Published:Updated:

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித் தேரோட்டப் பெருவிழா!

கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித் தேரோட்டப் பெருவிழா!
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவாரூர் ஆழித் தேரோட்டப் பெருவிழா!

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில், பங்குனி உத்திர ஆழித் தேரோட்டப் பெருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று தொடங்கியது. 

புகழ்மிக்க தேரோட்டமான திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவுக்கான கொடியேற்றம், இன்று  (22/02/2019) தொடங்கியது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் உள்ள  சிறப்பைப் பெற்ற தலம், திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இங்கு, ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஆழித் தேரோட்டம் நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஆரூரா', 'தியாகேசா ',என்ற கோஷமிட்டுக் கொண்டே தேரை இழுக்க, அன்று முழுவதும் திருவாரூர் மக்கள் வெள்ளமாகத் திரள்வார்கள். 'பிறந்தால் முக்தி தரும்' சிறப்புமிக்க தலம் இது.

காலையில் விநாயகர், சுப்ரமணியர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் ரிஷபப் படம் வரையப்பட்ட கொடி வீதியுலா வந்தது. பின்னர், வன்மீகநாதர் சந்நிதியில் உள்ள 48 அடி உயரம் கொண்ட  பெரிய கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.  மேளதாளங்கள் இசைக்க, வேதமந்திரங்கள்  ஒலிக்க, கொடிமரத்தில்  திருவிழா  தொடங்குவதை அறிவிக்கும் வகையில் ரிஷபக் கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

இதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டவிழா, வரும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது.  ஆழித் தேரோட்ட விழாவைக்  காண பக்த கோடிகளும் பொது மக்களும் ஆவலாக உள்ளனர்