந்து ஆடுறதுக்கு அனுமதி கொடுத்து எங்களுக்கு மாலை சூடுவாங்க. எங்க இனத்துல பெரும்பாலும் முதல்ல நடக்கற கல்யாணமே கன்னிமார் கூடத்தான் இருக்கும். சிலருக்கு ஐந்து வயசுல மாலை, மாங்கல்யம் சூடல் நடக்கும். சிலருக்குக் கல்யாணம் ஆகி தாத்தா ஆனதுக்கு அப்புறம் கூட நடக்கும். ஒரு வாட்டி கன்னிமார் கூட மாலை மாங்கல்யம் சூடிகிட்டா அதுக்கு அப்புறம் மனசுல நெனச்சப்பல்லாம் கூட வந்து ஆடுவா பாருங்க” என்று நெகிழ்ச்சியுடனும், பக்திப் பரவசத்துடன் தெரிவித்தார். 60 வயதான ரவிச்சந்திரன் 4 வயதிலேயே மாலை, மாங்கல்யம் சூடிக்கொண்டாராம்.

திருவிழா முடிந்து விடிந்ததும் இருளர் இனத்தவர்கள் அனைவரும் தமது கூடாரங்களைப் பிரித்துக்கொண்டு கன்னியம்மன் துணையுடன் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்!